செய்திகள் சில வரிகளில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

Added : அக் 02, 2021
Share
வால்பாறை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்களுக்கு முககவசங்களை வழங்கி பிரம்ம குமாரி கற்பகம் பேசுகையில், 'வால்பாறையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வால்பாறை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்களுக்கு முககவசங்களை வழங்கி பிரம்ம குமாரி கற்பகம் பேசுகையில், 'வால்பாறையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள். மக்களை பாதுகாப்பதிலும், சுகாதாரத்தை பேணிக்காப்பதிலும், துாய்மை பணியாளர்களின் பங்கு மிகப்பெரியது. எனவே நீங்கள் அனைவரும் இறைவனுக்கு ஒப்பானவர்கள். இறைவனை தியானம் செய்வதால் மன அமைதி பெறும்.

நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறிது நேரம் இறைவனுக்காக ஒதுக்கி தியானம் செய்தால், உங்கள் வாழ்வில் துன்பம் விலகி போகும். இவ்வாறு, அவர் பேசினார்.பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி மடத்துக்குளம் அருகே மெட்ராத்தியில் நடந்த, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துமிக்க தானியங்கள் திட்டத்தில், பயிர் சாகுபடி சார்ந்த தொழில்நுட்ப பயிற்சியில்,ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம், தானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பது, குறைந்த பாசனநீர் தேவையுள்ள ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்றும் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் இந்திரா பிரியதர்ஷினி, தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா, உதவி வேளாண்மை அலுவலர் பாலு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.தொழில் பழகுனர் பயிற்சி தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தில், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறையுடன் இணைந்து, 'அப்ரண்டிஸ்' சேர்க்கை முகாம், வரும் 6ம் தேதி நடக்கிறது.தேர்வு செய்யப்படும் நபருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொண்டு இளைஞர்கள் பயன்பெறலாம்.
விபரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை, 98947 83226, 94990 55700 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கண் சிகிச்சை இலவச முகாம்தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கப்பளாங்கரை ஊராட்சி மற்றும் தி.மு.க., கிளை சார்பில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது.
கோப்பனுார்புதுார் காமாட்சி வித்யா பள்ளியில், காலை 9:00 முதல் பகல் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. கோவை, ஆர்.எஸ்.புரம், 'தி ஐ புவுண்டேசன்' மருத்துவமனை டாக்டர்கள் குழு பங்கேற்று, பரிசோதிக்கின்றனர்.சிகிச்சை தேவைப்படுவோர் கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். பயன்பெற விரும்புவோர் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்குரிய பயிற்சிகளை உடனடியாக நடத்தவும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் பதவி உயர்வு, தேர்தல் நடத்திய செலவின நிதியும், தேர்தல் மதிப்பூதியத்தையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தயானந்தன் தலைமை வகித்தார். வட்ட கிளை தலைவர் வைரவேல், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், ஆறுமுகசாமி, ஓய்வு பெற்றோர் சங்கம் தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மடத்துக்குளத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொறுப்பாளர் காளிமுத்து தலைமை வகித்தார்.கல்லுாரியில் காந்தி ஜெயந்தி விழாஉடுமலை, அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.காந்திமன்றம் சார்பில் நடந்த விழாவில், சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முன்னதாக, உதவிப் பேராசிரியர் சுமித்ரா, வரவேற்றார். முதல்வர் (பொறுப்பு) லட்சுமிபிரியா, காந்தியின், சுதந்திர போராட்ட வாழ்க்கை முறை, அகிம்சை உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவியர் இடையே விளக்கினார்.கம்ப்யூட்டர் மேம்பாட்டுத்துறை தலைவர் வைரமுத்து, தமிழ்த்துறை தலைவர் பிரியா, சுமித்ரா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பப்பாளி சாகுபடியில் ஆர்வம்
மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், கிணற்றுப்பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாகக்கொண்டு சாகுபடி நடக்கிறது. தற்போது பராமரிப்பு குறைவாகவும் பாசன நீர் சேமிக்கும் வகையிலும் உள்ள பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பிப்., முதல் அக்., வரை இந்த சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். ஆண்டு முழுவதும் இந்த பழத்திற்கு தேவைஉள்ளதால் வீணாவதில்லை. அருகிலுள்ள மாநிலங்களுக்கும் லாரிகள் வாயிலாக அனுப்பப்படுவதால் குறிப்பிட்ட வருவாய் வழங்கி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாகுபடியாக உள்ளது' என்றனர்.

குட்டையில் முட்புதர் அகற்றும் பணி

கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தடுப்பணை மற்றும் மழை நீர் சேமிப்பு குட்டை முட்புதர்களால் சூழப்பட்டும், மண்மேடாகவும் காட்சி அளிக்கிறது.

வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு, முட்புதர்களை வெட்டி அகற்றி, குட்டை மற்றும் தடுப்பணையை துாய்மை படுத்தும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை ஊராட்சி தலைவர்ரத்தினசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
தொழிற்சங்கம் அரசுக்கு கோரிக்கை
வால்பாறை சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில், 'அம்மா' உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கூட்டம், சங்க பொது செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் பேசினார்.'அம்மா' உணவக ஊழியர் சங்க(சி.ஐ.டி.யு.,) தலைவராக சிவகாமி, செயலாளர் ைஷலஜா, பொருளாளர் செல்வா, துணைத்தலைவராக ரேணுகா, துணைத்தலைவராக சந்திரமதி ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

'அம்மா' உணவகத்தில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.; காலநிலை ஊதியம் வழங்க வேண்டும். தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தொற்று பரவலை தடுக்க ரோந்து குழுகோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது, வருவாய்த்துறையினர் வாகன ரோந்துக்குழு அமைத்து கண்காணித்து வந்தனர். கூட்டமாக இருக்கும் கடைகளை கண்காணித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதங்களாக இந்த குழுக்கள் செயல்படாமல் உள்ளன.இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதை தவிர்த்து, அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தாசில்தார்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மீண்டும் வாகன ரோந்துக்குழுக்கள் அமைத்து, கண்காணிப்பை பலப்படுத்தவும், கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைபடுத்தவும்உத்தரவிடப்பட்டுள்ளது.ரத்த தானம் வழங்க விழிப்புணர்வு பொள்ளாச்சியில், தன்னார்வலர்கள் மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை சார்பில், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

கொரோனா பரவலுக்கு பின், ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.இதனால், அவசர காலத்தில் மாற்று ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ரத்த வங்கிகளிலும், ரத்த வகைகளில் இருப்பு சரிந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சேவை நோக்கம் உள்ளவர்களிடையே, அச்சத்தை போக்கி, ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நேற்று முன்தினம், ரத்த தான தன்னார்வ குழுக்கள் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து, பஸ் ஸ்டாண்ட் முன் துண்டுப்பிரசுரம் வழங்கியும், பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X