நாமக்கல்லில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழை; வெள்ளக்காடானது பள்ளி?பாளையம்| Dinamalar

தமிழ்நாடு

நாமக்கல்லில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழை; வெள்ளக்காடானது பள்ளி?பாளையம்

Added : அக் 02, 2021
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒரே நாளில், 512.60 மி.மீ., மழை பதிவானது.தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெயில் வாட்டி வதைத்தது. மழை வரும் என மக்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒரே நாளில், 512.60 மி.மீ., மழை பதிவானது.


தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெயில் வாட்டி வதைத்தது. மழை வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, இரவில் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மோகனூர் பகுதியில் நேற்று காலை, 9:00 மணி வரை மழை நீடித்தது. மோகனூர்-ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில், வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நின்றது. அதன் காரணமாக அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும், நேற்று மாலை, 4:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு: எருமப்பட்டி, 20, குமாரபாளையம், 71.40, மங்களபுரம், 12, மோகனூர், 36, நாமக்கல், 9, ப.வேலூர், 24, புதுச்சத்திரம், 58, ராசிபுரம், 108.20, சேந்தமங்கலம், 4, திருச்செங்கோடு, 92, கலெக்டர் அலுவலகம், 7, கொல்லிமலை, 71 என, மொத்தம், 512.60 மி.மீ., மழை பதிவானது.

ஆறாக மாறிய பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கன மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவும் அதிகரித்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, வழக்கத்தை விட நீர்நிலைகளுக்கு, ஓடை, வடிகால், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் அதிகளவு வரத் தொடங்கியது. இது மெல்ல மெல்ல அதிகரித்து சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஆறாக சென்றது. பஸ் நிறுத்தம், நான்கு சாலை பிரிவு, பாலம் சாலை, சங்ககிரி சாலை, திருச்செங்கோடு சாலை ஆகிய பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் சென்றது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், பழைய மேம்பாலம் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்தது. சங்ககிரி சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. பஸ் நிறுத்தம் மற்றும் சாலைப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை. குடியிருப்பு பகுதியில் காலை 10:00 மணிக்கு மேல் தண்ணீர் குறைய துவங்கியது. வெடியரசம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்தில் தண்ணீர் புகுந்தது. களியனூர் ஓடை குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மேற்பரப்பில் தண்ணீர் சென்றதால், மணல்காடு, அஞ்சுகம்நகர், சுண்டகாடு ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சில்லாங்காடு, தொட்டிபாளையம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. காவேரி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை நுழைவு பாலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழையால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து, பாலத்தை நோக்கி வெள்ளம் பாய்ந்தது. பள்ளிபாளையம் பகுதியில் தொட்டிபாளையம் ஏரி, சில்லாங்காடு ஏரி போன்றவைகள் நிரம்பி முழு அளவில் தண்ணீர் வெளியேறியது. தவிர, அங்குள்ள சிறிய குட்டை, ஏரிகள் நிரம்பியும், உடைந்தும் போனதால், பாலத்தை நோக்கி, இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால், பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கொக்கராயன்பேட்டையை சுற்றி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கீழ்காலனியில் செல்லும் மூன்று வழித்தடத்திலும் தண்ணீர் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோட்டில்...: திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் உள்ள மசூதி தெரு பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகளிலும், சூரியம்பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சூரியம்பாளையம் முனியப்பன் கோவில் இரண்டாவது தெரு பகுதியில் ஜீவானந்தம், முத்து, செல்லம்மாள், ராஜாம்பாள், ராமலிங்கம் உள்பட ஐவரது ஓட்டு வீடுகள் கன மழையால் சரிந்து சேதமாகின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X