கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அந்த புலி நேற்று, காலை மசினகுடி பகுதிக்கு சென்றது. வனத்துறையினர், மசினகுடி மன்றாடியார் வனப் பகுதியில் தேடினர். மசினகுடி, கல்குவாரி அருகே , மாடு மேய்த்துக் கொண்டிருந்த , குறும்பர் பாடியை சேர்ந்த , மங்களபசுவன், 85, என்பரை தாக்கி கொன்றது.
ஆத்திரம் அடைந்த மக்கள், இறந்தவர் உடலை எடுக்க விடாமல் தடுத்ததுடன், புலியை சுட்டு கொல்ல வலிறுத்தி மசினகுடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து புலியை சுட்டு கொல்ல தலைமை, முதன்மை வன உயிரின காப்பாளர் சேகர்குமார்நீரஜ் உத்தரவு வழங்கினர். இது குறிந்த தகவலை வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, மசினகுடி பகுதியில் புலியை தேடி சுட்டு கொல்லும் பணியை இன்று காலை துவங்கினர். முதலில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்யப்படும். அது முடியாத பட்சத்தில், சுட்டுக்கொல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புலியை எவ்வாறு அடையாளம் காணலாம்
வனத்துறையினர், புலியின் உடலில் உள்ள வரிகளை வைத்து அடையாளம் காண்பார்கள். ஒரு புலியின் உடலில் உள்ள வரிகள், வேறு புலியின் உடலில் அதேபோன்று இருக்காது. அதன் அடையாளம் மாறும். இதன்படி ஆட்கொல்லி புலி அடையாளம் காணப்பட்டுள்ளது. புலி, மசினகுடியில் தற்போது பதுங்கியுள்ள இடம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ளது. இதனால், அதிரடிப்படையினர் தவறுதலாக வேறு புலியை சுட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பின் போது, ஆட்கொல்லி புலியின் அடையாளத்தை காண்பித்த வனத்துறையினர், முதலில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் புலியை சுட்டுப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஊட்டி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் ஏற்கனவே தலா ஒரு புலி சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.