புலிகளை காப்பது இயற்கை சமநிலையை பாதுகாக்கும்! விழிப்புணர்வு பேரணியில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலிகளை காப்பது இயற்கை சமநிலையை பாதுகாக்கும்! விழிப்புணர்வு பேரணியில் தகவல்

Added : அக் 01, 2021
Share
ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், மத்திய அரசின் 'அசாத்கா அம்ரூத் மகா உத்சவ்' வாகன பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நாட்டின் தேசிய விலங்காகவும், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதுமான புலிகளை காப்பது குறித்து, அரை நுாற்றாண்டாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு
 புலிகளை காப்பது இயற்கை சமநிலையை பாதுகாக்கும்!  விழிப்புணர்வு பேரணியில் தகவல்

ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், மத்திய அரசின் 'அசாத்கா அம்ரூத் மகா உத்சவ்' வாகன பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் தேசிய விலங்காகவும், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் முன்னிலையில் இருப்பதுமான புலிகளை காப்பது குறித்து, அரை நுாற்றாண்டாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மத்திய அரசு,'அசாத்கா அம்ரூத் மகா உத்சவ்' என்ற பெயரில், இந்தியா முழுவதும் உள்ள புலிகள் காப்பக பகுதிகளில், வனம் மற்றும் வன விலங்குகள் காப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்காக, 7,500 கி.மீ., துாரத்துக்கு, 'புலிகளுக்கான இந்தியா' என்ற தலைப்பில் வாகன விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.இந்த பேரணி, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வந்தது. புலிகள் காப்பகம் சார்பில், பேரணியை வரவேற்கும் விதமாக, என்.ஜி.எம்., கல்லுாரியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், தேசிய புலிகள் ஆணையத்தின் தென் மண்டல ஐ.ஜி., முரளி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி கோட்ட கள இயக்குனர் கணேசன், திருப்பூர் கோட்ட கள இயக்குனர் தேஜஸ்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், உலகில் உள்ள ஒட்டுமொத்த புலிகளின் எண்ணிக்கையில், 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது. புலிகளை காக்க, நாடு முழுக்க, 51 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர் வாகன பேரணி, அனைத்து காப்பகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி, பந்திப்பூர் காப்பகத்தில் நிறைவடைய உள்ளது.

உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலிகளை காப்பதும், அவற்றின் வாழ்விடங்களை காப்பதும், புலி வேட்டை, அவற்றின் தோல், பற்கள், நகங்களை சட்ட விரோதமாக வர்த்தகம் செய்வதை முற்றிலும் தடுப்பது இன்றியமையாதது. புலிகளை பாதுகாப்பது, இயற்கையின் சமநிலையையும், பல்லுயிர் சங்கிலி உடையாமல் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடுமலை

திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில், மாவட்ட எல்லையான, தேவனுார்புதுார், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை கிராமங்களில், நோட்டீஸ் வினியோகித்தும், பலுான்கள் பறக்க விட்டும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆர்.ஜி.எம்.,பள்ளியில் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

கரட்டுப்பதி பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது.மேலும், தன்னார்வ குழு சார்பில், வனத்தீ ஏற்பட்டால், நடக்கும் தீங்குகள், வன விலங்குகள் பாதிப்பு குறித்து, பாடல் மற்றும் நடன விழிப்புணர்வு நடந்தது. மேலும், வேட்டை தடுப்பு காவலர்களின், புலியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர் கணேஷ்ராம், வனச்சரகர்கள் தனபாலன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X