உத்தரகண்ட் மாநில எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்?| Dinamalar

உத்தரகண்ட் மாநில எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்?

Added : செப் 28, 2021
Share
புதுடில்லி:இந்திய - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், அப்பகுதி யில் மூன்று மணி நேரம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே

புதுடில்லி:இந்திய - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பாராஹோட்டி என்ற பகுதிக்குள் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்கள், அப்பகுதி யில் மூன்று மணி நேரம் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.பாங்காங் ஸோ ஏரி பகுதியில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே போர் மூளும் அபாயம் உருவானது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான வீரர்கள், ஆயுதங்கள், போர் விமானங்களை எல்லையில் குவித்தனர். ராணுவ உயர் அதிகாரிகள் அளவில் நடந்த பல சுற்று பேச்சின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள முக்கிய நிலைகளில் இருந்து இருதரப்பும் வீரர்களை திரும்ப பெற ஒப்புக் கொண்டன. கோக்ரா பகுதியிலும் இரு நாட்டு வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர்.

இந்நிலையில் நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பாராஹோட்டி என்ற இடத்திற்குள் கடந்த மாதம் 30ம் தேதி சீன ராணுவத்தினர் 100 குதிரைகளில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு மூன்று மணி நேரம் அவர்கள் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்த நடை பாலம் ஒன்றை அவர்கள் தகர்த்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து நம் ராணுவம் மற்றும் இந்தோ - திபெத் போலீஸ் படை விரைந்ததும், சீன வீரர்கள் அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நடக்கவில்லை என தெரிகிறது.'ஆனால் அரசிடம் இதுபோன்ற தகவல் எதுவும் இல்லை' என, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் எதிர்புறத்தில் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே புதிதாக எட்டு இடங்களில் 'கன்டெய்னர்கள்' வாயிலாக செய்யப்பட்ட நவீன வசிப்பிடங்களை சீன ராணுவம் உருவாக்கி உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X