புதுடில்லி : லடாக் எல்லையில் சீனா மீண்டும் படைகளை குவித்து வருவதை அடுத்து, இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவானே அங்கு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்,
''எப்பேற்பட்ட ஆக்கிரமிப்பு சவாலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது,'' என,அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டது; இதை இந்திய ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடி முறியடித்தனர்.அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 21 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 35 பேர் பலியானதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத் துறை செயலர்கள், அமைச்சர்கள் இடையே பல கட்ட பேச்சு நடந்தது.
இதைத் தொடர்ந்து இந்தாண்டு துவக்கத்தில் இரு தரப்பும் பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றன. எனினும் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.இது தொடர்பாக இரு தரப்பு ராணுவ தளபதிகள் இடையே 13வது கட்ட பேச்சு அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இந்நிலையில் லடாக் எல்லை பகுதிகளில் சமீப காலமாக சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்கத் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'கே9 - வஜ்ரா' பீரங்கிகள்
இதைத் தொடர்ந்து இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே நேற்று முன்தினம் கிழக்கு லடாக் சென்று எல்லை நிலவரத்தை பார்வையிட்டார். எல்லையில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த அவர், ராணுவ உயரதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எம்.எம்.நரவானே அளித்த பேட்டி: கிழக்கு லடாக்கில் ஆறு மாதங்களாக அமைதி நிலவி வருகிறது. வடக்கு முனையில் இருந்து, நம் கிழக்கு எல்லை வரை குறிப்பிடத்தக்க அளவிற்கு சீன ராணுவத்தினர் உள்ளனர். இந்நிலையில் முக்கிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
படைகளை திரும்பப் பெறுவது குறித்த பேச்சு நடந்து வரும் நிலையில், சீனா, ராணுவத்தினரை குவிப்பது கவலை அளிக்கிறது.எனினும் அங்குள்ள நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகிறோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எல்லையில் எத்தகைய சவாலையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. எந்த பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி நடந்தாலும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். லடாக் பிராந்தியத்தில் முதன் முறையாக 'கே9 - வஜ்ரா' பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒருமித்த கருத்து
உயர்ந்த மலைச் சிகரங் களில் செல்லும் திறன் உள்ள இந்த பீரங்கிகள் 50 கி.மீ., துாரத்துக்கு குண்டுகளை வீசி, எதிரிகளின் இலக்கை அழிக்க வல்லவை. இந்த பீரங்கிகள் லடாக் பிராந்தியத்தில் நம் ராணுவத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்தும் சீன ராணுவம் வெளியேறும். இரு தரப்பு பேச்சு வாயிலாக இது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த வாரம் நடக்கும் பேச்சில் படைகளை விலக்குவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.