சென்னை :'நீதிபதி செல்லும் வாகனத்தை தடுப்பு போட்டு மறித்தது போல, முதல்வர், அமைச்சர்கள் செல்லும் வாகனத்தை, போலீசார் தடுத்து நிறுத்துவார்களா' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 93 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், நேற்று நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு முதல்வர் வருகையை ஒட்டி, அடையாறு பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பயணித்த காரும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால், உயர் நீதிமன்றத்துக்கு தாமதமாக வந்தார்.
தமிழக உள்துறை செயலரை, காணொலி வாயிலாக பிற்பகலில் ஆஜராகும்படி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, உள்துறை செயலர் பிரபாகர் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி கூறியதாவது:
நிகழ்ச்சி குறித்து காலை 9:30 மணிக்கு தெரிந்த உடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை, என் நேரடி உதவியாளர் தொடர்பு கொண்டார். உயர் நீதிமன்றம் செல்லும் போது வாகனம் மறிக்கப்படக் கூடாது என, அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான் வந்த கார் மறிக்கப்பட்டது. இரும்பு தடுப்புகளால் சாலையை மறித்துள்ளனர். இதனால், 25 நிமிடங்கள் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தேன். என்னை பணியாற்ற விடாமல் தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.
நான் சென்ற வாகனத்தை மறித்தது போல, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதல்வர், அமைச்சர்களின் வாகனங்களை, போலீசாரால் மறிக்க முடியுமா. போலீசாரின் இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்காக, நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால், நான் விரும்பவில்லை.
இதுபோன்ற செயல், எதிர்காலங்களில் நடக்கக் கூடாது. முதல்வர், அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதே போல் நீதிபதிகளையும் நடத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதையடுத்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக உள்துறை செயலர் கூறினார். எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றும், அவர் உறுதி அளித்தார்.