போலி சான்றிதழில் ஆசிரியர் பணி: ஆவணங்கள் ஆய்வுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழில் ஆசிரியர் பணி: ஆவணங்கள் ஆய்வுக்கு உத்தரவு

Added : அக் 01, 2021
Share
சென்னை:ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளின் அசல் சான்றிதழ்களை எடுத்து வரச் சொல்லி, அவற்றை சரிபார்த்த பின், நியமன ஆணை வழங்கப்படுகிறது.அவை உண்மையிலே சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் கல்வி

சென்னை:ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளின் அசல் சான்றிதழ்களை எடுத்து வரச் சொல்லி, அவற்றை சரிபார்த்த பின், நியமன ஆணை வழங்கப்படுகிறது.அவை உண்மையிலே சம்பந்தப்பட்ட பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதில்லை. பணியில் சேர்ந்த பின், இரண்டு ஆண்டுகளுக்குள், அசல் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க உத்தரவிடப்படுகிறது.இந்த பணிகளும் முறையாக நடக்காததால், போலி சான்றிதழ்களில் வேலைக்கு சேர்ந்த பலர், இன்னும் பணியில் உள்ளனர். இதில், அவ்வப்போது சிலர் பிடிபட்டு கைதாவது வாடிக்கையாகி உள்ளது. இதன்படி, தஞ்சை மாவட்டத்தில், இரண்டு ஆசிரியர்கள் கடந்த வாரம் பிடிபட்டுள்ளனர்.ஒரத்தநாடு தாலுகா, பனையக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை வரலாற்று ஆசிரியராக பணியாற்றிய வசந்தகுமார் மற்றும் வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை தமிழ் ஆசிரியராக பணியாற்றிய சவுந்தரராஜன் ஆகியோர், போலி சான்றிதழில் வேலையில் சேர்ந்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் ஆய்வு செய்து, இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், 20 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரின் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்கள், உண்மையில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X