உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மனதையும், உடலையும் பதற்றமில்லாமல் வைத்துக் கொள்ள, 'டிவி சீரியல்' பார்க்காமல் இருந்தாலே போதும்' என, சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல; பல மனநல மருத்துவர்களின் கருத்தும் இப்படி தான் உள்ளது.
ஒரு காலத்தில் இரவு நேரத்தில் வானொலியில் ஒலிபரப்பாகும் பழைய பாடல்களை கேட்கும்போதே, துாக்கம் கண்களை தழுவிக் கொள்ளும். ஆனால், இன்று நள்ளிரவு வரை ஒளிபரப்பாகும் வன்மம் மிகுந்த சீரியல்களை பார்த்து, பலர் துாக்கத்தை தொலைத்து, மன நெருக்கடியில் வாழ்கின்றனர். சினிமா, மூன்று மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால், ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் சீரியலால், மக்கள் மனதில் வன்மம் நிலைத்து நிற்கிறது.
மருமகள் எப்படி தன் மாமியாரை கொல்கிறாள்; தாய், தன் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய எப்படி முயற்சிக்கிறாள்; ஒருவரது வளர்ச்சியை தடுக்க, எப்படி எல்லாம் திட்டமிடலாம்... இப்படி தான், அனைத்து சீரியல் கதைகளும் உள்ளன. இது போன்ற சீரியல்களை தொடர்ந்து பார்ப்பதால், வீட்டில் உள்ளோர் மனதில் விஷம் துாவப்பட்டு, பல குடும்பங்களில் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.

முன்பெல்லாம் குற்றச் செயலில் ஈடுபடுவோர், சினிமாவை பார்த்து அதே போல் செய்ததாக வாக்குமூலம் தருவர்; ஆனால், தற்போது அந்த இடத்தை சீரியல்கள் பிடித்துள்ளன. தடம் புரண்டு செல்லும் சீரியலுக்கு ஒரு முடிவு வேண்டும். தங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு என்பதை தயாரிப்பாளரும், இயக்குனரும் உணர்ந்து, நல்ல எண்ணங்களை மக்களிடம் விதைக்கும் சீரியல்களை உருவாக்கலாம்.
அரசும், சீரியல்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். முக்கியமாக இரவு 8:00 மணிக்கு மேல் சீரியல் ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும். சினிமாவிற்கு உள்ளது போல இதற்கும் தணிக்கை முறை வர வேண்டும்.