காதல் திருமணம் செய்த மகன் மீது விரக்தி: பெற்றோர் தற்கொலை: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சிறுமி வெட்டி கொலைபால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவில் உள்ள கிராமத்தில், 8 வயது சிறுமியை, 46 வயது நபர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த மற்றொருவருக்கும் வெட்டு விழுந்தது. சிறுமி பலியான நிலையில், காயமடைந்தவர் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவான கொலையாளியை போலீசார் தேடுகின்றனர்.மழைக்கு 11
Crime, Murder, Crime Roundup, Dinamalar


இந்திய நிகழ்வுகள்சிறுமி வெட்டி கொலை


பால்கர்: மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவில் உள்ள கிராமத்தில், 8 வயது சிறுமியை, 46 வயது நபர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த மற்றொருவருக்கும் வெட்டு விழுந்தது. சிறுமி பலியான நிலையில், காயமடைந்தவர் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவான கொலையாளியை போலீசார் தேடுகின்றனர்.


மழைக்கு 11 பேர் பலி


அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத், பர்பானி, பீட், ஜல்னா உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மராத்வாடா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், வீடுகள் சேதம் அடைந்ததுடன் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்; 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்ற அரசு பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஒருவர் பலியான நிலையில் டிரைவர், கண்டக்டர் உட்பட மூவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.


போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு


புரி: ஒடிசாவின் புரி மாவட்டம் பலாங்கா போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு குண்டு வெடித்தது. இதில் கட்டடம் சேதம் அடைந்ததுடன், பொருட்கள் தீயில் எரிந்தன. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. குண்டு வெடித்தபோது பணியில் இருந்த போலீஸ்காரர் சரோஜ் பெஹெரா, உடனடியாக வெளியேறியதால் தப்பினார். மற்றவர்கள் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தனர்.


பலாத்காரம்: மந்திரவாதி கைது


பலியா: உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில், 17 வயது சிறுமியை பல்வேறு பகுதிகளுக்கு கடத்திச் சென்று ஜாக் பாபா, 23, என்ற மந்திரவாதி பாலியல் பலாத்காரம் செய்துஉள்ளார். இந்த கொடூர செயல் மூன்று மாதங்கள் தொடர்ந்த நிலையில், ஜாக் பாபா நேற்று கைதானார். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


துப்பாக்கி சூடு; ஒருவர் கைது


பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி மஞ்சகண்டியை சேர்ந்தவர் நஞ்சன். இதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், 56 என்பவரது தோட்டத்துக்குள் கால்நடைகள் நுழைவது தொடர்பாக, இரு தரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஈஸ்வரன், 'ஏர்கன்' எடுத்து நஞ்சன், அவரது மனைவி செல்லி ஆகியோரை நோக்கி சுட்டுள்ளார். தம்பதியர் வனப்பகுதிக்குள் தப்பியோடி, காயமின்றி தப்பினர்.தம்பதியரின் புகார் அடிப்படையில், அகளி போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழக நிகழ்வுகள்ஆன்லைன் மோகம்: மாணவன் தற்கொலை


திருநெல்வேலி: அலைபேசியில் வீடியோ கேமில் மூழ்கிகிடந்த மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, மன்னார்புரத்தை சேர்ந்த வள்ளிமயில் மகன் சஞ்சய் 15. பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்றுவந்தார். எப்போதும் அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்த அவரை பெற்றோர் கண்டித்தனர். மனமுடைந்த மாணவன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திசையன்விளை போலீசார் விசாரித்தனர்.


போதை ஏட்டு 'சஸ்பெண்ட்'


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் அன்பழகன், 52; இவர், 21ம் தேதி கீரனுார் பகுதியைச் சேர்ந்த மணல் திருடர்களுடன் சேர்ந்து மது அருந்தி, மயங்கி விழுந்தார்.அவரது 'வாக்கி டாக்கி'யை மணல் கடத்தல் கும்பலில் நால்வர் திருடிச் சென்றனர். கீரனுார் போலீசார், நான்கு பேரையும் 25ம் தேதி கைது செய்து, வாக்கி டாக்கியை பறிமுதல் செய்தனர். ஏட்டு அன்பழகனை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.


மகன் மீது விரக்தி: பெற்றோர் தற்கொலை


நாகர்கோவில்: குமரி மாவட்டம், ராமன்புதுாரைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், 56; மனைவி பூபதி, 41; ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் வெங்கடேஸ்வரன், 21; அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். இதனால், அவரது பெற்றோர் மன வேதனையில் இருந்தனர்.நேற்று முன்தினம் மகள் வேலைக்கு சென்றபோது தனியாக இருந்த தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.


கோயில் விளக்கால் சிறுமி பலி


துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கப்படையைச் சேர்ந்த வேல்முருகனுக்கு தெய்வவெனுசியா, 6; தெய்வ கனுசியா, 4, ஆகிய இரண்டு மகள்கள். கடந்த 21ம் தேதி, வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில், தெய்வ வெனுசியா தரிசனம் முடித்து வெளியே வந்தார்.கோவில் விளக்கில், அவரது கவுன் துணி பட்டதால் தீப்பற்றிக் கொண்டது. பிளாஸ்டிக் வேலைப்பாடுகளுடன் கூடிய கவுன் என்பதால், தீப்பற்றியதும் சிறுமியின் உடலில் ஒட்டிக் கொண்டது. அலறியபடி வீட்டுக்கு ஓடினார்.தாய் மதிவதனா, சிறுமி மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். தீக்காயத்துடன் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி இறந்தார்.


ரூ.30 லட்சம் 'குட்கா' பறிமுதல்


திருச்சி: திருச்சி கோட்டை போலீசார் நேற்று அதிகாலை, சென்னை பைபாஸ் ரோட்டில் சஞ்சீவி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து, முட்டைக்கோஸ் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் 1,000 கிலோ இருந்தன. அதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். குட்காவுடன் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் உட்பட இருவரிடம் விசாரிக்கின்றனர்.


latest tamil news
விபத்தில் இருவர் பலி


சங்ககிரி: சேலம் மாவட்டம், மேட்டூர், சாம்பள்ளியைச் சேர்ந்தவர் கட்டட பொறியாளர் கோபால், 52; இவர், 'டாடா 'ஏஸ்' மினி ஆட்டோவில் அழகேசன், 50 உள்ளிட்ட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு நேற்று காலை, இடைப்பாடியில் இருந்து சங்ககிரிக்கு சென்றார். செரங்காடு அருகே எதிரே வந்த டேங்கர் லாரி, மினி ஆட்டோ மீது மோதியது. இதில், கோபால், அழகேசன் உயிரிழந்தனர்.


டி.எஸ்.பி.,க்கு 'பிடிவாரன்ட்'


புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 2019ல் இலங்கைக்கு படகில், 80 கிலோ போதைப் பொருள் கடத்தப்பட இருந்தது. அதை ராமநாதபுரம் போதை பொருள் ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ரகுபதி, 53, தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த வழக்கு, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணைக்கு, ரகுபதி ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார். ரகுபதி தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.


ஏமன் சென்று திரும்பிய தஞ்சை வாலிபர் கைது


சென்னை: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குமரவேல் 31; கட்டடதொழிலாளி. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். விசா காலம் முடிந்தும் இந்தியா திரும்பாமல், சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்தார். காலாவதியான விசாவில் இந்தியா திரும்ப முடியாததால், நண்பர்கள் ஆலோசனைப்படி ஏமன் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து போலி ஆவணங்கள் வாயிலாக விசா பெற முயன்றார். இது குறித்து ஏமன் நாட்டு குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து, குமாரவேலை கைது செய்தனர். மேலும், அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். இதை அடுத்து, சார்ஜா வழியாக ஏர் அரேபியாவிமானத்தில், குமாரவேலை ஏமன் குடியுரிமை அதிகாரிகள், சென்னைக்கு அனுப்பினர். அத்துடன், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை திரும்பிய குமாரவேலை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அதன்பின், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


வங்கியில் இருந்து பேசுவதாக மூவரிடம் ரூ.7 லட்சம் மோசடி


கோவை: கோவையில், ஒரே நாளில் மூன்று பேரிடம் வங்கி அதிகாரிகள் போல் பேசி 7.32 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டது குறித்து, 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் மணிமாறன், 43; இவரது மொபைல் போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், உங்களின் வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், கீழே உள்ள, 'லிங்க்'கை அழுத்தினால் மீண்டும் வங்கி கணக்கு புதுப்பிக்கப் படும் எனவும், குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார். இதன்பின் ஒரு நபர், இவரை தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து அதிகாரி பேசுவதாகவும், கணக்கை புதுப்பிக்க, ஓ.டி.பி., எண்ணை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதை நம்பி ஓ.டி.பி., எண்ணை மணிமாறன் தெரிவித்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்து, 1.69 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதேபோல, வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவரது கணக்கில் 65 ஆயிரம் ரூபாய்; ஒர்க் ஷாப் உரிமையாளர் செல்வகுமார் கணக்கில் 4.98 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டது. ஒரே நாளில், கோவையில் மூன்று பேரிடம் 7.32 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்படி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


மாணவி மீது ஆசிட் வீச்சு: டிரைவருக்கு '10 ஆண்டு' சிறை


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குப்பச்சிப்பாறையைச் சேர்ந்தவர், 18 வயது மாணவி. கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து வந்தார். 2016 ஜூலை 13ல் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த பொக்லைன் டிரைவர் வேடியப்பன், 40, மாணவி மீது ஆசிட் ஊற்றியதில், மாணவிக்குமுகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. குருபரப்பள்ளி போலீசார் வேடியப்பனை கைது செய்தனர். விசாரணையில், மாணவியை பெண் கேட்டு, அவரது பெற்றோர் மறுத்ததால், ஆசிட் ஊற்றியது தெரிந்தது.இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர்விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி லதா, வேடியப்பனுக்கு 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


பகிங்ஹாம் கால்வாயில் குழந்தை உடல் மீட்பு


சாத்தாங்காடு: சென்னை மணலி விரைவு சாலை பகிங்ஹாம் கால்வாயில், குழந்தையின் உடல் மிதப்பதாக, மணலி தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்படி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாத்தாங்காடு போலீசார் வந்து, இரண்டு மணி நேரம் போராடி, குழந்தையின் உடலை மீட்டனர்.வி.ஏ.ஓ., மேனகா புகாரின்படி, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து கிடந்த குழந்தை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்அவதுாறு பேச்சு ஆசிரியைக்கு துாக்கு


லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சல்மா தன்வீர் முஸ்லிம்களின் இறை துாதர் குறித்து 2013ல் அவதுாறாக பேசியுள்ளார். தன்னை இறை துாதர் என கூறியுள்ளார். இதுகுறித்து மதகுரு ஒருவரது புகார் தொடர்பாக சல்மா தன்வீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை லாகூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, 'சல்மா மனநிலை பாதிக்கப்பட்டவர்' என, அவரது வழக்கறிஞர் கூறினார்.பஞ்சாப் மனநல மருத்துவக் கழக பரிசோதனையின் முடிவில், அவர் மனநலம் பாதிக்கப்படாதவர் என அறிக்கை தாக்கலானது. இதையடுத்து சல்மாவுக்கு மரண தண்டனை விதித்து, நீதிபதி மன்சூர் அஹ்மத் தீர்ப்பளித்தார். பாக்.,கில் மத நம்பிக்கையை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு இதுபோல் கடும் தண்டனை வழங்குவது வழக்கமாக உள்ளது.


தாய்லாந்தில் வெள்ளம்: 6 பேர் பலி


தாய்லாந்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதில் அந்நாட்டின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அங்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு


பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் லியான் நகரில் நடந்த சர்வதேச உணவு திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்திலிருந்து 19 வயது இளைஞர் ஒருவர், அதிபர் மீது முட்டையை வீசினார். இது மாக்ரான் மீது பட்டு உடையாமல் கீழே விழுந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநல பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


ஏமன் சண்டையில் 130 வீரர்கள் பலி


ஏமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 130 பேர் பலியாகி உள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் கிளர்ச்சியாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-செப்-202119:54:41 IST Report Abuse
Vena Suna பெற்றோர் முட்டாள்கள் .அவர்கள் பெண்ணை யார் கரை சேர்ப்பார்கள்? அவர்கள் கடமை அல்லவா?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-செப்-202116:50:09 IST Report Abuse
DVRR காதல் திருமணம் செய்த மகன் மீது விரக்தி: பெற்றோர் தற்கொலை???உங்களுக்கு குழந்தையில்லையா இப்போது நாடுங்கள் ...........கருத்தரிப்பு மய்யம்???அப்போ நினைப்பேன்???இந்த குழந்தைகள் பெறுவதால் என்ன பெரிசா ஆகப்போவுது???வயசாயிருச்சின்னா அந்த குழந்தை வாலிபன் ஆயி இப்பாய்டு பண்ணினாள் கருத்தரிப்பு மய்யம் சென்றனரோ இல்லையோ ஒரே சங்கதி தானே???தற்போதைய சந்ததிகள் நான் நான் நான் நினைத்தது சரி சாப்பிடுவது சரி செய்வது சரி .....இந்த எண்ண ஓட்டத்தில் வாழ்ந்து பெற்றவர்களை சிறிதும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாய் செயல்படுவதால் தான் இந்த கோர நிகழ்வுகள்.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
29-செப்-202115:51:30 IST Report Abuse
திரு.திருராம் ////////////////டி.எஸ்.பி., ரகுபதி, 53, தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த வழக்கு, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணைக்கு, ரகுபதி ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டார். ரகுபதி தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார்.////////////////இந்திய சட்ட வரைமுறைகள் குற்றவாளிகளுக்குதான் சாதகமாக உள்ளது என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு,,,,,,,குற்றம் செய்தவர் பெயர்கூட வெளியிடப்படவில்லை, குற்றவாளி கைதுசெய்யப்பட்டாரா என்றுகூட தெரியவில்லை,,,,,, ஆனால் குற்றத்தைக் கண்டுபிடித்த டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்,,,,,சூப்பரப்பு,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X