ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பெண்கள்; 100 நாள் திட்ட வேலை வழங்க கோரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பெண்கள்; 100 நாள் திட்ட வேலை வழங்க கோரிக்கை

Added : செப் 29, 2021
Share
மேட்டுப்பாளையம் : நுாறு நாள் வேலை வழங்கவும், குடிநீர் சீராக வழங்கக் கோரியும், இரும்பறை ஊராட்சி தலைவரை, பெண்கள் முற்றுகையிட்டனர்.சிறுமுகையை அடுத்த இரும்பறை ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக ராஜேஸ்வரி உள்ளார். பெத்திக்குட்டை கிராம மக்கள் அவ்வழியாக வந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரியை முற்றுகையிட்டனர். 'எங்கள் பகுதிக்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

மேட்டுப்பாளையம் : நுாறு நாள் வேலை வழங்கவும், குடிநீர் சீராக வழங்கக் கோரியும், இரும்பறை ஊராட்சி தலைவரை, பெண்கள் முற்றுகையிட்டனர்.

சிறுமுகையை அடுத்த இரும்பறை ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக ராஜேஸ்வரி உள்ளார். பெத்திக்குட்டை கிராம மக்கள் அவ்வழியாக வந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரியை முற்றுகையிட்டனர்.

'எங்கள் பகுதிக்கு ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. உப்புத்தண்ணீர், இரு ஆண்டுகளாக வினியோகிக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறையால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சியில், 100 நாள் வேலை கொடுத்தவர்களுக்கு, மீண்டும், மீண்டும் வேலை கொடுக்கப்படுகிறது. அதனால் சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். 'குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அவர்களிடம், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி உறுதி அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:இரும்பறை ஊராட்சிக்கு நாளொன்றுக்கு, 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, 4 லட்சம் லிட்டர் மட்டுமே வருகிறது. இரு மாதங்களுக்கு முன் வரை ஊராட்சியில், 1,215 குடிநீர் குழாய்கள் இருந்தன. 'ஜல் ஜீவன்' திட்டத்தில், 839 வீடுகளுக்கு, புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில், 29 இடங்களில் போர்வெல் கிணறுகள் உள்ளன. இதில், 9 கிணறுகளில் மட்டுமே நீர் உள்ளது. மீதமுள்ள, 20 போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

இதனால், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஊராட்சியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தினமும், 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.ஊராட்சியில், 100 நாள் வேலை முறைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சியில், 96 இடங்களில் 100 நாள் வேலை செய்ய, இடங்கள் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உத்தரவு வந்தவுடன், 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு அனைவரும் அழைக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X