சென்னை:அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தொடுத்தவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது, முதலில் 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. பின், 2021 பிப்ரவரியில், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஓய்வு வயதை உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே போன்ற வழக்கு, ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
விளம்பர நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொள்கை முடிவு எடுக்கிறது. ஓய்வு வயதை உயர்த்துவதால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான போதிய விபரங்கள் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.இதை, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு, இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி, இரண்டு ஆண்டுகளுக்கு, பொதுநல வழக்கு தாக்கல் செய்ய, மனுதாரருக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.