முன்னெச்சரிக்கை! டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் வீடு, வீடாக 3,200 பணியாளர்கள் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னெச்சரிக்கை! 'டெங்கு' தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் வீடு, வீடாக 3,200 பணியாளர்கள் ஆய்வு

Added : செப் 29, 2021
Share
சென்னையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர் முழுதும், 3,200 களப்பணியாளர்கள், வீடு வீடாக சோதனை செய்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் கொரோனா தொற்று, ஏற்ற,


சென்னையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகர் முழுதும், 3,200 களப்பணியாளர்கள், வீடு வீடாக சோதனை செய்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் கொரோனா தொற்று, ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இரண்டு மாதங்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. நன்னீரில் வளரும், 'ஏடிஸ்' வகை கொசுவால் ஏற்படும் பாதிப்பே, 'டெங்கு' காய்ச்சல் எனப்படுகிறது. இந்தாண்டில் இதுவரை, 400க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு மாதங்களில் மட்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என்றால், அடுத்த இரண்டு மாதங்களில், நிலைமை மோசமாகும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து, சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த, அனைத்து மண்டல அலுவலர், சுகாதார அதிகாரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, 3,200 மலேரியா பணியாளர்களை வீடு, வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபடவும், கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை: மலேரியா பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள், தங்கள் பகுதிகளில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வுகளில் ஈடுபட வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மலேரியா பணியாளர்கள், வீடுகளில் ஆய்வு செய்யும்போது, 'பிரிஜ்' பின்புறத்தில் உள்ள, தொட்டி, மற்றும் மணி பிளான்ட் போன்ற சிறிய ரக பூச்செடிகளில், கொசு புழுக்கள் உற்பத்தியாகி உள்ளதா அல்லது உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா என, கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  வீடுகளில் கிணறு, மொட்டை மாடி போன்றவற்றிலும் ஆய்வு செய்தல் வேண்டும் அரசு, தனியார் திறந்தவெளி இடங்களில், தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில், 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவருக்கும், டெங்கு பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் பூச்சியியல் வல்லுனர்கள், நீர்நிலைகளில் கொசு புழுக்கள் உருவாகமல் தடுக்கும் வகையில் மருந்துகளை தெளிக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெங்குவை தடுப்பது எப்படி?வீட்டின் மொட்டை மாடி, திறந்தவெளி இடங்களில், தேவையற்ற டயர், பிளாஸ்டிக், தேங்காய் ஓடுகள், டப்பாக்கள் போன்றவற்றின் வாயிலாகவே, டெங்கு பருவகால தொற்றாக மாறியுள்ளது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள், இதுபோன்று திறந்தவெளிகளில் இருக்கும் பொருட்கள் மீது, முட்டையிடும். இந்த முட்டைகள், ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப்புடன் இருக்கும். அதன்மீது, மழை நீர் போன்ற நன்னீர் தேங்கினால், அவை, புழுக்களாக உருவெடுத்து, 'ஏடிஸ்' கொசுவாக மாறும். இதுபோன்று ஓரிரு ஆண்டுகளுக்கு பின், 'ஏடிஸ்' கொசு உருவாகும் போது, அவை இயற்கையாகவே, வைரஸ் தன்மையுடன் இருக்கும். எனவே, இந்த கொசுக்கள் யாரை கடித்தாலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இதைதொடர்ந்து, ஒரு சிலருக்கு டெங்குவுடன், எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், உயிரிழக்கும் ஆபத்தான நிலை ஏற்படும். எனவே, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிப்பதன் வாயிலாக, டெங்கு காய்ச்சலை தடுக்கலாம். 6 விதமான பரிசோதனை அவசியம்!உலகம் முழுதும் கொரோனா தொற்று தீவிரமாக உள்ளதால், காய்ச்சல் என்றவுடன், கொரோனாவாக இருக்கும் என்று அனைவரும் சந்தேகப்படுகின்றனர். அப்படித்தான், ஆந்திரா மாநிலத்தில் பெண் டாக்டர் ஒருவருக்கு காய்ச்சல் பாதித்ததால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடைசி நேரத்தில், டெங்கு பாதிப்பு உறுதியாகி அவர் உயிரிழந்தார்.

இதே நிலை தான், பல்வேறு இடங்களில் நிகழ்கின்றன. 'தீவிர காய்ச்சல் என்றதும், கொரோனா பரிசோதனை மட்டும் செய்யாமல், டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, எலி காய்ச்சல், ஸ்கிரப் டைபாஸ் காய்ச்சல் என, ஆறு காய்ச்சல் பரிசோதனைகள் செய்வது அவசியம். அப்போது தான், பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியும்' என, மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.திருவள்ளூரில் 1,000 பேர் ஆய்வுதிருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவுப்படி, மாவட்ட சுகாதார துறையினர், 14 ஒன்றியங்களில் தலா, 30 பேர் வீதம், கொசு ஒழிப்பு பணியாளர்களை நியமித்து உள்ளனர்.இதே போல், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகள் என, மொத்தம், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 1,000 பேர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சியில் 44; செங்கையில் 42காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'டெங்கு' தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து தெளித்து, மருத்துவ முகாம்கள் மூலம், மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில், ஜனவரியில் இருந்து, இம்மாதம் வரை 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தாலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சுணக்கம் இன்றி செயல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி முதல் நேற்று வரை மொத்தம் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிர கதியில் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X