சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'மாஜி'யின் உதவியாளர் வீட்டில் விரைவில் 'ரெய்டு?'

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'மாஜி'யின் உதவியாளர் வீட்டில் விரைவில் 'ரெய்டு?'''ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது ஊழியர்கள் கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''எந்தத் துறையில, என்ன பிரச்னைங்க...?'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''நில அளவைத் துறையில இயக்குனராக இருக்குற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அங்கே வேலை பார்க்குற கடைநிலை ஊழியர் முதல் அலுவலர்கள் வரை, எல்லாரையும்


 டீ கடை பெஞ்ச்


'மாஜி'யின் உதவியாளர் வீட்டில் விரைவில் 'ரெய்டு?'''ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது ஊழியர்கள் கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''எந்தத் துறையில, என்ன பிரச்னைங்க...?'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''நில அளவைத் துறையில இயக்குனராக இருக்குற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அங்கே வேலை பார்க்குற கடைநிலை ஊழியர் முதல் அலுவலர்கள் வரை, எல்லாரையும் மரியாதை குறைவா ஒருமையில பேசுதாரு வே...

''தமிழ்ல எதையும் எழுதிட்டு வரக்கூடாது... எல்லாம் இங்கிலீஷ்ல தான் இருக்கணுமுன்னு சொல்லுதாராம்... இதனால, அவரோட அறைக்கு போகவே ஊழியர்கள் பயப்படுதாங்க வே...

''இதுக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பார்த்து எடுத்து சொல்லியிருக்காவ... 'சரி'ன்னு சொல்லியிருக்காராம் வே...

''இதுக்கு மேலயும் அவர் தன்னை மாத்திக்கலைன்னா, போராட்டம் நடத்த வேண்டியது தான்னு ஊழியர்கள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சும்மாவா சொன்னாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எப்பவும் என் ராஜ்ஜியம் தான்னு, 'கெத்து' காட்டுறாராம் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''அவ்வளவு பெரிய, 'அப்பாடக்கர்' யாரு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருச்சி மாவட்டம், மணப்பாறையில இருக்கற மணல் கடத்தல் பிரமுகர் ஒருத்தர், கொஞ்ச நாளைக்கு முன்னாடி போலீசுக்கே 'தண்ணி' காட்டினாரே, ஞாபகம் இருக்கா பா...

''அவர் இப்பவும் மணல் கடத்தல் தொழில்ல, 'ஆரோக்கியமாக' செயல்படுறார்... மாமூல் காரணமா போலீசாரும், வருவாய் துறையினரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா..

''மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் மாதம் சுளையா 1 லட்சம் ரூபாய் மாமூல் கொடுக்குறாராம்... அதனால, தன்னை தவிர வேறு யாரையும் மணல் கடத்த விடக்கூடாதுன்னு, போலீசுக்கு அவர் உத்தரவு போட்டுருக்காரு பா...

''போலீசாரும் அவருக்கும் விசுவாசமா நடக்குறதால, மணப்பாறை மணல் கடத்தல்ல தனி ராஜ்ஜியமே நடத்துறாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''டீ இன்னும் வரலை...'' என்றபடியே கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, பள்ளிக்கல்வி துறையில பல்வேறு டெண்டர்கள்ல புகுந்து விளையாடி பல கோடி ரூபாய்களுக்கு அதிபதியானவர், துறை வி.ஐ.பி.,யின் உதவியாளர் ஒருவர் ஓய்...

''அவர், இப்பவும் தமிழக பாடநுால் கழகத்துல பயங்கர செல்வாக்குடன் வலம் வரார்... காலணி, ஸ்கூல் பேக் இந்த இரண்டுல மட்டும் வருஷத்துக்கு 300 கோடி ரூபாய் வரை டெண்டர் விட்டுருக்கா ஓய்...

''ஜெயலலிதா மறைவுக்குப் பின், நாலு வருஷமா இவர் சொல்ற நிறுவனங்களுக்கு தான் டெண்டர் குடுத்துருக்கா... அதுல கிடைச்ச கமிஷன் தொகையே, 70 கோடி ரூபாய்க்கும் மேல இருக்குமாம் ஓய்...

''இப்ப, ஆட்சி மாறினத்துக்கு அப்பறமும், தனக்கு வர வேண்டிய 10 கோடி ரூபாய் கமிஷனை கேட்டு, 'சப்ளை' நிறுவனங்களை மிரட்டறாராம் ஓய்...

''ஆட்சி மாறினால் என்ன... எனக்கு இப்பவும் 'கிச்சன் கேபினட்' வரை செல்வாக்கு இருக்குன்னு சொல்லியே மிரட்டுறாராம்... நிறைய புகார் போனதால, இவர் வீட்டுல சீக்கிரம் 'ரெய்டு' நடக்கும்ன்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''செங்கோட்டையில இருந்து என் நண்பர் சண்முகவேல் வந்துருக்கார்... நான் கிளம்புறேங்க...'' என அந்தோணிசாமி எழ, நண்பர்களும் நடையை கட்டினர்.

**************


புகார் தருவோரை 'போட்டு கொடுக்கும்' அதிகாரிகள்!


நாயர் தந்த சுக்கு காபியை சுவைத்தபடியே, ''முன்னாள் முதல்வரை படிப்படியா மறந்துட்டு இருக்காவ வே...'' என பேச்சை ஆரம்பித்தார்,அண்ணாச்சி.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சியில தான்... தேனி மாவட்டம், கம்பத்துல, தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய் சேய் நல ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் செயல்படுது... இதன் மாநில நிர்வாகிகள், லெட்டர் பேடுல, முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் தொழிற்சங்க கொடி படங்கள் மட்டும் தான் இருக்கு வே...

''முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை காணலை... தி.மு.க.,வின் தொழிற்சங்கத்தை உருவாக்கி, வளர்த்ததுல கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு... 'அவரை சங்க நிர்வாகிகள் மறந்துட்டாவளே'ன்னு, மூத்த தொண்டர்கள் புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
உடனே, ''விதிகளை மீறி நியமனங்கள் நடக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்தத் துறையில ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்ட மகளிர் திட்டத்துல, சமீபத்துல அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சமுதாய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டாங்க... முறையா பத்திரிகைகள்ல அறிவிப்பு வெளியிடாம, விதிமுறைகள் எதையும் பின்பற்றாம, பணி நியமனம் வழங்கிட்டாங்க பா...

''சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 4 லட்சம் ரூபாய் வாங்கிட்டு, காலியிடத்தை நிரப்பிட்டதா புகார் எழுந்திருக்கு... இது சம்பந்தமா, மகளிர் திட்ட இயக்குனர் ராஜ்மோகனிடம் கேட்டா, 'அதெல்லாம் எந்த விதிமீறலும் நடக்கலை'ன்னு அடிச்சு சொல்றாரு பா...

''ஆனா, இது சும்மா 'டிரெய்லர்' தானாம்... ஏற்கனவே மகளிர் திட்டத்துல பணியாற்றி, குற்ற நடவடிக்கையில ஈடுபட்டதா பணிநீக்கம் செய்யப்பட்ட சிலரை, மறுபடியும் அதே பணியில அமர்த்த முயற்சிகள் நடக்குதாம்... அந்த வகையில, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 12 பேரை, தலா 2 லட்சம் ரூபாய் வாங்கிட்டு நியமிக்க ஏற்பாடுகள் ஜரூரா நடந்துட்டு இருக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''புகார் தரவாளையே போட்டு குடுத்துடறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.

''டாஸ்மாக் ஊழியர்கள், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வச்சு விக்கறா... இதுல, ரெண்டு ரூபாய் மாவட்ட மேலாளர்களுக்கு கமிஷனா
போயிடறது ஓய்...

''இதனால, எல்லா கடைகள்லயும் மது வகைகளின் விலை பட்டியலை வைக்க உத்தரவு போட்டா... அதுல, கூடுதல் விலைக்கு வித்தா புகார் தெரிவிக்க, அதிகாரிகளின் போன் நம்பர்களும் போட்டிருக்கா ஓய்...

''அந்த நம்பர்கள்ல சிலர் 'கான்டாக்ட்' பண்ணி, புகார் தெரிவிக்கறா... சில அதிகாரிகள், தங்களுக்கு புகார் தரும் 'குடி'மகன்கள் போன் நம்பர்களை, கடை ஊழியர்களுக்கு அனுப்பிச்சுடறா ஓய்...

''சில மணி நேரத்துல, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு வர ரவுடிகள் சிலர், 'சரக்கு' வாங்க வரவாளை மறிச்சு, 'யாருடா இங்க கூடுதல் விலைக்கு விக்கறதா, அதிகாரிக்கு போன் போட்டது'ன்னு கேட்டு மிரட்டறாளாம்... இன்னும் சில இடங்கள்ல, புகார் தந்தவா போன் நம்பர்களுக்கே சில ரவுடிகள் போனை போட்டு மிரட்டறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் மவுனித்தது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-அக்-202115:48:53 IST Report Abuse
D.Ambujavalli கலைஞர், ஐந்து முறை முதல்வர் என்பதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் வேலைக்காகாது என்று விவரம் தெரிந்தவர்கள் எங்குமே வாழ்வாருக்குத்தான் மாரடிப்பார்கள் இவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X