சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் டில்லி சென்று பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பஞ்சாப் மாநில காங்., தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நிலவியது. இதை சமாதானப்படுத்தும் நோக்கில் சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் பதவியேற்பு விழாவில் அமரீந்தர் கலந்து கொண்டார். ஆனாலும், இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனால், பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அமரீந்தர் சிங் இன்று (செப்.,28) டில்லி சென்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேரில் சந்தித்து பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில காங்., தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்.,சில் சேவையாற்றப் போவதாகவும் சித்து திடீரென அறிவித்துள்ளார். ‛பஞ்சாப்பின் எதிர்காலம், வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் ஒருபோதும் சமரசம் செய்ய விருப்பமில்லை,' எனக் கூறி தன் ராஜினாமா கடிதத்தை காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்கவள்ள பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அமரீந்தர் சிங் கருத்து
இது தொடர்பாக அமரீந்தர் சிங் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது: அவர் நிலையில்லாதவர், பஞ்சாப் மாநிலத்திற்கு பொருத்தமற்றவர் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE