பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி; மானியம் ஒதுக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பந்தல் அமைத்து பாகற்காய் சாகுபடி; மானியம் ஒதுக்க எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2021
Share
உடுமலை : பந்தல் பாகற்காய் சாகுபடியில், நிலையான வருவாய் கிடைக்கும் நிலையில், இச்சாகுபடிக்கான மானியத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதில், தற்போது, நீர் விரயத்தை குறைத்து, கூடுதல் தரத்துடன் அதிக

உடுமலை : பந்தல் பாகற்காய் சாகுபடியில், நிலையான வருவாய் கிடைக்கும் நிலையில், இச்சாகுபடிக்கான மானியத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அதில், தற்போது, நீர் விரயத்தை குறைத்து, கூடுதல் தரத்துடன் அதிக மகசூல் எடுக்க, பந்தல் சாகுபடி முறையை பின்பற்றத்துவங்கியுள்ளனர்.இச்சாகுபடி முறையில், பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கன் உட்பட சாகுபடிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பரவலாக பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது:பந்தல் பாகற்காய் சாகுபடியில், பத்து அடி இடைவெளியில், மேட்டுப்பாத்திகள் அமைத்து, ஒவ்வொரு செடிக்கும், 5 அடி இடைவெளி விட்டு, ஏக்கருக்கு, 4 ஆயிரம் செடிகள் வரை நடவு செய்துள்ளோம்.இரண்டு மாதங்களில், செடிகளில் அறுவடையை துவக்கலாம். சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், ஏக்கருக்கு குறைந்தபட்சம், 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும்.

தரத்தின் அடிப்படையில், தற்போது, கிலோ 20 ரூபாய் வரை வியாபாரிகள் நேரடியாக தோட்டத்தில், கொள்முதல் செய்கின்றனர். இச்சாகுபடிக்கு ஆர்வம் காட்டினாலும், பந்தல் அமைப்பதற்கு அதிக செலவாகிறது.எனவே தோட்டக்கலைத்துறை வாயிலாக பந்தல் சாகுபடிக்கு, மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X