பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தடுப்பு பணியில் 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்: பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்!

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழகத்தில், விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சென்னையில், வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், மண்டல வாரியாக, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம்
வெள்ளதடுப்புபணி, ஐஏஎஸ், அதிகாரிகள், நியமனம், பருவ மழை, மாநகராட்சி, தயார், சென்னை

தமிழகத்தில், விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சென்னையில், வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், மண்டல வாரியாக, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில், விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கான குடிநீர் ஆதாரங்களில், நீர் நிரம்பியுள்ளது. பருவ மழையின் போது, செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, நீர்நிலைகளின் நிலை குறித்து, சமீபத்தில் தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையிலான அதிகாரிகள், முக்கிய நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. நீர்நிலைகளில் முளைத்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு, வடிகால்களில் தடையில்லாமல் மழைநீர் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஆலோசனை கூட்டம்


அதே போல், சென்னையில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், பருவமழைக்கு முன், மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 'பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, மழைக்கு முன்னதாக பணிகளை முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு கமிஷனர்கள் உத்தரவிட்டனர்.


உத்தரவு


இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மழைக்கால பணிகளை கண்காணிக்க, மண்டல வாரியாக, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து துறைகளும், துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்கவும், ஒருங்கிணைந்து பணியாற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில், மழைக்கால வெள்ள தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.


latest tamil news
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி என்ன?


* முன்னெச்சரிக்கை பணிகளுக்கு திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
* தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
* பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல்.
* வெள்ளநீரை அகற்ற மோட்டார் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.
* பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
* சீரான போக்குவரத்தை உறுதி செய்தல்.
* மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகுத்தல், போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்திருத்தல்.
* வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையான இடத்திற்கு ராணுவம், கடற்படை, புவியியல் ஆய்வு மையம் மற்றும் பேரிடர் மீட்பு குழு உதவியை நாடுவது.
* மக்களுடன் இணைந்து தேவையான பணிகளை மேற்கொள்ளுதல்.


முக்கிய துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்!

சென்னை மாநகராட்சி: மழைநீர் வடிகால், நீர்வழித்தடங்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சியின், 16 சுரங்கப்பாதைகள், நெடுங்சாலை துறையில் ஆறு சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கினால், மோட்டார் வாயிலாக நீர் அகற்றுதல் மற்றும் சுரங்கபாதையை சுற்றி, மழைநீர் வெளியேறும் வடிகால்களை துார்வாரி சுத்தப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை: மழைநீர் கடலில் கலக்கும் எண்ணுார் கழிமுக பகுதி, நேப்பியர் பால முகத்துவாரம், அடையாறு முகத்துவாரம் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரங்களில் தேவையான அளவிற்கு அகலப்படுத்த வேண்டும். மழை காலங்களில் அவசர தேவைக்காக கனரக பொக்லைன் இயந்திரங்களை முகத்துவாரத்தில் தயார் நிலையில் நிறுத்த வேண்டும். வீராங்கல் ஓடை, வேளச்சேரி உபரிநீர் கால்வாய், ரெட்டேரி உபரிநீர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை துார்வாரவும், ரெட்டேரி, கொளத்துார் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும்.
வருவாய் துறை: வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, தற்காலிக தங்கும் முகாம்களை கண்டறிந்து, அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தற்காலிக முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை வழங்க மாநகராட்சி தயார் நிலையில் இருக்க வேண்டும். நீர்நிலைகள் அல்லது நீர்நிலைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அகற்ற வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மூன்று இடங்களில், குறுக்கு பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, பருவமழைக்கு முன் முடிக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் வடிகால்களை துார்வார வேண்டும்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
30-செப்-202112:58:01 IST Report Abuse
தத்வமசி இது ஒரு தகிடு தத்தம். மழைகால ஏற்பாடுகள் என்பது வெட்டிச்சிலவு. காரணம் பல. ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிடம் வெள்ள நீரால் பாதிப்பு இல்லாமல் இருக்க நகர அமைப்பில் என்ன செய்தது ? அதிக மழை, புயல், வெள்ளம் என்றால் அதை தடுக்க வழிமுறைகளை வகுக்கலாம். சாதாரணமான மழையை, அதனால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் தேவையா ? எந்த திட்டமும் இல்லாமல் அம்பத்தாண்டு கால ஆட்சி கரைந்துள்ளது. மழைநீர் வடிகால் முறையை சரியான முறையில் அமல் செய்யவில்லை. ஆறு, ஏரி, குளம் ஆக்கிரமிப்பு முதலியவை இன்றைய அவலத்திற்கு காரணம். இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதால் இவர்களின் குற்றம் வெளியே தெரியவில்லை. அதை பற்றி எந்த முன்கலப்சும் பேசுவதில்லை. இல்லையென்றால் கப்பம் வராது. சாதாரண மழைக்கே நகரில் வெள்ளம் புகுந்து விடுவது, சாலைகளை நீர் ஆங்காங்கே தேங்கி தொல்லை கொடுப்பது, கொசு, ஈ, பூச்சிகள் நிறைந்த நீர் தேக்ககங்கள், சரியான குடிதண்ணீர் கடைக்காதது, மோசமான சாலைகள், லாரிகளின் பின்னால் மக்கள் ஓடுவது, நகரின் நடுவே இருக்கும் இரண்டு சிறிய நதிகளை சாக்கடையாக வைத்திருப்பது, மிகப்பெரிய நீர்வழி போக்குவரத்தாக இருந்த பக்கிம்காம் கால்வாயை மொத்தமாக மூடி வைத்திருப்பது என்பதெல்லாம் திராவிட ஆட்சியின் ஐம்பதாண்டு கால சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X