சென்னை,: முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, 70, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளை துவங்கி, அரசு பணத்தை மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கில், நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில், அவரது கணவர், 62 வயது நிறைந்த பாபுவுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, 81 வயது நிறைந்த சண்முகத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வில் தற்போது கலை, இலக்கியப் பிரிவு செயலர் பொறுப்பில் உள்ள இந்திர குமாரி, 1991 - 1996ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார்.
ரூ .15.45 லட்சம்
அப்போது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த, 'மெர்சி மதர் இந்தியா' அறக்கட்டளை மற்றும் பரணி ஸ்வாதி கல்வி அறக்கட்டளைகள் சார்பில், வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகள் பள்ளி துவங்குவதற்காக, சமூக நலத் துறை சார்பில் 15.45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிதி வாயிலாக, குழந்தைகளுக்காக பள்ளிகளைத் துவக்காமல், போலி ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கு காட்டியதாக 1997ல் சமூக நலத் துறை செயலர் லட்சுமி பிரானேஷ் புகார் அளித்தார்.
குற்றப்பத்திரிகை
அந்த புகாரின்படி, இந்திர குமாரி, சமூக நலத் துறை முன்னாள் செயலர் கிருபாகரன், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குனர் சண்முகம், இந்திர குமாரியின் கணவர் பாபு, உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது 2003ல் வழக்கு பதியப்பட்டது; 2004ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னையில் எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில், சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி, அரசு தரப்பில் வாதாடினார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி என்.ஆலிசியா நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது, வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களில் இந்திர குமாரி உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் எனவும், இந்திர குமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் நிரபராதி எனவும் தீர்ப்பளித்தார்.
இதில், இந்திர குமாரி மற்றும் அவரது கணவர் பாபுவிற்கு, தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகத்திற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த முன்னாள் சமூக நலத் துறை செயலர் கிருபாகரன் மரணம் அடைந்து விட்டார்.
மயக்கம்
தீர்ப்பு வழங்கியதும், முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி, நீதிமன்ற அறையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடன் இருந்தவர்கள் மற்றும் போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.