புதுடில்லி : 'நெடுஞ்சாலைகளில் ஏன் எப்போதும் போராட்டங்கள் நடக்கின்றன' என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 'சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை' என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து டில்லிக்கு 20 நிமிடத்தில் சென்ற எனக்கு, இப்போது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிறது.
விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
![]()
|
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கவுல், சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: விவசாயிகள் போராட்டம் நடக்கும் போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஏன்? இதை தடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ள சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வாயிலாகவோ, பார்லிமென்ட் விவாதங்கள் வழியாகவோ தீர்வு காணலாம். நெடுஞ்சாலைகளை மறிப்பதால் தீர்வு காண முடியுமா? இந்த போராட்டத்துக்கு முடிவு தான் என்ன? இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.நடராஜ் கூறியதாவது:
விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார். நீதிபதிகள் கூறுகையில், 'வழக்கில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு தான் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் பின் அதுபற்றி பரிசீலிப்போம்' என்றனர். இதை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏற்றுக் கொண்டார். விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.