ஜாலி செலவுக்காக திருடிய இன்ஜி., காதலி கைது: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

ஜாலி செலவுக்காக திருடிய இன்ஜி., காதலி கைது: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (4)
Share
இந்திய நிகழ்வுகள்:தடுப்பூசியை மாற்றிய நர்ஸ்தானே: மஹாராஷ்டிராவின் தானே அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ராஜ்குமார் என்பவர் சமீபத்தில் சென்றார். அங்கிருந்த நர்ஸ் அவருக்கு வெறிநாய் கடிக்கான 'ரேபிஸ்' தடுப்பூசியை செலுத்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் பொறுப்பில் இருந்த பெண் டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் 'சஸ்பெண்ட்'
Crime Roundup, Murder, crime, arrest


இந்திய நிகழ்வுகள்:தடுப்பூசியை மாற்றிய நர்ஸ்


தானே: மஹாராஷ்டிராவின் தானே அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ராஜ்குமார் என்பவர் சமீபத்தில் சென்றார். அங்கிருந்த நர்ஸ் அவருக்கு வெறிநாய் கடிக்கான 'ரேபிஸ்' தடுப்பூசியை செலுத்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் பொறுப்பில் இருந்த பெண் டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தடுப்பூசி மாற்றத்தால் ராஜ்குமாருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என அதிகாரிகள் கூறினர்.


காதலர்களுக்கு செருப்பு மாலை


கோரக்பூர்: உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், ஒரே ஜாதியைச் சேர்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதே ஊரைச் சேர்ந்த சிலர், பொது இடத்தில் காதலர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கரி பூசினர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து 13 பேரை தேடுகின்றனர்.


உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தற்கொலை


புதுடில்லி: ராஜஸ்தானின் கோட்காசிமைச் சேர்ந்த டிங்கு ராம், 30, ஆயுதப்படை போலீஸ்காரர். டில்லி உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். விடுமுறையில் சொந்த ஊர் சென்ற அவர் நேற்று டில்லி திரும்பினார். வழக்கம் போல் உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கள்ள உறவு ஜோடிக்கு நிர்வாண தண்டனை


தும்கா : ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில், மயுர்நாச்சா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், குல்ஹாடியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். திருமணமான அந்த பெண், அந்த நபருடன் கள்ள உறவு வைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து வெளியே தெரியவந்ததும், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் இருவருக்கும் மோசமான தண்டனையை வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இருவரும், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்தனர்.


குஜராத்: சிங்கக்குட்டி பலி


ஆமதாபாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்ட வனப்பகுதி அருகே உள்ள கிராமத்தில், மூன்று மாத சிங்கக்குட்டி இறந்து கிடப்பதை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத் துறையினர் சிங்கக்குட்டியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் முடிவில் பெரிய சிங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அது கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த குட்டியுடன் சேர்த்து கிர் வனப்பகுதியில் இம்மாதம் மட்டும் ஆறு சிங்கங்கள் இறந்துள்ளன.


வீட்டில் 5 பேரின் உடல்கள்


சண்டிகர்: ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவரும், இவரது மனைவி, மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் நேற்று வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர். உடல்களை மீட்ட போலீசார், மனைவி உட்பட மற்றவர்களை விஷம் அல்லது துாக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, நரேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இதற்கு குடும்ப பிரச்னை காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்:ஜாலி செலவுக்காக திருட்டு; இன்ஜினியர், காதலி கைது


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஜாலியாக செலவு செய்ய 50 பவுன் நகை திருடிய இன்ஜினியர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

மண்டைக்காடு அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் நர்ஸ் பேபிசுதா 44. கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பேபிசுதாவின் தம்பி சுதர். மனைவி ஷர்மிலிமோள் 24. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜன., 27 ல் ஷர்மிலிமோள் அழைப்பின் பேரில் பேபிசுதா அவரது வீட்டுக்கு சென்றார்.அங்கு சர்ச் திருவிழாவில் கலந்து கொண்டு அடுத்த நாள் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 50 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. எட்டு மாதங்களாக இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.

இந்நிலையில் திருட்டு நடந்த தினத்திலும் அடுத்த நாளும் பெத்தேல்புரம் பகுதியில் இரண்டு அலைபேசி எண்களில் அடிக்கடி பேசியதை கண்டு பிடித்து விசாரித்தனர். ஒருவர் பபின் 27. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர். மற்றவர் ஷர்மிலிமோள். இவர்கள் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததையும் கண்டு பிடித்த மண்டைக்காடு போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பேபிசுதா வீட்டில் திருடி அதை விற்று ஜாலியாக இருந்ததை ஒப்புக் கொண்டனர். கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் வேலை இழந்து திரும்பிய பபினுக்கு, ஷர்மிலிமோளுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜாலியாக செலவு செய்ய இருவரும் திட்டமிட்டு திருடியுள்ளனர்.


latest tamil newsசார் - பதிவாளர் மீது வழக்கு


சேலம்: சேலம், சூரமங்கலம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 27ம் தேதி மாலை துவங்கி, 28ம் தேதி காலை வரை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத, 5 லட்சத்து, 3,510 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 10 ஆண்டுகளாக சொத்து பதிவு செய்த வி.ஐ.பி.,க்களின் பட்டியலை பெற்றனர். சார் - பதிவாளர் இந்துமதி மற்றும் பத்திரப்பதிவு எழுத்தர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


விபத்தில் தந்தை, மகள் பலி


சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 40; பட்டாசு தொழிலாளி. மனைவி வெங்கடேஸ்வரி, 32; மகள் முத்துலட்சுமி, 8; மகன் முனிப்பாண்டி, 7 ஆகியோருடன் நேற்று டி.வி.எஸ்., மொபட்டில் 'ஹெல்மெட்' அணியாமல் சிவகாசி சென்றார். பழைய டி.எஸ்.பி., அலுவலகம் அருகே எதிரே கல்லுாரி மாணவர் ஹரீஸ்நாத், 24, 'ஹெல்மெட்' அணியாமல் ஓட்டி வந்த ராயல் எண்பீல்டு புல்லட் மோதியது. இதில் முருகன், அவரது மகள் இறந்தனர் . மற்ற மூவர் காயமடைந்தனர்.


5 மாத குழந்தை கடத்தல்


ஆனைமலை: கர்நாடக மாநிலம், மைசூரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; பழைய துணி விற்பனை செய்கிறார். இவரது மனைவி சங்கீதா, 27. ஐந்து மாத பெண் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரு வாரமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, சங்கீதா குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஒருவர், 5 மாத குழந்தையை பறித்து, மற்றொருவருடன் பைக்கில், 'எஸ்கேப்' ஆனார். சங்கீதா மற்றும் அங்கிருந்தவர்கள் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


மோசடி வேளாண் ஊழியர் கைது


துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேளாண் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் தினேஷ் சிங், 32; என்பவர், தாளமுத்து நகர் பாலமுருகன், 30, என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 4.70 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதேபோல, ராசையா என்பவரின் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக, 3.10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். வேலைக்கான ஏற்பாடு செய்யவில்லை. பணமும் திரும்பத் தரவில்லை. புகார்படி தினேஷ் சிங்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


உலக நிகழ்வுகள்:சிறையில் கலவரம்; 24 கைதிகள் பலி


குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவாஸ் மாகாணம் குவாகுவில் நகரில் உள்ள மத்திய சிறையில், நேற்று முன்தினம் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வீச்சு நடந்தது. 24 கைதிகள் பலியாயினர்; 48 பேர் காயமடைந்தனர். போலீசார் நடவடிக்கையால், ஐந்து மணி நேரத்திற்குப் பின், கலவரம் முடிவுக்கு வந்தது.


பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


லாகூர்: பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் தளபதிகள் என தெரியவந்திருக்கிறது. மேலும், பயங்கர ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X