மதுரை: வைகை அணையை துார்வாரினால் கிடைக்கும் வண்டல் மண்ணை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.197.83 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
மேலுார் எட்டிமங்கலம் வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: வைகை அணையை துார்வாராததால் வண்டல் மண் படிந்துள்ளது. முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க முடியவில்லை. வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. ஆற்றில் சில இடங்களில் மோட்டார் மூலம் நீரை சட்டவிரோதமாக எடுக்கின்றனர். ஆற்றங்கரையோர கிராமம், நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்க வேண்டும்.வைகை அணை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அணையை துார்வார வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வு விசாரித்தது.மதுரை பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் பதில் மனு:வைகை அணையை 3 கட்டங்களாக துார்வார 'வாப்காஸ்' நிறுவனம் திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை உட்பட பல்வேறு நீர்நிலைகளை துார்வாரி பழைய நிலைக்கு கொண்டுவர பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வைகை அணையில் 33.481 மில்லியன் கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது. துார்வார ரூ.9 கோடி செலவாகும். துார்வாரப்படும் வண்டல் மண்ணை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.197.83 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வைகை அணை மற்றும் ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தடுக்கலாம் அல்லது சுத்திகரித்து ஆற்றில் விடலாம். ஆற்றில் தண்ணீர் திருட்டு எதுவும் இல்லை.
வைகை நீர்த்தேக்கத்தில் ஆக்கிரமிப்புகள் இல்லை.கடமலைக்குண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேகமலை வனப்பகுதியில் இன்னும் சர்வே செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் 2 வாரம் ஒத்திவைத்தனர்.