பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...

Added : செப் 30, 2021
Share
Advertisement
பைரவருக்கு சிறப்புபல்லடம், கணபதிபாளையம் அருகே மலையம்பாளையத்தில் ஸ்ரீவடுகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், நேற்று புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள், பூசணிக்காய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு

பைரவருக்கு சிறப்பு

பல்லடம், கணபதிபாளையம் அருகே மலையம்பாளையத்தில் ஸ்ரீவடுகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், நேற்று புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள், பூசணிக்காய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆதார் மையம் மூடல்

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரசு இ--சேவை மையத்தில், ஆதார் கார்டு, திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சர்வர் பிரச்னையால், மையம் மூடப்பட்டது. இதனால், நகராட்சிக்கு தினமும், 25-க்கும் மேற்பட்டோர் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்கள் காங்கயம் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதியோர் அவதிப்படுவதால், ஆதார் பதிவு மையத்தை திறக்க வேண்டும்.

தொடர் திருட்டால் அச்சம்

கடந்த, 13ல் கொடுவாயில் இரண்டு மருந்து கடை, ஒரு மளிகைக்கடை, ஒரு மொபைல் போன் கடை, ஒரு துணிக்கடையில் புகுந்த மர்மநபர், 27 ஆயிரத்து, 600 ரொக்கம், மொபைல் போன், சிசிடிவி கேமரா ஆகியன திருட்டு போனது. நேற்று முன்தினம் காடையூரை சேர்ந்த சிவா, என்பவரின் மளிகை கடையில், மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து, 1,500 ரூபாய் மற்றும் நிழலியை சேர்ந்த செந்தில்குமாரின் மருந்து கடையில், 20 ஆயிரம் ரூபாய் திருடி சென்றார். இவ்வாறு தொடர் திருட்டால், வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் வேளாண்மை கூடத்தில், நேற்று முன்தினம், தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில், 78 ஆயிரத்து 848 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. மொத்தம், 71 லட்சத்து 48 ஆயிரத்து 903 ரூபாய்க்கு விற்பனையானது. ஏலத்தில், முதல் தரம் தேங்காய் பருப்பு ஒரு கிலோ 102.70 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 78.70 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்றைய வர்த்தகத்தில், 176 விவசாயிகள் மற்றும் 15 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்ததனர்.

விவசாயிகள் கவலை

பி.ஏ.பி., வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பெரும்பாலான இடங்களில் நீர்க்கசிவு அதிகரித்துள்ளது. தண்ணீர் திறந்தவுடன் அருகிலுள்ள விவசாய நிலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலர் வாய்க்கால் அருகில் கிணறு தோண்டி பல கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்கின்றனர். இதனால், தண்ணீர் முழுமையாக கடைமடை வரை சென்று சேராததால், விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே, வாய்க்காலில் தரமான கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை வேண்டி வழிபாடு

மழை வளம் வேண்டியும், கொரோனா ஒழியவும், வெள்ளகோவில் அருகே பகவதியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பெரிய வீட்டுக்காரர் முதல் பொங்கல் வைத்தும், தொடர்ந்து பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்ன அலங்காரத்தில் மஹா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், அப்பகுதி பொதுமக்கள் பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

விவசாயிகளுக்கு அழைப்பு

வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில், சேகரமாகும் மக்கும் குப்பைகளை அரைத்து குப்பைக்கிடங்கில் உரமாக மாற்றி 'ஸ்டாக்' வைக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவிலில், 21 வார்டுகளில் உள்ள வீடுகளில் பெறப்படும் காய்கறி மற்றும் கழிவு குப்பைகளை வெள்ளகோவில் வாரச்சந்தை பகுதி மற்றும் அமராவதி நகர் பகுதிகளில் காய்கறி மற்றும் மக்கும் குப்பைகளை அரைத்து, உரமாக மாற்றப்பட்டு, உரம் பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் நகராட்சி நிர்வாகத்தை அணுகி உயரமான இயற்கை உரத்தை வாங்கி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

கழிவு நீரால் அவதி

அவிநாசி அருகே பழங்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து, குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்துார் செல்லும் ரோட்டில், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு, முட்செடிகளை வைத்து அடைத்ததுடன், மறியல் செய்ய முற்பட்டனர். ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், மக்களை சமாதானம் செய்து, பிரச்னைக்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தால், மக்கள் கலைந்து சென்றனர்.

தொழில்நுட்ப பயிற்சி

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களை சாகுபடி செய்வது குறித்து, தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட பயிற்சி, இடுவாயில் நேற்று நடந்தது. திட்ட ஆலோசகர் அரசப்பன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, துணை அலுவலர்கள் ஈஸ்வரன் பேசினர். உடலில் கொழுப்பு சத்தினை குறைத்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

சீரமைக்க வேண்டுகோள்

திருப்பூர், பி.என்., ரோடு, நெசவாளர் காலனி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைக்காலங்களில் அடிக்கடி கழிவுநீர் புகுவதால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (திருப்பூர் வடக்கு) தலைவர் குழந்தை அற்புதராஜ் கூறுகையில், 'பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கோடு செயல்படுகிறது. இந்த அவலநிலையை போக்காவிட்டால் பெற்றோர்களுடன் இணைந்து, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்தும்,' என்றார்.

கமிஷனரிடம் புகார்

திருப்பூர், அங்கேரிபாளையம், கவிதா நகரை சேர்ந்தவர் நவீன்குமார், 27. இவர் ஆன்லைனில் கடன் வாங்க முயற்சி செய்ததில், லலிதா, குமரசேன் ஆகியோர், கடன் வாங்கி தருவதாக கூறி, 25 ஆயிரம் பெற்றனர். ஆனால், கடன் வாங்கி தரவில்லை. இதுகுறித்து நவீன்குமார் கேட்டதற்கு, ஏமாற்றும் நோக்கில் காரணம் கூறி வருகின்றனர். எனவே, இது குறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மீண்டும், துணை கமிஷனர் ரவியிடம் மோசடி குறித்து புகார் மனு அளித்தார்.

விபத்துக்கு அச்சாரம்

அவிநாசி -- திருப்பூர் ரோட்டில், தினமும், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. பல இடங்களில், ரோட்டோரம் பெயர்ந்து சிறியளவில் குழி ஏற்பட்டுள்ளது. ரோட்டில் இயல்பான வேகத்தில் வந்து கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள், குறிப்பாக, டூவீலர் வாகன ஓட்டிகள், குழியை தவிர்க்க, திடீரென வாகனத்தின் வேகத்தை குறைத்தோ அல்லது அதே வேகத்தில் சற்று ஒதுங்கி செல்ல முற்படுகின்றனர். அதே நேரத்தில், அந்த வாகனத்தின் பின், வேகமாக வரும் வாகனங்கள் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பெரும் விபரீதம் ஏற்படும் முன், இத்தகைய குழிகளை மூடி 'பேட்ச்' வேலை செய்ய வேண்டும்' என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

'அப்ரண்டிஸ்' சேர்ப்பு முகாம்

தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தில், வேலை வாய்ப்புத்துறையுடன் இணைந்து, 'அப்ரண்டிஸ்' சேர்க்கை முகாம், வரும் 6ம் தேதி நடக்கிறது. தேர்வு செய்யப்படும் நபருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, 98947 83226, 94990 55700 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

'வீதி விழா' நிகழ்ச்சி

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு, சுகாதாரமான வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் பிரசாரம் நடக்கிறது. நாளை காலை 6:00 மணிக்கு, மாநகராட்சி மைய அலுவலகத்தில் துவங்கும் பெண்கள் மட்டும் பங்கேற்கின்றனர். அவிநாசி ரோடு, குமார் நகர், தீயணைப்பு நிலையம், 60 அடி ரோடு, பி.என்.,ரோடு, குமரன் ரோடு வழியே சென்று, மீண்டும் மாநகராட்சி அலுவலகம் முன் நிறைவடையும். மாலை 4:00 மணிக்கு பிரைம் என்கிளேவ் வளாகத்தில் 'வீதி விழா'வும் நடக்கிறது.

உறுப்பினராக அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், துாய்மை பணியாளர் நலவாரியம் இயங்கி வருகிறது. தற்போது, நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துாய்மை பணியாளர், நலவாரியத்தில் இணையலாம். இது தொடர்பாக, தாட்கோ அலுவலகத்தை, 0421 2971112, 94450 29552 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X