அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட்
கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 11.20 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 11.80 கோடி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், மதிய உணவு திட்டத்திற்காக, மத்திய அரசு 24 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 2021 - 22 முதல் 2025 - 26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு, மதிய உணவு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு, மத்திய அரசு 54 ஆயிரத்து 61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து 31 ஆயிரத்து 733 கோடி ரூபாய் நிதி பெறப்படும். இதை தவிர, உணவு தானியங்களுக்காக 45 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.இந்த திட்டத்திற்காக, மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 794 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர, பால்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டம் விஸ்தரிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட நாட்டின் 117 மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். - நமது சிறப்பு நிருபர் -