சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கையில் வெண்ணெய் இருக்க...

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கையில் வெண்ணெய் இருக்க...எஸ்.கிருஷ்ணன், பறக்கை, கன்னியாகுமரியிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'நீதி துறையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். சட்ட கல்லுாரியிலும் அதே அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.பெண்களுக்கு நீதி துறையில் 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும்


கையில் வெண்ணெய் இருக்க...



எஸ்.கிருஷ்ணன், பறக்கை, கன்னியாகுமரியிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'நீதி துறையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். சட்ட கல்லுாரியிலும் அதே அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
பெண்களுக்கு நீதி துறையில் 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.பெண்களுக்கான ஒதுக்கீடு சமாசாரம் நம் நாட்டில் சந்திக்கும் அவலங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.பார்லிமென்ட் உறுப்பினர்கள் எண்ணிக்கையில், 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மசோதா, 1996ல் தேவகவுடா பிரதமராக இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நாளது தேதி வரையில் அந்த மசோதா கிடப்பில் தான் போடப்
பட்டுள்ளது.இந்த திட்டம் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் கனவு திட்டம். ஆனாலும் இந்த மகளிருக்கான 33 சதவீத ஒதுக்கீட்டை, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆதரிக்கும்; ஆளுங்
கட்சியானால் எதிர்க்கும். பா.ஜ.,வைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்று, அவரும் தோற்று போனார். அவரது பா.ஜ.,வைச் சேர்ந்த உமாபாரதியே அந்த மசோதாவை முழு மூச்சாக எதிர்த்தார்.
இந்த விஷயத்தில், எதற்காக மசோதா தாக்கல் செய்து அது பார்லிமென்டில் நிறைவேறி சட்டமாவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும்?ஒவ்வோர் அரசியல் கட்சியும், தேர்தல்களில் 50 சதவீதம் பெண் வேட்பாளர்களாக நிறுத்தினால் போதுமே. அந்த 33 சதவீதத்தையும் கடந்து, அதிகளவில் பெண் உறுப்பினர்கள் பார்லி.,க்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படுமல்லவா?ஏன் அதை செய்யாமல் அரசியல் கட்சிகள் வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றன?மறைந்த, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2016ல் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்றியும் விட்டார்.
கோளாறு அதன் பின் தான் அரங்கேற ஆரம்பித்தது. எந்த அரசியல் கட்சியிலும், 50 சதவீத வேட்பாளர்களாக நிறுத்தும் அளவுக்கு, பெண் உறுப்பினர்கள் இல்லை.எனவே, கட்சி பிரதிநிதியின் மனைவி அல்லது மகளை வேட்பாளராக நிறுத்தி, அந்த 50 சதவீத வேட்பாளர்களை பூர்த்தி செய்து தேர்தலை எதிர் கொண்டனர்.விஷயம் அதோடு முடிவடையவில்லை.வெற்றி பெற்று பதவியில் பெண்கள் ஒப்புக்கு அமர செய்து, ஆண்களே நிர்வாகத்தை நடத்த துவங்கினர். இன்றும் அதே நிலை தான் நீடிக்கிறது.சட்டக் கல்லுாரிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து விடலாம். ஆனால், அந்த 50 சதவீத இடங்களை பூர்த்தி செய்ய பெண்கள் ஆர்வமாக வந்து சேர வேண்டுமல்லவா?
அரசு பள்ளியை மூடி விடாமலிருக்க, ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று, பிள்ளைகளை அழைத்து வந்து, மாணவர் சேர்க்கை நடத்துவர்.அது போல, சட்டக் கல்லுாரி பேராசிரியர்களும் வீடு வீடாக சென்று மாணவியரிடம், 'வழக்கறிஞர் படிப்பில் சேருங்கள்' என, 'கேன்வாஸ்' செய்து கொண்டிருக்க முடியுமா? நடக்கிற காரியமா அது?நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்குவது எளிது.உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, அரசு நேரடியாக நியமனம் செய்யும் வழக்கமில்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ள, 'கொலீஜியம்' என்ற குழு தான், நீதிபதிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்கிறது.அந்த குழு, 50 சதவீதம் பெண்களுக்கு என பார்த்து சிபாரிசு செய்தால், விஷயம் முடிந்தது. அவ்வளவு தானே...இதற்கு எதற்காக பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்? அதை நிறைவேற்ற ஆண்டுக்கணக்கில் போராட வேண்டும்?
கையில் வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைவாருண்டோ?


துாங்கியவன் தொடையில் கயிறு திரிக்கலாம்!



செ.சாந்தி, மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய பின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என கூறி வருகிறது.இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ஒன்றாம் பகுதியில், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; அதாவது ஆங்கிலத்தில், 'யூனியன் ஆப் ஸ்டேட்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.கூட்டரசு என பொருள் தரும், 'பெடரேஷன்' என்ற வார்த்தைக்கு பதிலாக, சில பயன்பாடுகள் காரணமாக, 'யூனியன்' என்ற சொல் அரசியலமைப்பு சட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் அதிக புலமை வாய்ந்த தி.மு.க., வினர், 'யூனியன்' என்ற வார்த்தையை, 'ஒன்றியம்' என நேரடி மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக வந்த ஆங்கிலேயர், நம் நாட்டை அடிமைப்படுத்தினர். நில வரி நிர்வாகத்தை மேற்கொள்ள, 1773ல் ஒரு ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தினர்.
கடந்த 1794ல் சென்னை கவர்னராக இருந்த லார்டு ஹோபர்ட் ஆட்சிக் காலத்தில், பாளையக்காரர்களுக்கு பதிலாக, கலெக்டர் மூலம் நேரடியாக வரி வசூல் செய்யப்பட்டது. 'கலெக்டர்' என்றால், 'வரி வசூல் செய்து கொடுப்பவர்' அல்லது 'தண்டலாளர்' என்று தான் பொருள். காலப்போக்கில் பின்னால் வந்த அரசுகள், வரி வசூல் செய்யும் கலெக்டர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுத்து, மாவட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தன. அதுவே அவர்களை, 'மாவட்ட ஆட்சியர்' என்று அழைக்க காரணமானது.'கலெக்டர்' என்றால் மாவட்ட ஆட்சியர் என அர்த்தம் கொள்வது, நம் நாட்டில் மட்டும் தான்; வேறெங்கும் அப்படி அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.மாவட்ட ஆட்சியர் என்ற பதவியின் பெயரை ஆங்கிலத்தில், 'டிஸ்ட்ரிக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர்' என்று தான் மொழி மாற்றம் செய்திருக்க வேண்டும். தி.மு.க.,வின் மொழிபெயர்ப்புபடி, 'யூனியன் ஆப் ஸ்டேட்' என்ற ஆங்கில வார்த்தை, 'ஒன்றிய அரசு' என மாறி இருக்கிறது.
அதே முறையை பின்பற்றி நாமும், 'கலெக்டர்' என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை நேரடி மொழிபெயர்ப்பு செய்து, 'தண்டலாளர்' என அழைக்கலாமே!அதன்படி கோட்டாட்சியரை, 'கோட்ட தண்டலாளர்' என்றும்; வட்டாட்சியரை, 'வட்ட தண்டலாளர்' என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கலாம். அல்லது 'பில் கலெக்டர்' எனும் வரி வசூலிப்பவர் பதவியை, 'ரசீது ஆட்சியாளர்' என்று கூட மாற்றி அழைக்கலாம்.துாங்கியவன் தொடையில் கயிறு திரிப்பது என்பது, தி.மு.க.,வுக்கு கை வந்த கலை. மக்களை ஏமாற்ற புதுப்புது யுக்திகளை கண்டுபிடிப்பர்.மாநிலத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் போது, தேவைஇல்லாத விவகாரத்தை கிளப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்புவது தான் தி.மு.க.,வின் அரசியல்!


சண்டை போட சொல்லும் அமைச்சர்!



ஆர்.தாமோதரன், பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு போனோமா, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசி ஓட்டு கேட்டோமா என இல்லாமல், தேவையில்லாதவற்றை பேசி வன்முறையை துாண்டியுள்ளார், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.'பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்தால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்' என முழங்கி இருக்கிறார்.ஊருக்குள் நுழைந்த புலியை, சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் முறத்தால் அடித்து விரட்டியதாக புலவர்கள் பாடல் எழுதி உள்ளனர்.இந்த 21ம் நுாற்றாண்டில், தமிழகத்தில் வாழும் பெண்கள் யாரும், கையில் முறத்துடன் வெளியில் செல்வதில்லை. இன்றைய நவீன கால பெண்கள் பலருக்கு முறம் என்றால் என்னவென்றே தெரியாது.
அந்த பெண்களிடம் தான், 'ஹேண்ட் பேக்' எடுத்து செல்லாவிட்டாலும் பரவாயில்லை. கையில் ஒரு முறத்துடன் பஸ்சில் செல்லுங்கள் என ஆலோசனை சொல்கிறார், அமைச்சர் துரைமுருகன். அதுவும் அந்த முறத்தால், தரக்குறைவாக நடக்கும் நடத்துனர்களை அடிக்கச் சொல்லி துாண்டி விடுகிறார். தி.மு.க., அமைச்சருக்கே, ஆட்சி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு மீது நம்பிக்கை இல்லை போலும்!போலீஸ், நீதிமன்றம் ஏதும் இனி தேவையில்லையோ?இப்போது, முறங்கள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றில் எந்த அளவிலான முறத்தை தமிழக பெண்கள் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் துரைமுருகன் கூறினால், அடிப்பதற்கு வசதியாக
இருக்கும்.பெண்கள் அடிக்கும் போது நடத்துனர்கள் திருப்பி அடிக்க கூடாது என, தி.மு.க., அரசு உத்தரவு ஏதும் பிறப்பித்து இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.எது எப்படியோ, மாநிலத்தில் சண்டை நடக்கணும் என எதிர்பார்க்கிறார்
அமைச்சர் துரைமுருகன்!


பதில் சொல்லுங்கள் அரசியல்வாதிகளே!



என்.கோவிந்தன், வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவப் படிப்பை எளிமையாக்கி இருக்கிறது, 'நீட்' தேர்வு. பல கோடி ரூபாய் கொட்டி படிக்க வேண்டிய மருத்துவப் படிப்பை, சில ஆயிரம் ரூபாயில் முடித்து, டாக்டர் பட்டம் பெற உறுதுணையாக உள்ளது இந்த தேர்வு!அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், மாணவர்களிடம் வசூல் கொள்ளையில் ஈடுபட்டன; அதை, நீட் தேர்வு தடுத்துள்ளது. அந்த அரசியல்வாதிகள், நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க முயற்சிக்கின்றனர்.நீட் தேர்வுக்கு பயந்து, மேட்டூர் அருகேயுள்ள கூழையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துள்ளார். அம்மாணவன் ஏற்கனவே இரு முறை நீட் தேர்வை எழுதி, தோல்வி அடைந்து இருக்கிறார்.இத்தேர்வுக்கு அஞ்சி, தமிழகத்தில் 12 மாணவ - மாணவியர் தற்கொலை செய்துள்ளனர்.கடந்த 12ம் தேதி, நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்; தமிழகத்தில் இருந்து, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.இந்த நீட் தேர்வு எழுத அஞ்சி, தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் தற்கொலை ஏதும் நடந்ததாக தெரிவில்லை.தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மகேஷ் உள்ளிட்டோர், தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல் கூறி, கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கி உள்ளனர்.எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்.பி., சந்திரசேகரன் ஆகியோர் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள இன்ன பிற கட்சிகள் சார்பிலும், அஞ்சலி செலுத்தப்படும். மாணவன் தனுஷின் தற்கொலையை கேலி செய்வதாக யாரும் கருத வேண்டாம். இந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் உள்ள அப்பட்டமான அரசியலை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்கொலையை அரசியலாக்கி, 'குளிர்' காய முயலும் அரசியல் கட்சிகளைப் பார்த்து, ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம்...நீட் தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து படித்து, டாக்டர் பட்டம் பெற, 1 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை தேவை.மாணவி அனிதா முதல் தனுஷ் வரையிலான குடும்பங்களுக்கு, இது போல கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்து, மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி இருந்ததா?பதில் சொல்லுங்கள் அரசியல் அலப்பறைகளே!எங்களுக்கு வேடிக்கை காட்டுகிறீங்களா?


மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்!



ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடலுாரில் கண்ணகி,- முருகேசன் ஆணவ படுகொலை சம்பவம், 2003 ஜூலை 8ல் நடந்தது. 2004ல் வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2009 மார்ச் 9ல் சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, சமீபத்தில் குற்றவாளிகளுக்கு துாக்கு மற்றும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, 17 ஆண்டுகளை கடந்து முடிவுக்கு வந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்ற வாசகம், இந்த வழக்குக்கு மிக சரியாக பொருந்தும்.தேர்தல் முடிவு சம்பந்தப்பட்ட சில வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் காலத்தில், சம்பந்தப்பட்ட பதவியின் ஆயுள் காலமே முடிந்து விடுகிறது. நம் மாநிலத்திலும் அது போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் நடந்துள்ளன.'சிவில், கிரிமினல்' என எந்த வழக்காக இருந்தாலும் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும்
வண்ணம், நம் நாட்டின் நீதி பரிபாலன நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, பெருமையான விஷயம் தான். ஆனால் நீதி கிடைப்பதில் இவ்வளவு தாமதம் கூடாது.சர்வாதிகார நாடுகளை போல உடனடியாக தண்டனை வழங்க முடியாது என்றாலும், குறைந்தப்பட்சம் ஓரிரு ஆண்டுகளில் நீதி கிடைத்தால் தான், பாதிக்கப்பட்டோருக்கு பலனோ, ஆறுதலோ கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-அக்-202116:01:14 IST Report Abuse
D.Ambujavalli முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி வழக்கு இருப்பத்தைந்து ஆண்டு கடந்து தீர்ப்பாகி உள்ளது என் ஜெயலலிதா வழக்கை இருபது வருஷம் இழுத்தடிக்க இல்லையா ? இந்த வாய்தா நாடகத்தின் சூத்ரதாரிகளே வக்கீல்கள்தான் நீதிபதிகள் கண்டித்து, எச்சரித்து உத்தரவிட்டால்தான் ஆவணங்கள், சாட்சிகளை கண்ணில் காட்டி வேகம் எடுக்கும் வழக்கம் உள்ளவரை நீதியின் நிலைமை இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X