தமிழ் எழுத்தாளர்களை தலை நிமிரச் செய்தவர் டி.வி.ஆர்.,

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021
Share
Advertisement
உலகில் உள்ள பல மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து சிதைந்து ஆய்வாளர்கள் மட்டும் அணுகும் வகையில் ஒதுங்கிவிட்டன.ஆனால் தமிழ் மட்டுமே அதன் தன்மை மாறாது வளர்ந்து நிற்கிறது.இதற்கு பலரும் தங்களது உழைப்பை அறிவை ஆற்றலை பொருளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது கால நேரம் பார்க்காது வாரி வழங்கி மொழியை வளப்படுத்திக் கொண்டே இருந்ததுதான் முக்கிய காரணம்.அப்படி ஒரு நிலையில்





latest tamil news


உலகில் உள்ள பல மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து சிதைந்து ஆய்வாளர்கள் மட்டும் அணுகும் வகையில் ஒதுங்கிவிட்டன.ஆனால் தமிழ் மட்டுமே அதன் தன்மை மாறாது வளர்ந்து நிற்கிறது.இதற்கு பலரும் தங்களது உழைப்பை அறிவை ஆற்றலை பொருளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது கால நேரம் பார்க்காது வாரி வழங்கி மொழியை வளப்படுத்திக் கொண்டே இருந்ததுதான் முக்கிய காரணம்.
அப்படி ஒரு நிலையில் இருந்தவர்தான் இன்று 113 வது பிறந்த நாள் காணும் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். தனது இறுதிக் காலம் வரை பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் பரிவும், பாசமும் கொண்டு அன்பு செலுத்தி, அவர்களையும் அவர்கள் மூலமாக மொழியையும் வளமுற செய்தார்.மொழி வளர்ச்சி பழைய தலைமுறையோடு நின்று விடக்கூடாது, இளம் தலைமுறை யினரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொள்ள முன்வர வேண்டும் என்றும் தணியாத ஆவல் கொண்டு செயல்பட்டார்.


latest tamil news


மூத்த மொழி என்பது மொழிக்கு பெருமை தருமே தவிர அதன் வளர்ச்சிக்கு உதவாது அந்த மொழி மக்கள் மொழியாக மாறவேண்டும் என்பதில் டி.வி.ஆர்.,தீர்மானமாக இருந்தார்.இதன் காரணமாக நாகர்கோவிலில் தமிழ் அறிஞர்கள் மாநாட்டை நடத்தி பல அறிஞர்களை வரவழைத்து பேசவைத்தார்.
எல்லா மாநாடுகளும் சென்னையை மையமாக வைத்து நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டி.வி.ஆர்.,தமிழ் எழுத்தாளர்களின் ஆறாவது மாநில மாநாட்டை மே 31, ஜூன் 1, 1958ல் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடத்தினார்.இதற்காக பல பொறுப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.
தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்ட மக்கள் நாம் எப்பேர்பட்ட வளமையான மொழியின் கீழ் உள்ளோம் என்று நினைத்து நினைத்து பெருமைப்பட வேண்டும் அதற்கு தமிழ் அறிஞர்கள் பலரது பேச்சைக் கேட்க வேண்டும்.தமிழ் அறிஞர்கள் இருக்கும் இடத்திற்கு மக்களை அழைத்துக் கொண்டு போகமுடியாது ஆனால் மக்கள் இருக்கும் இடத்திற்கு அறிஞர்களை அழைத்து வரமுடியும் என்பதால் இந்த மாநாட்டை இங்கு நடத்துகிறேன் என்று காரணமும் சொன்னார்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் அதிகம் காரணம் மலையாள மக்கள். இந்த மக்களிடம் வலிய தங்கள் மொழியை திணித்து தமிழை மறக்கவும் மழுங்கடிக்கவும் முற்பட்டனர்.
எதன் மீது அழுத்தம் அதிகமாகிறதோ அது வெடித்து கிளம்பும் என்பது போல தமிழை அழிக்கவும் ஒழிக்கவும் எடுத்த முயற்சிகளைக் கண்ட தமிழ் மக்கள் தம் மொழிக்கு ஆதரவாக நின்றனர் அதற்காக டி.வி.ஆர்.,மாநாட்டை கூட்டுகிறார் என்றதும் திரண்டனர்.
தாய்த் தமிழகத்துடன் இணைந்துவிட்ட குமரி மாவட்டம் பற்றி இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் முழுக்கவனம் செலுத்துவர்; அவர்கள் எழுத்து வன்மையால் குமரி மாவட்டம் பல துறைகளில் முன்னேற்றம் காணும் என்று முழுக்க முழுக்க நம்பினார். இதனால் மாநாட்டில் அவரது துவக்க உரையே சிறப்பாக இருந்தது.
எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இங்கு தோன்றியிருக்கின்றனர். ஸ்ரீமான்கள் கே.என்.சிவராஜபிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவ தானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம். கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், புகழ் பரப்பிக்கொண்டிருக்கும் டி.கே.எஸ்.சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே. நீலத்திரைக் கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி எங்களை எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கிறாள். நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்தி ருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போதுதான் தமிழகத்தோடு இணைய முடிந்தது. மலையாளச் சூழ்நிலையில் இருந்தும் கூட, இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தாளர்கள் யார் என்று பார்ப்போமாயின், கம்பரும் காளிதாசனும் மட்டுமல்ல ஒரு சிறிய பத்திரிகைக்கு எழுதுபவரும் எழுத்தாளரே. தமிழ் எழுத்தாளர்கள் பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலாகக் கூடச் சொல்லாம். புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழ்நாட்டில் கல்வியறிவு இன்று மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூடப் பரவவில்லை. அப்படியிருந்தும், தமிழ் தின, மாத, வாரப் பத்திரிகைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கு நூறு என்ற கல்விநிலை எய்திவிட்டால் எழுத்தாளர்கள் ஒய்வு எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அவர்களுக்கு ஒளிவீசும் எதிர்காலம் அப்பொழுது உண்டு.
இவற்றை நன்றாக உணர்ந்துதான் புதிய வழிகளை நமக்கு பாரதியார் காட்டினார். 'நறை செவிப் பெய்தன்ன' என்ற கம்பனின் சொற் றொடரை, 'தேன் வந்து பாயுது காதினிலே' என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்று அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும்.
விஞ்ஞானத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொழுது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒருவித தடுமாற்ற நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி, நல்ல உருவில் அமைந்து விடும். ஆரம்ப காலத்தில், வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு ஒரு மணிப்பிரவாள நடையாகத்தான் தமிழில் வசனமும் இருந்தது. இப்பொழுது அந்த நடை முற்றிலும் மாறித் தனக்கென ஒர் உயர்ந்த பாணியில் மிளிருகிறதல்லவா .
வாளைப் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல், ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவோம் என்று விரதம் கொள்ளுவோமாக. தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நமது கடமை; அதைச் செய்தே தீருவோம்.
இந்திய மொழிகளில், எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு. இலக்கிய வளம் நிறைந்தது தமிழ். இனிமை மிக்கது தமிழ் மொழி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக் கோவை போல் தடைபடாத, விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி சிறிதும் மாறவில்லை.எழுத்தறிவில்லாதவர்கள் கூடத் தமிழ்க் காவியங்களைப் பிறர் படிக்கக் கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடியப் பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. இந்தக் காரணத்தால்தான் உலகின் எந்த மொழியையும் விடத் தமிழ்மொழி சிறந்ததெனக் கருதப்படுகிறது என்று, தமிழ் மொழி பற்றி தமது கருத்துக்களைக் கூறினார்.
தொடர்ந்து எழுத்தாளர் கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் மொழி வழியாய் வெளியிட வேண்டும் என்று கூறி தமிழ் தன் உயிருக்கு நேர் என்று சொல்லாமல் சொல்லிய டி.வி.ஆர்., புகழ் பாடுவோம் அவர் விரும்பியபடி தமிழை உயர்த்திப்பிடிப்போம்.
-எல்.முருகராஜ்.
நன்றி:கடல் தாமரை (தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,வாழ்க்கை வரலாறு புத்தகம்)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X