சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக நிற்கும்: முதல்வர்| Dinamalar

தமிழ்நாடு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக நிற்கும்: முதல்வர்

Added : செப் 30, 2021
Share
ஓமலூர்: ''சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு உறுதுணையாக நிற்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சேலம், கருப்பூரில் உள்ள சிட்கோ நேர்த்திமிகு மையத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமைவகித்து பேசியதாவது: ஏற்றுமதி, முதலீடுகளுக்கு உதவ, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன ஏற்றுமதியாளருடன், 10

ஓமலூர்: ''சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு உறுதுணையாக நிற்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


சேலம், கருப்பூரில் உள்ள சிட்கோ நேர்த்திமிகு மையத்தில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமைவகித்து பேசியதாவது: ஏற்றுமதி, முதலீடுகளுக்கு உதவ, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன ஏற்றுமதியாளருடன், 10 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்மூலம், 240 கோடி ரூபாய் முதலீடு, 2,545 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி. தமிழகத்தில் தொழில் முனைவோர் நிறைந்த மாவட்டங்களில் சேலமும் ஒன்று. பெங்களூரு, கோவை, திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களுடன் ரயில் இணைப்பு பெற்று, மையமாக உள்ளது. உள்நாட்டு முனையமும் உள்ளது. ஜவ்வரிசி, கயிறு, ஜவுளி, வெள்ளி, எக்கு, பி.வி.சி., அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. 22 ஆயிரத்து, 256 குறு, சிறு, தொழில் நிறுவனங்கள், அதன் மூலம், ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 128 பேர் வேலைவாய்ப்பில் உள்ளனர். ஜே.எஸ்.டபுள்யு., சேலம் உருக்காலை, கெம்பிளாஸ்ட், ஜவுளி அலைகள், 6 சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன.

இந்திய அரசால், ராணுவ தளவாட பொருள் தயாரிக்க சேலம் முக்கிய இடத்தில் முனைந்துள்ளது. பாராசூட் துணி, ராணுவ துணிகள் தயாரிக்கவும், ஹெலிகாப்டர் பாகம் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. பெரிய சீரகாபாடியில் பிரமாண்ட உணவு பூங்கா அமைக்க, 56.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணி நடக்கிறது. கஞ்சநாயக்கன்பட்டியில், 11 ஏக்கரில் வேளாண் தொழில் சார் மையம் அமைய உள்ளது. சேலம் மாவட்டத்தில், 247.17 லட்சம் ரூபாய் மதிப்பில், ஜவ்வரிசி தொழில் மையம், 501.10 லட்சம் ரூபாய் மதிப்பில், கயிறு தொழில் மையம் அமைக்க, 1,532.74 லட்சம் ரூபாய் மதிப்பில் எக்கு தொழில் மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 1,333.9 லட்சம் ரூபாய் மதிப்பில் விசைத்தறி தொழில் மையம், 14 ஆயிரத்து, 446.33 லட்சம் ரூபாய் மதிப்பில் அறைகலன் தொழில் மையம், 1,346.56 லட்சம் ரூபாய் மதிப்பில் அச்சு தொழில் மையம், 248.9 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளி தொழில் மையம் ஆகியவை செயல்பாட்டுக்கு வரவுள்ளன. கந்தம்பட்டியில் மர வேலைப்பாடு, கொங்கணாபுரத்தில் வெல்லம், ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி ஆகிய தொழில் மையம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. சுயவேலைவாய்ப்பு திட்டத்துக்கு, 111 பயனாளிக்கு, 332.3 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. மின்கட்டண சலுகை, வரிச்சலுகை என, 37 குறு, சிறு, நடுத்தர தொழிலதிபர்களுக்கு, 178.67 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு, தொழில் நிறுவன வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக நிற்கும். இரு தொழில் மாநாடுகள் மூலம், பல ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், தங்கள் துறையில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்தனர். ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், மருத்துவ துறை அமைச்சர் சுப்ரமணி, எம்.பி.,க்கள் பார்த்திபன், கவுதம சிகாமணி, சின்ராஜ், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவன துறை செயலர் அருண்ராய், சேலம் கலெக்டர் கார்மேகம், தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவன சங்கத்தலைவர் மாரியப்பன், சேலம் மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன சங்க நிர்வாகிகள், விசைத்தறி, வெள்ளி கொலுசு தொழில்முனைவோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X