வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Added : செப் 30, 2021
Share
வேலூர்: கடன் தொல்லையால் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு, குடியாத்தம் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 28. இவர், தனியார் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால் விசைத்தறி கூடம் சரியாக செயல்படாததால், குடும்பம் நடத்த முடியாமல் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தர

வேலூர்: கடன் தொல்லையால் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு, குடியாத்தம் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.


வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 28. இவர், தனியார் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால் விசைத்தறி கூடம் சரியாக செயல்படாததால், குடும்பம் நடத்த முடியாமல் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தர முடியாமல் விரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு விசைத்தறி கூடத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய ஜெயக்குமார், 4:00 மணிக்கே சென்று விட்டார். 5:00 மணிக்கு ஜெயக்குமாரோடு பணியாற்றி வரும் தொழிலாளர்களின் மொபைல் போன் வாட்ஸ் ஆப்புக்கு, கடன் தொல்லையால், தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஜெயக்குமார் பேசிய வீடியோ இருந்தது. இதை பார்த்த சக தொழிலாளர்கள் விசைத்தறி கூடம் சென்ற போது, அங்குள்ள ஜன்னலில் கயிற்றால் ஜெயக்குமார் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இறந்த ஜெயக்குமாருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடியாத்தம் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை ஊர்வலமாக சென்று குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சப்-கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தொழிலாளர்கள் கூறியதாவது: சரியான கூலி கிடைக்காததால், பெரும்பாலான தொழிலாளர்கள் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வருகின்றனர். செய்த வேலைக்கு கூலியும் உடனடியாக கிடைப்பதில்லை. சில உற்பத்தியாளர்கள், நிர்ணயித்த கூலியை விட குறைவாக கொடுக்கின்றனர். ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு பதிலளித்த சப்-கலெக்டர் தனஞ்செயன்,''இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்களிடம், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை சரி செய்யப்படும்,'' என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X