பொது செய்தி

தமிழ்நாடு

பதுக்கிய மண், செங்கல் பறிமுதல் செய்ய வேண்டும்! தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கூட்டுக்குழு பரிந்துரை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை தடாகம் செங்கல் சூளைகளில், சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள மண் மற்றும் செங்கல் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கூட்டுக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில், அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றுக்காக, பட்டா மற்றும் அரசு நிலங்களில், 100

கோவை தடாகம் செங்கல் சூளைகளில், சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள மண் மற்றும் செங்கல் பறிமுதல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கூட்டுக்கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில், அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றுக்காக, பட்டா மற்றும் அரசு நிலங்களில், 100 முதல் 150 அடி வரை அத்துமீறி மண் அள்ளப்பட்டு வந்தது. இயற்கை நீரோடைகள் அழிக்கப்பட்டன. காற்று மாசு, துாசு காரணமாக, மக்கள் பலவிதமான நோய் பாதிப்புக்கு ஆளாயினர்.இந்த விதிமீறல் குறித்து, 'தினமலர்' நாளிதழில் ஐந்து நாட்கள் தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரையை, தேசிய பசுமை தீர்ப்பாயம் சுயமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக கூட்டுக்கமிட்டி அமைத்து, அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.கோவை கலெக்டர் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உதவிப் பொறியாளர் ஆகியோரைக் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகள் மற்றும் மண் அள்ளப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தது.கனிம வளம் திருட்டுகூட்டுக்குழுவின் அறிக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கடந்த 22ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 'தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் எதற்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. விதிமீறல் நடந்துள்ளது. கனிம வளம் திருடப்பட்டுள்ளது. கோவை வடக்கு தாசில்தார் அளித்துள்ள அறிக்கையில், செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மண் எங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. சட்டவிரோதமாக மண் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மண் மற்றும் செங்கல் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தயார் நிலையிலுள்ள செங்கல்களை பறிமுதல் செய்ய கோவை வருவாய் கோட்டாட்சியர், சிறப்பு நீதிமன்றத்திடம் அனுமதி கோர வேண்டும். அதற்கு சுரங்கத்துறை உதவி இயக்குனர் உதவ வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாரி அனுமதி இல்லைவடமாநிலங்களில் செங்கல் சூளைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட ஜிக்ஜாக் டெக்னாலஜி, தடாகம் செங்கல் சூளைகளில் பின்பற்றப்படவில்லை. குடியிருப்பு, பழத்தோட்டம் ஆகியவற்றில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் சூளைகள் இருக்க வேண்டும்; இரண்டு சூளைகளுக்கு இடையில் ஒரு கி.மீ., இடைவேளை கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு தொகுப்பாக இருக்கக்கூடாது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இவற்றை அமைக்கவே கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபரங்கள் அனைத்தையும் தொகுத்துத் தந்துள்ள கலெக்டர் சமீரன், தனது தனிப்பட்ட அறிக்கையில், 'குவாரி அனுமதி தரவில்லை. அனைத்து சூளைகளும் சட்டவிரோதமாக இயங்கியுள்ளன.

அவை அனைத்தும் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள மண், செங்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.அக்., 10க்குள் அறிக்கைகூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில், 'இந்த சூளைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவரை வைத்து ஆய்வு செய்து, வரும் அக்டோபர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த சூளைகளின் மீது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர், சுரங்கத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.செங்கல் கடத்தல் துரிதம்தடாகம் பகுதி செங்கல் சூளைகளில் இருந்து இரவு முழுவதும் வேகவேகமாக செங்கல்கள் கடத்தப்படுகின்றன. இதற்கு துடியலுார், தடாகம் போலீசாருக்கு ஒரு லாரிக்கு 1,000 ரூபாய் வீதம் லஞ்சம் தரப்படுகிறது.
பெரும்பாலான லாரிகளில் பிரிக்ஸ் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. பிடித்தாலும் பெயர் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இந்த மறைப்பு வேலை நடந்துள்ளது.'தினமலர்' கட்டுரை உண்மைதேசிய பசுமை தீர்ப்பாயத்திடம், சோமையம்பாளையம் கிராம ஊராட்சி சார்பில் தரப்பட்டுள்ள பதில் மனுவில், 'தினமலர் நாளிதழ் தொடர் கட்டுரையில் சொல்லப்பட்டது அனைத்தும் உண்மை. இந்த சூளைகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 1,300 ரூபாய் தொழில் வரி செலுத்தி வந்தன. அதுவும் 2019ம் ஆண்டுக்குப் பின் செலுத்தவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2,600 ரூபாய் செலுத்திவிட்டு, இந்த கிராம ஊராட்சிகளில் இருந்த விலைமதிக்க முடியாத கனிம வளத்தை கொள்ளையடித்துள்ளனர்.-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X