சிலையை விட முக்கியம் வேலை!| Dinamalar

சிலையை விட முக்கியம் 'வேலை!'

Updated : அக் 04, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (6) | |
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, தடுப்பூசியால் பெருமளவு குறைந்து, மக்கள் சற்று நிம்மதியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த அந்தக் காலத்திலும் ஓய்வின்றி, சிறிதும் தொய்வின்றி செயல்பட்ட துறைகள் மருத்துவம், சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் விவசாயம் மட்டும் தான். விவசாயப் பணிகள் மட்டும்
உரத்தசிந்தனை

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, தடுப்பூசியால் பெருமளவு குறைந்து, மக்கள் சற்று நிம்மதியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த அந்தக் காலத்திலும் ஓய்வின்றி, சிறிதும் தொய்வின்றி செயல்பட்ட துறைகள் மருத்துவம், சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் விவசாயம் மட்டும் தான். விவசாயப் பணிகள் மட்டும் முடங்கி இருந்தால், நம் அனைவரின் கதி அதோ கதி தான்.
மறுக்க முடியாது


மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, ஆரோக்கியம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. எனவே, 2020ல் இருந்து உலகத்தை கொ.மு., - கொ.பி., அதாவது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று தான் வகைப்படுத்த வேண்டும்.
இத்தகைய ஒரு அசாதாரணமான சூழலில் தான், ஐந்து மாதங்களுக்கு முன், பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது தி.மு.க., விவசாயத்துக்கு என தனி பட்ஜெட், விவசாய நிலங்கள் விஸ்தரிப்பு, விவசாயிகளின் நகைக் கடன் ரத்து, விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு போன்ற பல திட்டங்களை அறிவித்தது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில், 25 கோடி ரூபாய் மதிப்பில் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும், 5 கோடி ரூபாயில் சூரிய ஒளியில் உலர்விக்கும் களங்கள் அமைக்கப்படும் என்றும் பல நல்ல அத்தியாவசியமான திட்டங்களை அறிவித்தார் முதல்வர்.அதே வேகத்தில், வ.உ.சி.,க்கு சிலை, கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம், அயோத்திதாச பண்டிதருக்கு மணி மண்டபம், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணி மண்டபம் என்று தினமும் நினைவிடங்களையும், சிலைகளையும் அறிவித்தபடி இருக்கிறது தமிழக அரசு.போதாதற்கு, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்பட 10 பேருக்கு, தலா 1 கோடி ரூபாயில் வெவ்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்படும் என்கிறார். ஏற்கனவே உள்ள பல நினைவிடங்களையும், மணி மண்டபங்களையும் புதுப்பிக்க பல கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தாராளமாக அறிவித்திருக்கிறார்.

தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றுவதிலும், அவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பதிலும் நம் பங்கு மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதை மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களாக செயல்படுத்தலாம். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தலாம். கல்வியில் மேம்பாடு, தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை இலவசம் கொடுத்து சோம்பேறி ஆக்காமல், உழைப்புக்கான வழியை காட்டி உயர்வுபடுத்தலாம்.கோவை வேளாண் கல்லுாரியில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்படுவது போல், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, அதற்கு தலைவர்களின் பெயர்களை சூட்டலாம். பள்ளிகளில் பாடத் திட்டங்களில் தியாகிகள் பற்றி அதிக தகவல்களைத் தந்து, மாணவச் சமுதாயத்தினரிடையே எழுச்சியை ஏற்படுத்தலாம்.பல தலைவர்கள், தியாகி களின் வாரிசுகள் இன்றும் கஷ்ட ஜீவனம் நடத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.,யின் வாரிசுகள் சிலர் கூலிகளாகவும், பெயின்டராகவும் வறிய வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. அந்தத் தகவல் உண்மை தான் என்பதை உணர்ந்த போது வருத்தம் பல மடங்கானது. நாட்டுக்காக தன் சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து, கொடுஞ்சிறையில் செக்கிழுத்து, தன்னலமற்று வாழ்ந்த அந்த மாமனிதரின் வாரிசுகளுக்கு இப்படி ஒரு நிலையா என்று தவித்துப் போனது மனது.


தியாகிகளின் வாரிசுநல்ல வேளை, வ.உ.சி.,யாக திரையில் நடித்தவரின் மணி மண்டபத்துக்கு, வ.உ.சி.,யின் வாரிசுகளைக் கூப்பிட்டு பெயின்ட் அடிக்காமல் விட்டனரே...எனவே, அரசு கட்டப் போவதாக அறிவித்துள்ள நினைவிடங்கள், சிலைகளுக்கு ஆகும் பணத்தை வைத்து, அவர்களுடைய வாரிசுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்.

தியாகிகளின் வாரிசு களில் தகுதியுடையவருக்கு அரசு வேலை என்பதும் வரவேற்கத்தக்க நல்ல திட்டமே.இதையெல்லாம் விட்டு விட்டு, பல கோடிகளில் சிலைகள் அமைப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மக்கள் நலன், தேச நலனுக்காகவே தங்கள் செல்வத்தையும், வாழ்வையும் அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர்கள், தங்களுக்கு மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை வீணடித்து வைக்கப்படும் சிலைகளை விரும்ப மாட்டார்கள்.அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளுக்கு எதிராகச் செய்யப்படும் இது போன்ற வீண் ஆடம்பரங்களை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை நினைவில் வைப்போம்.மேலும் சிலை வைத்து தான் மரியாதை செலுத்த வேண்டும்; தலைவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குவிக்கை இன்றளவும் நம் மக்கள் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.உண்மையில், தேனி சுற்று வட்டார கிராமங்களில் விவசாய குடும்பத்தினர் அவருக்குப் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு அவர் பெயரைச் சூட்டும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. தங்கள் வீடுகளில் அவருடைய படம் வைத்திருக்கின்றனர். பொங்கல் திருநாளில் அவரின் வாரிசுகளைக் கவுரவித்து மகிழ்கின்றனர்.மக்கள் தங்களுக்கு நன்மை செய்தவரைக் கொண்டாடவும் செய்வர்; கெடுதல் செய்வோரைத் துாக்கி எறியவும் செய்வர். எனவே, தமிழகம் பல லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் இந்த கொரோனா காலத்தில், சென்னையில் 2,500 கோடி ரூபாய் செலவில் நான்கு பூங்காக்கள், மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் என்பதெல்லாம் தேவையில்லாத திட்டங்கள்.
நினைவு மண்டபம்அதைவிட ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அத்தியாவசியமான, அறிவார்ந்த செயலாக இருக்கும். பூங்கா, நினைவு மண்டபங்களுக்குப் பதிலாக, தலைவர்களின் பெயரால் தொழிற்சாலைகளும், அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தினால், எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரும். அதனால் சமூகக் குற்றங்களும் பெருமளவு குறையும்.மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை இரட்டிப்பாகி விட்டது. விவசாய விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது, போதிய விலை கிடைக்காமல் சாலையோரங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. பால், தக்காளி, பூக்கள் போன்றவை அடிக்கடி இப்படி வீணடிக்கப்படும் போது, வேதனை தான் மிஞ்சுகிறது.அதுபோல விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்குகள் போதுமானதாக இல்லை. இதனால் பெரும் மழை, கடும் பனியில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி விடுகின்றன. சமீபத்தில் பெய்த மழையில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில், நெல் கொள்முதல் நிலையங்களைச் சுற்றி தேங்கிய மழை நீரால் நெல் மூட்டைகள் நனைந்து, நெல்மணிகள் முளைத்து விட்டன.இதற்குத் தீர்வு காணும் வகையில், அந்தந்த பகுதி யில் விளையும் விவசாயப் பொருட்களைச் சேமித்து வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கவும், தக்காளி, மாம்பழம் போன்றவற்றின் உற்பத்தி அதிகரிக்கும்போது, அவற்றை வீணாக்காமல் அதன் மதிப்பை கூட்டி பழச்சாறு, 'ஜாம்' போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யலாம்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று, முதல்வர் அறிவித்த ஆறு புதிய திட்டங்களில் விவசாய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதும் ஒன்று. 'வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் செயல்படுத்துவேன்' என்றும் உறுதி அளித்திருக்கிறார் முதல்வர்.விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவோம்.நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நுழைவுத் துாண் அமைக்கப்படும் என்று அறிவித்தபடி, பத்தே நாட்களில் சென்னையில் நேப்பியர் மேம்பாலம் அருகே, 2 கோடி ரூபாய் செலவில் நுழைவுத் துாண் எழுப்பப்பட்டு விட்டது. இந்த வேகமும், ஆர்வமும், மற்ற எல்லா திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் வெளிப்பட வேண்டும்.இதெல்லாம் விவசாயிகளின் பிரச்னை என்று நாம் ஒதுங்கி விட முடியாது. மூன்று வேளை உணவு உண்ணும் நம் எல்லாருக்குமான அத்தியாவசியமான பிரச்னை இது. இருக்கும் விளைநிலங்களை இயற்கையாக பண்படுத்தி பயனடையவும், கிடைக்கும் விளைபொருட்களைப் பாதுகாத்து, வீணாக்காமல் பயன்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம், மருத்துவம், வீடு, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வசதி களை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவது அரசின் தலையாய கடமை.
முன்னெச்சரிக்கைஅதற்காக மட்டுமே ஆளும் பொறுப்பை மக்கள் அளித்திருக்கின்றனர் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால், அது அவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, தன் ஆட்சிக் காலத்தில், தன் கட்சியின் சின்னமான யானைச் சிலையை மாநில மெங்கும் ஏராளமாக நிறுவினார்; அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விஅடைந்தார். அதற்கு அவர் இப்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


'இனி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அளித்தால், சிலைகள், நினைவிடங்கள், பூங்காக்கள் அமைப்பதில் கவனம் செலுத்த மாட்டேன். சிறப்பான ஆட்சியைத் தரவே முயற்சிப்பேன்' என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.தமிழக முதல்வர் இதை நல்லதொரு முன்னுதாரணமாக, முன்னெச்சரிக்கையாக, அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டால், அடுத்து வரும் தேர்தலிலும் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறலாம். மக்களின் மனம் என்ற கோவிலில் என்றும் அழியாத சிலையாக வீற்றிருக்கலாம்!அபிராமி


சமூக ஆர்வலர்


தொடர்புக்கு:இ - மெயில்: ikshu1000@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X