காரைக்குடி: தமிழகத்தில் பூங்காக்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் கோயில்களை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார் என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் 65 வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் கூறியதாவது: கேரளா போன்று தமிழகமும் ஹிந்து சிறுபான்மை மாநிலமாக மாறிவிடக்கூடாது என்று 7 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன். தமிழ்த்திரைப்படம் மூலமாக, ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது, கேலி செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கும் காலத்தில் சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பாடம் எடுப்பது போல ருத்ரதாண்டவம் என்கிற நல்ல படம் வந்துள்ளது.
தமிழகத்தில் சிலகாலமாக சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஜாதிப்பிரச்னையாக மாற்றி கலவரம் உருவாக்கப்படுகிறது. இதற்கென்றே சில கட்சிகள் உள்ளன. இதனை அப்படத்தில் தெரிவிக்கிறார்கள்.தமிழக போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, ரவுடிகளை கைது செய்கின்றனர். இதுகுறித்து எந்த சமுதாயமும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், திருமாவளவனும், வன்னியரசும் இதை ஜாதியாக மாற்றுவது சரியில்லை.

நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எந்த தவறான வார்த்தையையும் கூறவில்லை. அர்த்தம் புரியாமல் யார்மனதையாவது புண்படுத்தியிருந்தால் அது வருத்தமான விஷயம். இதற்கு அர்த்தம் விக்கிபீடியாவில் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் எங்காவது தாக்கப்பட்டால் முதலாவதாக கண்டிப்பவன் நானாக தான் இருப்பேன்.
கவர்னர் பதவி குறித்து சில சில்வண்டுகள் அனாவசியமாக பேசுவதை அனுமதிக்க முடியாது.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்குவதாக கூறி வரும் நிலையில், குழந்தைகள் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் ஹிந்து கோயில்களை மட்டும் எதற்காக மூட வேண்டும்.
இது பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை. இவ்வாறு செய்தால் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார். எனவே உடனடியாக ஹிந்து கோயில்களை திறக்க வேண்டும், என்றார்.