தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி: இறை பணியில் தி.மு.க.,வுக்கு இணையானவர்கள் யாரும் கிடையாது. தி.மு.க., அரசு அமைந்த பிறகு தான், பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
இறை பணி போலவே, ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதிலும் உங்கள் கட்சிக்கு இணை உங்கள் கட்சி தான்!
காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய போது, ஓரிருவர் தான் சபையில் இருந்தனர்; யாரும் கை தட்டி ஆரவாரிக்கவில்லை.
இதில் உங்களுக்கு மகிழ்ச்சியா... நீங்கள் சொல்வதுபடி நடந்திருந்தால், நம் நாட்டுக்குத் தானே அவப்பெயர்!
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: முன்னேறிய ஜாதிகளை, இட ஒதுக்கீடு பெறும் ஜாதிகளாக ஆக்கி, திராவிடத்தால் தான் அந்த ஜாதிகள் முன்னேற்றியது போல 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்வது தான் திராவிட சமூக நீதியின் பித்தலாட்டம்.
திராவிட பித்தலாட்டங்களை புட்டு புட்டு வைக்கிறீர்களே; பாராட்டுகள்!
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு: 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். இவர்களை உடனடியாக நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்காக காவல் துறையில் 'டிஜிட்டல்' போதை மீட்பு மையங்கள் திறக்கப்படுகின்றன.

மாணவர்கள் மீது தான் என்னவொரு அக்கறை... மது போதை மீட்பு மையங்கள் பாணியில் டிஜிட்டல் போதை மீட்பு மையங்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: வறட்டு கவுரவ கொலைகளை தடுப்பதற்கு சமூகம், கலாசாரம் மற்றும் அரசியல் தளங்களில் தொலைநோக்கு பார்வையுடன் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
'உண்மை தான். கவுரவ கொலைகள் எனப்படும் ஆணவ கொலைகள், சமூகத்தின் கேடு என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது!
மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரியின் தாய், 89 வயதில் நான்கு நாட்களுக்கு முன் இறந்தார். சில மாதங்களுக்கு முன் தான் தன் மகனை யெச்சூரி இழந்தார். இந்த சோதனையிலும், அவரின் தாயின் உடல், மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கம்யூ.,க்களுக்கு இளகிய மனம் உள்ளது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE