கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு குடிநீர், மின் இணைப்பு கிடையாது: அரசு தகவல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:'நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு, தண்ணீர், மின்சார இணைப்பு வழங்கக் கூடாது; முன்னுரிமை அடிப்படையில், ஆட்சேபனைக்கு உரிய ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளித்து உள்ளது.சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி,

சென்னை:'நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு, தண்ணீர், மின்சார இணைப்பு வழங்கக் கூடாது; முன்னுரிமை அடிப்படையில், ஆட்சேபனைக்கு உரிய ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளித்து உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அறிக்கை

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீர்நிலைகள், வனங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தை தலைமை செயலர் கூட்டினார். அதில், சேதம் விளைவிக்கக் கூடிய; உடனடியாக அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்; கால்வாய், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் என வகைப்படுத்தப்பட்டன.

கால்வாய், நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு தண்ணீர், மின் இணைப்பு வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் கவனம் இல்லாமல் இருக்கும் அதிகாரிகள் பொறுப்பாக்கப்படுவர்.நீர் ஆதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை, தொழிற்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான விரிவான செயல் திட்டத்தை, பொதுப்பணித் துறை வடிவமைக்கும். ஆட்சேபனைக்கு உரிய ஆக்கிரமிப்புகள் என அடையாளம் கண்டு, அவற்றை முதல் கட்டமாக அகற்ற முன்னுரிமை அளிக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


9,802 ஆக்கிரமிப்புகள்

வெள்ளம் வரும் போது, கரை, மதகுகளை சேதம் விளைவிக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்ற முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. சென்னையைத் தவிர்த்து மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளைச் சேர்ந்த 585 நீர்நிலைகளில் 9,802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள 4,624 ஆக்கிரமிப்புகளை அகற்ற, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களின் சர்வே எண்களை, பூஜ்யம் மதிப்பிலான அரசு நிலம் என குறியிட்டு, பத்திரப் பதிவுத் துறைக்கு, வருவாய் அல்லது பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுப்புவர். பூஜ்யம் என மதிப்பிடுவதால், பதிவுத்துறை கணினி அந்த விபரங்களை ஏற்காது.


சட்டத் திருத்த மசோதா

மோசடியாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டால், அதை ரத்து செய்ய பத்திரப் பதிவு ஐ.ஜி.,க்கு அதிகாரம் வழங்க வகை செய்து, சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நீர்நிலையின் துல்லியமான நிலையை, மாவட்ட கலெக்டர்கள் கண்டறிய முடியும்.

எனவே, ஆக்கிரமிப்புகளின் நிலை குறித்து ஆராய, ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இதையடுத்து, வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X