கோவை : கோவையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிகாரி, விமானப்படை 'கஸ்டடி'யில் விசாரிக்க ஒப்படைக்கப்பட்டார்.கோவை, ரெட்பீல்ட்ஸில் உள்ள விமானப்படை கல்லுாரியில், விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற, 28, வயது பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ் ஹர்முக், 29, பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார், அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில், 27ம் தேதி அமித்தேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை, விமானபடை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோரி, விமானப்படை சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். விமானப்படை அதிகார எல்லைக்குள் சம்பவம் நடந்துள்ளதால், கைதான நபரை, விமானப்படை விசாரணை அதிகாரிகள், 'கஸ்டடி'யில் ஒப்படைக்க வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்களிடம் ஒப்படைக்கப் படுவதாகவும் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர். மேலும், அமித்தேஸை, ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கவும் அனுமதி கேட்டு இருந்தனர். மனு தொடர்பாக உத்தரவு நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.அதன்படி அமித்தேஸை நேற்று மதியம் 2:00 மணிக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி திலகேஸ்வரி, கைதான அமித்தேசை விமானப்படை அதிகாரிகள் கஸ்டடியில் விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, நேற்றிரவு 7:10 மணிக்கு விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷ் ஒப்படைக்கப்பட்டார்.
'டு பிங்கர் டெஸ்ட்'
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி போலீசில் அளித்த புகாரில், 'விமானப்படை மருத்துவமனையில் எனக்கு இரண்டு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இருவிரல்கள் முறையில் -டு பிங்கர் டெஸ்ட் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முறை, 2014ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டது என்ற தகவல் எனக்கு பின்னர் தான் தெரிந்தது. பாலியல் பலாத்கார புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால், போலீசாரிடம் புகார் அளிக்கிறேன்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார்களை வைத்து, கோவை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக, இந்திய விமானப்படை முதன்மை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பாதிக்கப்பட்ட விமானப்படை பெண் அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட, 'டு பிங்கர் டெஸ்ட்' முறையில் விமானப்படை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததாக கிடைத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது அறிவியல்பூர்வமற்ற சோதனை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற முடிவை மீறிய இந்த செயல் தனிமனித உரிமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE