பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : அக் 02, 2021
Share
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: நமக்கு முன், தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் நேரத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டதால், காணாமல் போய் விட்டனர். அது போல நான் செல்ல மாட்டேன். எங்களது பாதை தனித்துவமானது. இதனால் தான் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.அப்போ, 'ஸ்ட்ரெய்ட்டா' முதல்வர் பதவி தானா... கூட்டணி,

பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: நமக்கு முன், தனித்து போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் வளர்ந்து வரும் நேரத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்டதால், காணாமல் போய் விட்டனர். அது போல நான் செல்ல மாட்டேன். எங்களது பாதை தனித்துவமானது. இதனால் தான் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை.அப்போ, 'ஸ்ட்ரெய்ட்டா' முதல்வர் பதவி தானா... கூட்டணி, எம்.எல்.ஏ., - எம்.பி., பதவி, அமைச்சர் அல்லது வாரிய பதவி என எதுவும் வேண்டாமா?


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., மிகப்பெரிய அளவு வெற்றியை பெறும். அதை தடுக்க, தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடப்பதற்கு முன்பே அராஜகம் செய்யும், தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்துவரா என்ற சந்தேகம் உள்ளது.தி.மு.க.,வின் துரைமுருகன் ஏற்கனவே சொல்லிவிட்டார்... அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்றாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. எனவே, வன்முறை இன்றி தேர்தலை நடத்தும் வழியை பார்ப்பது தான் நல்லது!


அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
கொரோனா பெருந்தொற்று காலத்தில், தம் உயிரை பணயம் வைத்து, மருத்துவ சேவையாற்றிய செவிலியர்களை போராட வைத்து, தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.கொரோனா மூன்றாவது அலை எப்போது வரலாம் என காத்திருக்கிறது. எனவே, செவிலியர், மருத்துவ துறையினரை அவமதிக்க வேண்டாம்; அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டாம்!

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை, நவ.,1ல் திறப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நவ., 4ல் தீபாவளி. மக்கள் சொந்த ஊருக்கு செல்வர். வர்த்தக நிலையங்களில் கூட்டம் இருக்கும். எனவே, நவ., 1ல் திறப்பதற்கு பதிலாக, 8ல் திறப்பது பொருத்தமாக இருக்கும்.நல்ல யோசனையாகத் தானே இருக்கிறது... தமிழக அரசு பரிசீலனை செய்யலாமே!


இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
அரசியல் அமைப்புக்கு விரோதமாக மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டின் பொது சொத்துகளை, 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு, மத்திய அரசு விற்பனை செய்கிறது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது.கம்யூ.,க்களால் கேரளா தவிர்த்து, எந்த மாநிலத்திலும், மத்தியிலும் வெற்றி பெற முடியாது. மத்திய அரசு மட்டுமின்றி, எல்லா மாநில அரசுகளின் திட்டங்களில் குறை காண்பதே உங்கள் பிழைப்பாக போய் விட்டது. போங்க சார், போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க!


மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே என்னை இலங்கை வருமாறு அழைத்துள்ளார். நவராத்திரி பண்டிகையை என்னையும் அவரின் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு பற்றியும் உரையாற்ற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.தமிழக, ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு அடுத்து கிடைத்து விட்டது, ஒரு நல்ல தீனி. இதை வைத்தே, தசரா வரை ஓட்டி விடுவர்!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
ஜெ., தோழி சசிகலா தன் காரில், அ.தி.மு.க., கொடியை கட்டக் கூடாது; அது தவறான செயல். அவர் காரில் ஏதாவது கட்சி கொடியை கட்ட வேண்டும் என்றால், அவரது உறவினர் தினகரனின், அ.ம.மு.க., கட்சி கொடியை கட்டிக் கொள்ள வேண்டியது தானே?அவர் போல, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட இன்னொருவர் இது போல செயல்பட்டால் சும்மா இருப்பீர்களா... நீதிமன்றத்திற்கு போவீர்கள் தானே; அதை செய்ய வேண்டியது தானே?


ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
மாநிலம் முழுதும், அனைத்து பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில், 12 ஆயிரம் பேர் வணிகத் தொடர்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் பணிகள், அஞ்சலக வங்கிக்கு மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் வணிக தொடர்பாளர்கள் வேலையிழப்பர்; அவர்களின் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படும். மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்.சாலைப் பணியாளர்களை அ.தி.மு.க., அரசு, ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பியது போல, மத்திய அரசு செய்யாது. எனினும், முறையாக தகவல் தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்!


தமிழகத்தில் 'நீட்' குறித்து ஆராய்ந்த நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி
: போட்டி என்பது சமமாக இருக்க வேண்டும். யானை, குதிரை, குரங்கு, மீன் போன்றவற்றை ஒரே வரிசையில் நிற்க வைத்து ஓட்டப் பந்தயம் நடத்த முடியாது. அவ்வாறு நடத்துவது நியாயமாக இருக்காது. எல்லா தரப்பு மாணவர்களையும் ஒரே தரமாக, தேர்வு எழுதச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.நீங்கள் சொல்லும் யானை, குதிரை, குரங்கு, மீனுக்கு தனித்தனி இட ஒதுக்கீடுகள் உள்ளனவே. நீட் தேர்வுக்கு பிறகும், அதுவும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதே!


நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி:
எதுவாக இருந்தாலும் விஜய் என்னிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நான் சொன்னது எதுவுமே அவருக்கு புரியவில்லை. எங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விட்டார்; எல்லாமே குழப்பமாக போய்விட்டது.எல்லா வீடுகளிலும் இப்படித் தான் சார்... பெரியவர்கள் பேச்சை, இளைஞர்கள் எங்கே கேட்கின்றனர்... தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் செயல்படுகின்றனர். எனினும் உங்கள் வீட்டில், வழக்கு போட்டதெல்லாம் கொஞ்சம் 'ஓவர்' தான்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X