பொது செய்தி

இந்தியா

ஓராண்டில் 'கிரிப்டோகரன்சி' முதலீடு ரூ.3 லட்சம் கோடி: 21 - 35 வயதினரிடம் ஆர்வம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கியும் விரைவில் களமிறங்குகிறது

Updated : அக் 03, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள ஆர்வம் போல, தற்போது இளம் வயதினரிடையே 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இத்தகைய நாணய முதலீடுகள் சார்ந்த 'செயினலிசிஸ்' என்ற ஆய்வு நிறுவனம், கடந்த ஓராண்டில் மெய்நிகர் நாணயங்களில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு, 1,500 கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாயாக
கிரிப்டோகரன்சி, முதலீடு, ஆர்வம், அதிகரிப்பு, ரிசர்வ் வங்கி,

இந்தியர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள ஆர்வம் போல, தற்போது இளம் வயதினரிடையே 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இத்தகைய நாணய முதலீடுகள் சார்ந்த 'செயினலிசிஸ்' என்ற ஆய்வு நிறுவனம், கடந்த ஓராண்டில் மெய்நிகர் நாணயங்களில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு, 1,500 கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.குறிப்பாக, 18 - 35 வயதுடையோர் தான் அதிக அளவில் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் மெய்நிகர் நாணயங்களுக்கு வேகமாக மாறி வரும் நாடுகளில், வியட்னாம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாக்., உக்ரைன் ஆகியவை அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


மெய்நிகர் நாணயங்கள் என்றால் என்ன?


அது முகமறியா நபர்களிடையே பாதுகாப்பான வழிமுறையில் பரிவர்த்தனையாகும் கரன்சி என சுருக்கமாக கூறலாம். இந்த கரன்சி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி போன்ற ஒரு மத்திய அமைப்பு அல்லது தனி நிறுவனம் என, எதுவும் கிடையாது.பின் எதற்காக இளைஞர்கள் ஆர்வத்துடன் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்கின்றனர்; ஏனெனில், இது தங்கத்தில் முதலீடு செய்வதை விட மிகச் சுலபமானது என்பதால் தான். இதற்கான வழிமுறை மிக எளிமையானது. மின்னணு வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதைப் போல, வலைதளத்திற்குச் சென்று மெய்நிகர் நாணயங்களை வாங்கலாம்.கடந்த ஆண்டு, வங்கிகள், மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதற்கான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதை அடுத்து இவ்வகை கரன்சிகளில் முதலீடு எகிறி வருகிறது.

'கந்தர்' என்ற ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விபரப்படி நகர்ப்புற மக்களில் 16 சதவீதம் பேர் மெய்நிகர் நாணயங்களை வைத்துள்ளனர். அதில் நான்கு முக்கிய நகரங்களில் 20 சதவீதம், தனியார் வங்கி வாடிக்கையாளர்களில் 19 சதவீதம், 21 - 35 வயதினரில், 18 சதவீதம் பேர் அடங்குவர். மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வோர் 'ரிஸ்க்' எடுக்கத் தயங்காதவர்கள் எனலாம். அவர்கள் பங்குகளில் 31 சதவீதம், மியூச்சுவல் பண்டுகளில் 21 சதவீதம், வங்கி டிபாசிட்டில் 19 சதவீதம், காப்பீட்டில் 16 சதவீதம் முதலீடு செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சீனா, மெய்நிகர் நாணயங்களை தடை செய்தது.

இதன் எதிரொலியாக இந்தியாவிலும் மெய்நிகர் நாணயங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன.சீன அரசு, யுவான் கரன்சி மதிப்பை கட்டுக்குள் வைக்க மெய்நிகர் நாணயங்களை தடை செய்ததாக கூறப்படுவதை பலர் மறுக்கின்றனர். மத்திய அரசு மெய்நிகர் நாணய பரிவர்த்தனைக்கு அனுமதி அளித்து ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி னால் இச்சந்தையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்பது பலரது கணிப்பு.அதற்கேற்ப மத்திய அரசு, ரிசர்வ் வங்கி வாயிலாக மெய்நிகர் நாணய சந்தையை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரஉள்ளது.


வரி விதிப்பு


இது தொடர்பாக ரிசர்வ் வங்கியும் சில கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில், இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்த சட்டத்தில் மெய்நிகர் நாணய தொழில் சார்ந்த விதிமுறைகள், வரி விதிப்பு ஆகியவற்றை பொறுத்து பல புதுமையான கண்டுபிடிப்புகள் உருவாகலாம். தனியாரின் இத்தகைய மெய்நிகர் கரன்சிகளுக்கு ரிசர்வ் வங்கி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அதனால் மத்திய அரசின் புதிய சட்டம் இந்திய ரூபாய்க்கு நிகரான சி.பி.டி.சி., எனப்படும் டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் அதிகாரத்தை, ரிசர்வ் வங்கிக்கு வழங்கும் என தெரிகிறது. இந்த சட்டம் அமலானால் டிஜிட்டல் கரன்சி வாயிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்பதுடன் பிற பயன்களும் கிடைக்கும்.'மெய்நிகர் நாணய தொழில்நுட்பம் 2030ம் ஆண்டில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்' என, 'நாஸ்காம்' அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது, இத்துறையில் 50 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.சமீபத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், 'இந்தாண்டு இறுதி முதல் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி படிப்படியாக அமல்படுத்தப்படும்' என்றார். ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் கரன்சி என்பது 'டெண்டர்' வடிவில் இருக்கும். இது, கணினியில் சேமிக்கப்பட்டு, இணையம் வழியாக பரிவர்த்தனையாகும். இது தற்போதைய அச்சடித்த கரன்சி நோட்டு அல்லது நாணயங்கள் போல இருக்காது. அதற்கென காகிதம் அல்லது உலோகம் போன்ற திட வடிவம் எதுவும் கிடையாது.


latest tamil news


அது, இந்திய ரூபாயை போன்று பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும் கரன்சியாக இருக்கும். அதன் வடிவம் தான் வேறுபடும். உலகளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சார்ந்த கண்டுபிடிப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள், 24 மணி நேரம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.


கருவூல பராமரிப்பு


ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி புழக்கம் அதிகரித்தால், தற்போதைய ரூபாய் நோட்டு அச்சடிப்பு, போக்குவரத்து, கருவூல பராமரிப்பு, வினியோகம் போன்றவற்றுக்கான செலவு பெருமளவு குறையும்.அது போல டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளுக்கான செலவும் மிகக் குறைவாகவே இருக்கும். இந்த பரிவர்த்தனைகளை கண்காணிப்பது, தரவுகளை சேமிப்பது ஆகிய வற்றையும் சுலபமாக மேற்கொள்ளலாம்.இதுவரை வங்கிச் சேவை கிடைக்காத துறையினர் கூட நிதிச் சேவை துறையில் இணைய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி உதவும்.

இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பான பண மதிப்பை வழங்கவும், டிஜிட்டல் கரன்சி துணை புரியும்.தற்போது தனியார் மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு திடீரென ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கட்டுப்பாடு காரணமாக, அதன் டிஜிட்டல் கரன்சி மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் இருக்காது. அது போல வதந்திகள் அல்லது இதர காரணங்களால் டிஜிட்டல் கரன்சி மதிப்பிழப்பதும் தடுக்கப்படும். உலகளவில் டிஜிட்டல் கரன்சி ஏற்றுக் கொள்ளப்படும். உலகில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு சராசரியாக 55 சதவீத வளர்ச்சி அடைந்து வருகின்றன. நம் யு.பி.ஐ., வாயிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் 1 ரூபாய் கூட அனுப்ப முடிகிறது. கட்டுப்பாடற்ற 'பிட்காய்ன்' போன்ற மெய்நிகர் நாணயங்களை விட, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் நடைபெற உள்ள டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை மிகப் பாதுகாப்பானதாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.


'டாப் 5' மெய்நிகர் நாணயங்கள்உலகளவில் 'டாப் 5' மெய்நிகர் நாணயங்களில் பிட்காய்ன் 75 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்து, 'டோஜ்காய்ன், எதிரியம்' ஆகியவை முறையே, 47 சதவீதம் மற்றும் 40 சதவீத பங்குடன் உள்ளன. 'பினான்ஸ் காய்ன்' 23 சதவீத பங்கையும், எக்ஸ்.ஆர்.பி., 18 சதவீத பங்கையும் கொண்டுள்ளன. இந்தியாவில் சில்லரை முதலீட்டாளர்கள் இதுவரை பிட்காய்ன், எதிரியம், பாலிகன் உள்ளிட்ட மெய்நிகர் கரன்சிகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202114:46:54 IST Report Abuse
John Good decision by Government, this will end speculation in the name of various coins in market and keep stability in economy. If anyone can coin and leave in market means what is the value it is creating ? Blockchain technology should be used in other areas to improve economy and not like this artificial things.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X