கோல்கட்டா: அரசின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, பல்துறை நிபுணர்களுக்கு உயர் பதவி வழங்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் உள்ள தே.ஜ., அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்தை, மம்தாவும் பின்பற்ற முடிவு செய்துள்ளார்.
அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பற்றாக்குறையை சமாளிக்கவும், பல்துறை நிபுணர்களுக்கு உயர் பதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும், மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, இந்த திட்டத்தை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மேற்குவங்க உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: மாநிலத்தில் சிறப்புச் செயலர், இணைச் செயலர் போன்ற பதவிகளுக்கு பல்துறை நிபுணர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் தங்கள் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு தரப்படும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் அடிப்படையிலான இந்தப் பதவிக்கு 40 வயதுக்கு மேற்பட்டோரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பணியாளர் நிர்வாகத்துறை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE