ஏழு மருத்துவ கல்லுாரிகளில் 850 மாணவர் சேர்க்க அனுமதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழு மருத்துவ கல்லுாரிகளில் 850 மாணவர் சேர்க்க அனுமதி

Updated : செப் 29, 2021 | Added : செப் 28, 2021
Share
சென்னை:''தமிழகத்தில், ஏழு புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நான்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில், மத்திய குழு மறு ஆய்வு நடத்த உள்ளது,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.கலந்தாய்வு கூட்டம்சென்னை எழும்பூரில்உள்ள, தமிழக மருத்துவ சேவை கழகத்தில், தனியார் மருத்துவ
 ஏழு மருத்துவ கல்லுாரிகளில் 850 மாணவர் சேர்க்க அனுமதி

சென்னை:''தமிழகத்தில், ஏழு புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நான்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில், மத்திய குழு மறு ஆய்வு நடத்த உள்ளது,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.


கலந்தாய்வு கூட்டம்

சென்னை எழும்பூரில்உள்ள, தமிழக மருத்துவ சேவை கழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மற்றும்முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2006ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியால், 'வருமுன் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டது. அடுத்து அமைந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, சேலம் வாழப்பாடியில் அத்திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 1,000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லுாரிகளை ஆய்வு செய்த, மத்திய குழுவினர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், இன்னும் கூடுதலான கட்டடங்களை கட்ட அறிவுறுத்தி உள்ளனர். இவற்றில் மட்டும் மறு ஆய்வு நடைபெற உள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்ட மருத்துவ கல்லுாரிகளில், தலா, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


முன்னுரிமை

அதேபோல, நாமக்கல்,திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய, நான்கு மருத்துவ கல்லுாரிகளில், தலா, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தம், 850 இடங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள, நான்கு மாவட்ட மருத்துவ கல்லுாரிகளிலும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

இன்னும், 15 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 11 மருத்துவ கல்லுாரிகளுக்கும் சேர்த்து 1,650 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் பெறப்படும். நிதிநிலை அறிவிப்பில் 4,800 நர்ஸ்களை நியமிப்பதற்கு அறிவித்து உள்ளோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்ஸ்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


பெருமைக்குரிய விஷயம் :டீன் சங்குமணி தகவல்



விருதுநகர் மருத்துவ கல்லுாரி டீன் சங்குமணி கூறியதாவது: 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.சீனிவாசன் தனி கவனம் செலுத்தி பணிகள் விரைவாக முடிக்க காரணமாக இருந்தனர்.

விருதுநகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 22 மருத்துவ துறைகள் உள்ளன. இதில் 142 டாக்டர்கள் உள்ளனர். சிறுநீரக அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, எலும்பு சிகிச்சை, கண் சிகிச்சைகளுக்கு நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் உள்ளனர். அரிதான சிகிச்சைகள் எளிதாக கிடைக்கிறது. இங்கு மாணவர்களுக்கான விடுதிகள், ஆய்வகங்கள், வகுப்பறைகள் பணிகள் முடிந்து விட்டன. ரோடு அமைக்கும் பணிகள் 5000 மரங்கள் நட்டு பசுமை வளாகமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X