படமாகிறது சுரங்கத்தொழில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

படமாகிறது சுரங்கத்தொழில்

Added : செப் 30, 2021
Share
படமாகிறது சுரங்கத்தொழில் சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கத்தொழில், அரசுக்கே வேட்டு வைத்ததை மக்கள் இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள். அரசியல் மற்றும் அரசை அல்லோல, கல்லோமாக்கிய சுரங்கத்தொழிலை மையமாக வைத்து, கன்னடத்தில் சேனாபுரா என்ற பெயரில், திரைப்படம் தயாராகிறது. சில உண்மை சம்பவங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத்தொழிலை

படமாகிறது சுரங்கத்தொழில்

சில ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கத்தொழில், அரசுக்கே வேட்டு வைத்ததை மக்கள் இப்போதும் மறந்திருக்க மாட்டார்கள். அரசியல் மற்றும் அரசை அல்லோல, கல்லோமாக்கிய சுரங்கத்தொழிலை மையமாக வைத்து, கன்னடத்தில் சேனாபுரா என்ற பெயரில், திரைப்படம் தயாராகிறது. சில உண்மை சம்பவங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத்தொழிலை படமாக்குவது, இதுவே முதன் முறையாகும். இதில் அனன்யா பட், நாயகியாக நடித்துள்ளார். கதை, கதாபாத்திரத்தை கேட்டதும் இவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

தயாரிப்பாளர்கள் மறுப்பு

'துனியா' விஜய் இயக்கிய, சலகா, சுதீப்பின் கோடிகொப்பா - 3திரைப்படங்கள், தசராவையொட்டி அக்டோபர் 14ல் திரைக்கு வருகின்றன. இரண்டு ஸ்டார் ஹீரோக்களின் படங்கள், ஒரே நாளன்று திரைக்கு வருவது, ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஆனால் இரண்டு படங்களை, ஒரே நாளில் வெளியிட வேண்டாம் என சினிமா ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். மூத்த நடிகர் சிவராஜ் குமாரும் கூட இதையே கூறினார். ஆனால் தயாரிப்பாளர்கள் பொருட்படுத்தவில்லை. தசராவில் திரையிட பிடிவாதமாக உள்ளனர். தொடர்ந்து விடுமுறை வருவதால் லாபம் கிடைக்குமென்பது அவர்களின் எண்ணமாகும்.

தயங்காத நடிகையர்

நடிகர் கிருஷ்ணா, நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நிஷ்விகா நாயுடு, மேகா ஷெட்டி என இரு நாயகிகள் நடிக்கின்றனர். இது முக்கோண காதல் கதை. இப்படத்தில் சாது கோகிலா, ரங்காயணா ரகு, தபலா நானி உட்பட பலர் நடிக்கின்றனர். இமேகா ஷெட்டி தற்போது டிரிபல் ரைடிங் படத்தில் நடிக்கிறார். இது தவிர மேலும் இருபடங்களிலும், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். நிஷ்விகா நாயுடுவும் சளைத்தவர் அல்ல. சக்கத் , குரு சிஷ்யரு படங்களில் நடித்து முடித்து, புதிய படத்துக்கு தயாராகிறார். கதை நன்றாக இருந்தால் இரண்டு நாயகிகள் படத்தில் நடிக்க நடிகையர் தயங்குவதில்லை.

அரசு 'கிரீன் சிக்னல்!'

கன்னட திரையுலக 'ஜாம்பவான்' ராஜ்குமார் பேத்தியும், நடிகர் ராம்குமார் மகளுமான தன்யா நடித்த முதல் திரைப்படம் நின்ன சனிஹகே, அக்டோபரில் 8ல் திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்தின் 'டீசர், டிரெய்லர்' வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. பாடல்களும் கூட அருமையாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும், திரைக்கு வர கொரோனா முட்டுக்கட்டையாக இருந்தது. திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளை நிரப்பும் வாய்ப்புக்காக, படக்குழுவினர் காத்திருந்தனர். அரசின் கிரீன் சிக்னல் கிடைத்ததால் படத்தை வெளியிடதயாராகின்றனர்.

வயது 31 ஆச்சு!

கடந்த 2015ல் மலையாளத்தில் திரைக்கு வந்த கோஹினுார் மூலம், தன் திரையுலக பயணத்தை துவங்கியவர் நடிகை ஷிரத்தா ஸ்ரீநாத். கன்னடத்தில் இவர் அறிமுகமான யு டர்ன் திரைப்படம், அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பிசியான நடிகையாக உள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் நித்யா என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் தயாராகும் கலியுகம் என்ற படத்தில் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன், 31வது பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறினர்.

மகிழ்ச்சியில் திளைப்பு!

இரண்டாவது ஊரடங்குக்கு பின், திரைக்கு வந்த முதல் கன்னட திரைப்படம் கலிவீரா.இப்படம் 50வது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுவதால், படக்குழுவினர் குஷியடைந்தனர். இப் படத்தின் மூலம் அபிமன்யு, ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டானதால், மகிழ்ச்சியில் திளைக்கிறார். பழங்குடியின இளைஞர் ஒருவர், தன் சமுதாயத்துக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து பழிக்கு பழி வாங்குவதே திரைக்கதையின் சாராம்சம். இவருக்கு ஜோடியாக அனிதா பட் நடித்துள்ளார்.

மொய்த்தனர் ரசிகர்கள்!

கிளாமர் நடிகை லட்சுமி ராய், கன்னடத்தில் மிஞ்சின ஓடா, ஸ்நேஹனா ப்ரீத்தினா, வால்மீகி என சில படங்களில் நடித்தவர். தற்போது ஜான்சி ஐ.பி.எஸ்.,ஆனந்த பைரவி, காங்ஸ்டர் 21 பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் சின்ட்ரெல்லா என்ற திகில் படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் மொய்த்து, போட்டோ எடுத்துக்கொண்டனராம்.பெலகாவி, லட்சுமி ராய் சொந்த ஊராகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X