100 சதவீத குடிநீர் இணைப்பு: வெள்ளேரி கிராம மக்களுடன் பிரதமர் கலந்துரையாடல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

100 சதவீத குடிநீர் இணைப்பு: வெள்ளேரி கிராம மக்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (24)
Share
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த வெள்ளேரி பஞ்., நடந்த கிராம சபா கூட்டத்தில், காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி ஆரணி பட்டு பெருமை பற்றி கேட்டறிந்தார்.இந்தியா முழுவதும், கடந்த, 2016 - 2017ம் ஆண்டு, ஜல் ஜீவன் மிஷன், (அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை, 100 சதவீதம் செயல் படுத்தியதற்காக, தமிழ்நாடு, மணிப்பூர், குஜராத்,
பிரதமர்,மோடி, திருவண்ணாமலை

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த வெள்ளேரி பஞ்., நடந்த கிராம சபா கூட்டத்தில், காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி ஆரணி பட்டு பெருமை பற்றி கேட்டறிந்தார்.


latest tamil news
இந்தியா முழுவதும், கடந்த, 2016 - 2017ம் ஆண்டு, ஜல் ஜீவன் மிஷன், (அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை, 100 சதவீதம் செயல் படுத்தியதற்காக, தமிழ்நாடு, மணிப்பூர், குஜராத், உத்தரகாண்ட், மற்றும் உ.பி., ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வெள்ளேரி கிராமம் தேர்வு செய்யப்பட்டது. இந்த கிராமத்தில், 414 வீடுகள் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு, தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பஞ்., உள்ள ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளை துார்வாரப்பட்டு, நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்தை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பஞ்., தலைவர்களிடம், பிரதமர் மோடி காணொளி மூலம் பேசினார். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெள்ளேரி கிராம பஞ்., தலைவர் சுதா மற்றும் கிராம மக்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:


பிரதமர்:


சுதா ஜி பல வருடங்களாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன், நான் எப்போதும் தமிழகத்தை மிகவும் கவுரவமாக பார்த்து கொண்டிருக்கிறேன். கிராமத்தில் எப்படிப்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் கூறுங்கள். உங்கள் ஊரில் ஆரணி பட்டு மிகவும் பெருமையாக கேள்விப்பட்டிருக்கிறேன், அதை பற்றி தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.


சுதா:


எங்கள் ஊரிலே, 20 வீட்டுக்கு பட்டு தறி நெய்கிறோம், ஆரணியிலேயே பட்டுதான் பிரபலம், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்கிறோம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.


பிரதமர்:


இப்போது உங்களுடைய கிராமத்தில், தண்ணீருக்காக, மிகவும் சிரமப்படக்கூடிய நிலையிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது, இதன் மூலமாக ஆரணி பட்டு உற்பத்தியில், வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, பட்டு உற்பத்தியில் நேரத்தை செலவீடுகிறீர்களா?


சுதா:


நேரம் மிச்சமாகிறது. மற்ற வேலைகளுக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்கிறோம். இந்த தண்ணீரால், முதலில் எல்லாம் நாங்கள் கஷ்டப்படுவோம். வரிசையில் நின்று பிடிப்போம். இப்போது அதெல்லாம் இல்லாமல் வீட்டிற்குள்ளே நாங்கள் நீரை பிடித்து கொண்டு பயனுள்ள மற்ற வேலைகளை பார்க்கிறோம். அதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


பிரதமர்:


உங்கள் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சென்னை மக்களுக்கு குடிநீர் மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது, நீண்ட கால தேவைக்காக, தண்ணீரை சேமிக்க நீங்கள் ஏதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா?


சுதா:


அதற்காக 2 செக் டேம் கட்டியுள்ளோம், ஏரி, குளங்கள் துார் வாரி உள்ளோம். பண்ணை குட்டைகளை அமைத்துள்ளோம். மழை நீரை சேகரித்துள்ளோம். வருகின்ற வெயில் காலங்களில், பயன்பாட்டிற்கும் வைத்திருக்கிறோம்.


பிரதமர்:


உங்களுக்கும், உங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், உங்களுடைய நண்பர்களுக்கும், இப்படிப்பட்ட சீரிய முயற்சிக்காக, என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், நன்றி.


சுதா:


நான் தலைவியாக வந்ததும், தண்ணீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த பாராட்டு எல்லாம் உங்களையே சாரும். நன்றி வணக்கம்.


பிரதமர் :


நீங்கள் அனைவரும் இந்த திட்டத்தை, மிக திறம்பட செயல்படுத்தி பெண்களுடைய வாழ்க்கையை இனிமையாக்கியிருக்கிறீர்கள், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கிடைத்திருக்கிறது. உங்களுடைய ஆசீர்வாதங்கள், எங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும், உங்களுக்கு நான் எப்போதும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த முயற்சி எப்போதும் உங்கள் கிராமத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


சுதா


வணக்கம், எங்கள் பாராட்டுக்கள் எல்லாம், உங்களையே சாரும்

நிகழ்ச்சியில், மாநில குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news
தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜல்ஜீவன் மற்றும் ஜல்ஜீவன் இயக்க மொபைல் செயலிகளை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அறிமுகம் செய்தார். பின்னர் பிரதமர் பேசியதாவது: ஜல்ஜீவன் என்பது மக்கள் அனைவருக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான திட்டம் மட்டும் அல்ல. அனைவரும் பங்கேற்க செய்யும் மிகப்பெரிய இயக்கம் ஆகும்.

இது கிராமங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் இயக்கப்படும். பொது மக்கள் பங்கேற்பு மற்றும் பெரிய இயக்கமாக மாறியதே இந்த திட்டத்தின் அடித்தளமாக உள்ளது. இதன் அனைத்து தகவல்களும் ஜல்ஜீவன் செயலியில் உள்ளது.


latest tamil news

70 ஆண்டுகளை காட்டிலும்கடந்த 2019ம் ஆண்டு வரை 3 கோடி வீடுகளுக்கு பைப் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஜல்ஜீவன் திட்டம் துவக்கப்பட்ட பின்னர் இந்த எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்தது. சுதந்திரம் பெற்ற பின்னர் 70 ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2 ஆண்டுகளில் அதிகபணிகள் செய்துள்ளோம். ரயில்கள் மற்றும் டாங்கர்கள் மூலம் நாட்டின் ஒரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நிலை ஏற்படக்கூடாது. இதனை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கழிவு மேலாண்மை அமைப்பை சுமார் 2 லட்சம் கிராமங்கள் துவங்கியுள்ளன. 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன. காதி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தன்னிறைவு இயக்கத்தை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது.

கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் நாம் குடிநீர் அளிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு, நான் குஜராத் முதல்வராக இருந்த போதே முன்னுரிமை அளித்தேன். குடிநீரை சேமிப்பதற்காக மக்கள் தங்களது பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். கிராமங்களின் வளர்ச்சியை சார்ந்தே நாட்டின் வளர்ச்சி இருக்கும். 1.5 லட்சம் சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளது. கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பயோ காஸ் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம். . இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X