தாம்பரம், ஆவடியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம்; ஏ.டி.ஜி.பி.,க்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்| Dinamalar

தமிழ்நாடு

தாம்பரம், ஆவடியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம்; ஏ.டி.ஜி.பி.,க்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : சென்னையில், தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக பதவி, வரலாற்று சிறப்பு மிக்கது. பிரிட்டீஷ் ஆட்சியில், 1856ல், முதல் போலீஸ் கமிஷனராக போல்டர்ஸன் நியமிக்கப்பட்டார்.
தாம்பரம், ஆவடியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம்; ஏ.டி.ஜி.பி.,க்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

சென்னை : சென்னையில், தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கூடுதல் டி.ஜி.பி.,க்கள் ரவி மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக பதவி, வரலாற்று சிறப்பு மிக்கது. பிரிட்டீஷ் ஆட்சியில், 1856ல், முதல் போலீஸ் கமிஷனராக போல்டர்ஸன் நியமிக்கப்பட்டார். குற்றம் அதிகரிப்புசென்னை கமிஷனராக, கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் இருப்பவர் தான் நியமிக்கப்பட வேண்டும்.அந்த வகையில், சமீபத்தில் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர், தற்போது டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, கமிஷனராக நீடித்து வருகிறார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., உள்ளது. இதில், 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் வந்து செல்வோரை கணக்கிட்டால், 1.20 கோடி பேருடன் சென்னை இயங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப, கொலை, கொள்ளை என, குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் துறை, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும், 135 காவல் நிலைய எல்லைகளுடன் செயல்படுகிறது. தனியாக, 35 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.


கடும் போட்டி


சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, குன்றத்துார், ஆவடி, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகள், ரவுடிகளின் ராஜ்ஜியமாக மாறி வந்தது. சொத்து அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து குற்றங்களும் அப்பகுதியில் அரங்கேறி வந்தன.இதனால், 2008ல் தி.மு.க., ஆட்சியின் போது, பரங்கிமலையை தலைமையிடமாக கொண்ட புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இதன் கீழ், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் கொண்டு வரப்பட்டன. முதல் கமிஷனராக ஜாங்கிட் நியமிக்கப்பட்டார்.

அதன் பின், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கலைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறை, ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், 'தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்படும்' என, அறிவித்தார். அதற்கு முன்னதாக, தாம்பரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய போலீஸ் கமிஷனர் பதவிகளை பிடிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை உருவாக்க, சிறப்பு அதிகாரியாக காவல் துறை தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை உருவாக்க, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.


வேகம்


இவர்கள் புதிய போலீஸ் கமிஷனர்கள் என்பதால், சக அதிகாரிகள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிறப்பு அதிகாரிகள் நியமனம் மூலம், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.தாம்பரம், ஆவடி கமிஷனர் அலுவலகம், தலா நான்கு காவல் மாவட்டங்களுடன் செயல்பட உள்ளன. சென்னையை ஒட்டியுள்ள, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில காவல் நிலையங்கள் புதிய கமிஷனர் அலுவலகத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X