பொது செய்தி

தமிழ்நாடு

லாலி ரோட்டில் இடமிருக்கு... தடமில்லை! அரசு இடத்திலேயே பாலம் கட்டி நெரிசலுக்கு தீர்வு காணலாம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை லாலி ரோடு சந்திப்பில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, அரசுக்குச் சொந்தமான இடத்திலேயே ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.கோவை தடாகம் ரோட்டிலுள்ள லாலி ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வடவள்ளி, வீரகேரளம், தொண்டாமுத்துார், பி.என்.புதுார் போன்ற வளர்ந்து வரும்
 லாலி ரோட்டில் இடமிருக்கு... தடமில்லை!  அரசு இடத்திலேயே பாலம் கட்டி நெரிசலுக்கு தீர்வு காணலாம்

கோவை லாலி ரோடு சந்திப்பில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, அரசுக்குச் சொந்தமான இடத்திலேயே ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

கோவை தடாகம் ரோட்டிலுள்ள லாலி ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வடவள்ளி, வீரகேரளம், தொண்டாமுத்துார், பி.என்.புதுார் போன்ற வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்களும், வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை, சட்டக்கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களுக்குச் செல்வோர் வாகனங்களும், மருதமலை செல்லும் சுற்றுலா வாகனங்களும்,இந்த சந்திப்பை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

நகரிலிருந்து ஆனைகட்டி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள், கணுவாய், தடாகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தடாகம் ரோட்டையே கடந்து செல்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமின்றி, பகல் நேரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கவுலி பிரவுன் ரோட்டில் உழவர் சந்தை, ஏராளமான மருத்துவமனைகள், வனக்கல்லுாரி, அரசு அலுவலர் குடியிருப்புகள் இருப்பதால், அந்த ரோட்டிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாகவுள்ளது.

இந்த ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமாக கார் பார்க்கிங் ஆகவும், மற்றொரு புறம் டூ வீலர் பார்க்கிங் ஆகவும் பயன்படுத்தப்படுவதால், இந்த ரோட்டில் வாகனங்களை இயக்குவதேபெரும் சவாலாக மாறியுள்ளது.கோவை நகரில், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என முக்கிய ரோடுகள் அனைத்திலும், அடுத்தடுத்து பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், தடாகம் ரோட்டில் பெயருக்குக் கூட ஒரு பாலமும் கட்டப்படவில்லை.அதேபோன்று, சாலை விரிவாக்கமும் பெயரளவுக்கே நடந்துள்ளது.

ஒரு வகையில் இந்த ரோடும், பகுதிகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, இங்கு பாலம் கட்டுவதற்கு தொழில்நுட்பக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருதமலை ரோட்டிலிருந்து கவுலிபிரவுன் ரோட்டுக்கு ஒரு பாலமும், காந்தி பார்க் பகுதியிலிருந்து ஜி.சி.டி., வரை தடாகம் ரோட்டில் ஒரு பாலமும் கட்டுவதாகக் கூறப்பட்டது.

அதன்பின்பு, தடாகம் ரோட்டில் மட்டுமே பாலம் கட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின், என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.இரண்டு ரோடுகளிலும் பாலங்கள் கட்டாமல், ஒரேயொரு பாலம் கட்டப்பட்டால் ஒரு பயனும் ஏற்படாது. லாலி ரோடு சந்திப்பிற்கு அருகில் வனக்கல்லுாரி, ஜி.சி.டி., மற்றும் வேளாண் பல்கலை இடங்கள் அதிகமிருக்கின்றன.அந்த இடங்களைக் கையகப்படுத்தி, இந்த சந்திப்பில் ரோட்டரி அமைத்து, இரண்டு ரோடுகளின் பாலங்களையும் இணைக்கலாம் என்று ஒரு ஆலோசனை முன் வைக்கப்படுகிறது. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், சில அமைப்புகள் முயன்று வருகின்றன.

ஒரு வேளை பாலம் கட்ட ஆரம்பித்தாலும், இந்த ரோடுகளில் மாற்று வழியை ஏற்படுத்த வேண்டியிருக்குமென்பதால், இப்போதே இந்த ரோடுகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களை எடுத்து, ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.மருதமலை ரோட்டில், வேளாண் பல்கலைக்கு எதிரிலுள்ள வளாகத்தில் இடம் எடுத்து ரோட்டை அகலப்படுத்தலாம். அதேபோன்று, கவுலி பிரவுன் ரோட்டிலும் வனக்கல்லுாரி மற்றும் வீட்டு வசதி வாரிய இடங்கள் மட்டுமே இருக்கின்றன.

அதிலும் இடம் எடுத்து, அந்த ரோட்டையும் அகலப்படுத்த முடியும். தமிழக அரசு நினைத்தால் இதை உடனடியாகச் செய்யலாம். இதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.கோவையை தற்போதுள்ள அரசு புறக்கணிக்கவில்லை என்பது உண்மையெனில், இங்கு பாலம் கட்டவும், ரோட்டை அகலப்படுத்தவும் மிக மிக விரைவாக நடவடிக்கை எடுப்பது அவசியம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X