அக்., 2ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; விவாதிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

அக்., 2ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; விவாதிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு

Added : செப் 29, 2021
Share
கிராமசபை கூட்டங்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும், என, ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, வரும் காந்தி ஜெயந்தி (அக்., 2) அன்று, கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை

கிராமசபை கூட்டங்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும், என, ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, வரும் காந்தி ஜெயந்தி (அக்., 2) அன்று, கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகளில், கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், ஆர்.வேலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. அதனால், 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், ஆமந்தகடவு ஊராட்சியை தவிர மற்ற ஊராட்சிகளிலும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 26 ஊராட்சிகளில், தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால், அந்த ஊராட்சியை தவிர்த்து, மீதமுள்ள, 25 ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடக்கிறது. வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகளில், போளியகவுண்டன்பாளையம், ஜமீன்முத்துார் ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால், அந்த ஊராட்சிகளில் கிராமசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 37 ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடக்கிறது.ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால், அந்த ஊராட்சியை தவிர்த்து, மீதமுள்ள, 18 ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடக்கிறது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளில், நெம்பர் 10 முத்துார் ஊராட்சி, 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால், அந்த ஊராட்சியை தவிர்த்து, மீதமுள்ள, 33 ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நடக்கிறது.கிராமசபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதிக்க வேண்டும்.

கிராமப்பகுதிகளில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும்.கிராம சபை கூட்டத்தை நடத்த, ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிராம கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, கிராம வளர்ச்சிக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும், என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினருடன் பங்கேற்க விவசாயிகள் 'வாட்ஸ்ஆப்' பிரசாரம்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதியில் நடக்கும், கிராம சபை கூட்டத்தில், விவசாயத்தை பாதுகாக்க, விவசாயிகள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என, 'வாட்ஸ்ஆப்' குழுக்களில் தகவல் பரப்பப்படுகிறது.அதில், கிராம சபையில் விவசாயிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல், பயிர் சாகுபடி மட்டுமல்லாது, விவசாயமும் பாதிக்கிறது.

அதனால், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச்செய்யும் வகையில், வேலைஉறுதி திட்ட பணியாளர்களை விவசாயத்தில் ஈடுபடுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவே, வேலைஉறுதி திட்ட பணியாளர்களை விட, விவசாயிகள் அதிகளவில் பங்கேற்றால் மட்டுமே, சாதகமான தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும். எனவே, அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும், என, 'வாட்ஸ்ஆப்' குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- - நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X