'திராவிட' என்ற சமஸ்கிருதச் சொல்லை தாங்கியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளும், திராவிடர் கழகம் போன்ற சில இயக்கங்களும், இன்னமும் பார்ப்பனர் மீதான வெறுப்பை விதைத்தே அரசியல் செய்கின்றன. ஈ.வெ.ரா.,வுக்கு பின்பு தான் தமிழகத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது என்ற மாயையும் இவர்கள் உருவாக்கி உள்ளனர்.
பார்ப்பனர்கள் ஜாதி வேற்றுமை பாராட்டுகின்றனர் என்பது தான் பலராலும் கூறப்படும் புகார். 1800களில் இருந்தே இந்தப் புகார் உண்டு. எனவே தான், பார்ப்பனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு 1917ல் நீதிக்கட்சி துவங்கப்பட்டது; 13 ஆண்டுகள் ஆட்சியிலும் இருந்தது. கடந்த 1938ல், ஈ.வெ.ரா., நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய அவர், தேர்தல்களில் தன் கட்சி போட்டியிடுவதை நிறுத்தினார். 'பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல; ஆரிய வந்தேறிகள்' என்றனர் ராமசாமியும், அவர் வழிவந்தவர்களும்.
படைத் தளபதி
ஆரிய மதங்களெனச் சொல்லி வந்த ஜைனமும், புத்தமும், பார்ப்பனியத்தை எதிர்த்தன. ஆனால் பார்ப்பனியம் வேறு, ஆரியம் வேறு என்று தெரியாத ஈ.வெ.ரா.,வை பின்பற்றுவோர், அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதினர்.தொல்காப்பியர் காலத்துக்கு முன்பாகவே ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்து விட்டனர். கிறிஸ்துவ, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பார்ப்பனர்கள், இந்தியாவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். ஆரியர் வேறு, பார்ப்பனர் வேறென கூறியவர் தேவநேய பாவாணர். 'பார்ப்பனர் வேறு, ஆரியர் வேறு என்பதை நினைவில் கொள்வதுடன், ஆரியமும், திராவிடமும் ஒன்றே என்பதை நினைவில் கொள்க.'தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர் யாவரும் தமிழரே' என்று, 'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர் கூறியுள்ளார். அதேபோல, 'திராவிடத்தை எதிர்ப்பது தமிழ் ஒன்றே' என்கிறார் அவர். 'புதிதாய்க் கறந்த பாலுக்கும், புளித்துப் புழு புழுத்தத் தயிருக்கும் எத்துணை வேறுபாடுண்டோ, அத்துணை வேறுபாடு, தமிழுக்கும், திராவிடத்திற்குமுண்டு' எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
'ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்' என்று திருஞானசம்பந்தரும் கூறியிருக்கிறார். 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்...' என்று துவங்கும் புறநானுாற்றுச் செய்யுள், பார்ப்பனர் பற்றி குறிப்பிடுகிறது.ஆனால், தங்களை திராவிடர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஈ.வெ.ரா., வழித்தோன்றல்கள், தமிழ் மொழிக்கு தாங்களே உரிமைதாரர்கள் என்பது போல பேசுகின்றனர்.சிவாச்சாரியார்கள் தான் ஆதி சைவர்கள். சோழர்கள் ஆட்சிக் காலத்தில், அதாவது, கி.பி., 1,400 வரையிலும் தமிழ் பார்ப்பனர்கள் படைத் தளபதிகளாக கூட இருந்துள்ளனர்.சோழர்களுக்குப் பிறகு வந்த தெலுங்கு மன்னர்களும், அவர்களால் அழைத்து வரப்பட்ட பிராமணர்களும் தான் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை விதைத்தனர் என்பதை திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்ற கழகத்தினரோ பேச மாட்டார்கள்.
ஏனென்றால், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட அவர்கள், தங்களது முன்னோர்களை எப்படி குறை கூறுவர்? தமிழகத்தில் அதிகபட்சம் 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் மீண்டும் குறிவைக்கப்படுகின்றனர். ஈ.வெ.ரா., ஜாதியை ஒழித்து விட்டார் என கூறுவது உண்மையானால், கி.பி., 1900-களில் இருந்தது போல, இப்போதும், 'பார்ப்பான் பார்ப்பான்' என கூவுவது ஏன்; ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது ஏன்? தமிழகத்தில் மொத்தமுள்ள பார்ப்பனர்களில், அதிகபட்சமாக 0.25 சதவீதத்தினர் மட்டுமே, அவர்களுக்கான நியதிகளுடன் வாழ்கின்றனர்.
எத்தனையோ பேர் உண்டு
ஏனைய அனைவரும் பார்ப்பனர் என்ற அடையாளத்தை வெளிக்காட்டவே தயங்குகின்றனர். தமிழகத்தில் இப்போது எத்தனை அக்ரஹாரங்கள் உள்ளன? அக்ரஹாரம் என்று அரசு ஆவணங்களில் இருந்தாலும், அங்கு பெரும்பாலும் வசிப்பது மாற்று ஜாதியினரோ அல்லது சமயத்தினரோ தான்.கன்னடரான ஈ.வெ.ரா.,வின் அரசியலால், பாரதியார் முதல், கண்ணதாசனின் தமிழ் ஆசானான பன்மொழிப் புலவர் க.அப்பாதுரை வரை மறைக்கப்பட்ட எத்தனையோ பேர் உண்டு.
அவர்களில் சிலரை தெரிந்து கொள்ளலாம்.முதன் முதலில் ஆதித் தமிழர்களுடன் ஆலயப் பிரவேசம் செய்தவர் மதுரை வைத்தியநாத அய்யர். தேசபக்தி, பெண் விடுதலை, ஜாதி பேதமின்மை போன்ற கவிதைகளை இயற்றி, கட்டுரைகளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்த பாரதியார், பார்ப்பனர்.
பக்தி இலக்கியத்திற்கு முந்தைய பேரிலக்கியங்களை நம் கைகளில் கொடுத்தவர், 'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாதய்யர். இவர் தமிழுக்கு செய்த தொண்டை, ஈ.வெ.ரா., வழித்தோன்றல்கள் வசதியாக மறைக்கின்றனர். எனவே தான், அவர் பெயரில் இருந்த அய்யர், பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழ், தமிழர்,திராவிடம் என்ற பெயரில் அரசியல் செய்து வரும் ஈ.வெ.ரா.,வின் வழித்தோன்றல்களை விட, தமிழ்த்தொண்டு, தமிழர் வரலாறு பற்றிய ஆராய்ச்சி என, தன்னலம் பாராமல் உழைத்த பார்ப்பனர்கள் பலருண்டு.
பதிப்புரை ஆராய்ச்சி, சொற்பொழிவு, செய்யுள், மொழிபெயர்ப்பு, சமயம், மொழியியல், நுால் இயற்றல், இதழ் ஆசிரியர் பணி, பாடம் பயிற்றல், ஏடு திரட்டல், வரலாறு, இலக்கியம் என்று பல துறைகளில் முன்னோடியாகப்பணியாற்றியவர் ரா.ராகவ அய்யங்கார்.'திராவிட கவிமணி' என்று பாராட்டப்பட்ட வெ.முத்துசாமி அய்யர், 'கவியோகி' என்று போற்றப்பட்ட சுத்தானந்த பாரதியார், வைக்கம் போராட்டத்தில் சிறை சென்ற சா.து.சி.யோகியார் போன்றோரின் தமிழ்த் தொண்டு மிகப் பெரிது.'தமிழ் பத்திரிகை உலகின் தந்தை' என்று கருதப்படும் ஜி.சுப்ரமண்ய அய்யர், பண்டிதை அசலாம்பிகை அம்மையார், 'தேசபக்தன்' இதழின் ஆசிரியராக இருந்த வ.வே.சு.அய்யர், ஆதி தமிழர்களுக்கான சேவையில் பெரிதும் ஈடுபட்ட சீர்திருத்தவாதி வ.ரா.வெ.சாமிநாத சர்மா.
தயக்கம்
மது விலக்கு, ஆதி தமிழர்கள் முன்னேற்றம், நாட்டு விடுதலை, இளம் விதவைகளின் விவாகத்துக்கு ஆதரவு என்று பல முனைகளில் தன் எழுத்தால் ஆளுமை செய்த, 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, சங்கு சுப்ரமண்யம், சங்கு கணேசன் ஆகியோரும் பிராமணர்கள் தான்.'தமிழர் தென்னாட்டு பழங்குடி மக்களே' எனச் சான்று காட்டி மெய்ப்பித்த பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழரின் தென்னாட்டு பழங்குடிமையையும், தமிழின் பெருமையையும் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டிய சேஷ அய்யங்கார், வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர்.'தமிழும் வடமொழியும் வெவ்வேறு' எனச் சொல்லியவர், பரிதிமாற்கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாஸ்திரி.
'தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் பெரும்பாலானவை பிராகிருத மொழியிலானவை' என வடக்கத்தியர்கள் கூறி வந்த நிலையில், அவற்றில் மிகப் பெரும்பான்மையானவை தமிழ்க் கல்வெட்டுகளே எனும் உண்மையை உலகுக்கு உரைத்தவர், கே.வி.சுப்பிரமணிய அய்யர்.இவ்வாறு தமிழுக்காக தொண்டு செய்த பார்ப்பனர்களின் பட்டியல் மிகப் பெரிது. நாலாயிர திவ்யப் பிரபந்தம் இயற்றிய ஆழ்வார்கள், திருமுறைகளை இயற்றிய அறுபத்து மூவர் என பிரார்த்தனைகளில் தமிழை கொண்டு வந்தவர்களையும், ஈ.வெ.ரா., வழித்தோன்றல்கள் மறைக்கின்றனர்.ராமானுஜர், அவரின் காலத்தில், 'கீழ் ஜாதியினர்' என கருதப்பட்டவர்களுக்கு பூணுால் போட்டு அவர்களைப் பார்ப்பனர் ஆக்கினார்.
இதை விட சமூக நீதிக்கு என்ன செய்ய முடியும்? அயோத்திதாச பண்டிதர், வ.உ.சி., உள்ளிட்ட தலைவர்களும், பாரதியார் போன்ற பார்ப்பனர்களும், ஈ.வெ.ராமசாமிக்கு முன்னதாகவே சமூக நீதியை வலியுறுத்தியவர்கள்; அதைச் செயலிலும் காட்டியவர்கள்.ஆனால், அவர்கள் எல்லாம் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு, சமூக நீதி என்றாலே ஈ.வெ.ரா., தான் என்றொரு பிம்பத்தை சிலர் கட்டமைக்கின்றனர்.
பார்ப்பனர்கள் மட்டும் தான் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தனரா என்ற கேள்விக்கு விடை சொல்ல, ராமசாமி வழி வந்தவர்கள் தயங்குகின்றனர்.பிராமணர்கள் மட்டுமே ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர் என பொய்யாக வெறுப்பு பிரசாரம் செய்யும் கருஞ்சட்டையினர், பிராமணர்கள் எத்தனை ஆணவக் கொலை செய்துள்ளனர் என்ற பட்டியலை தர வேண்டும்.
ஏமாற்ற வேண்டாம்
மேலும், அந்த கருஞ்சட்டையினர் அவ்வப்போது, 'ஆதிக்க ஜாதி' என குறிப்பிடுவது யாரை என்பதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும்.தற்போதைய காலகட்டத்தில், மாற்று சமூக நீரோட்டத்தில் ஏறக்குறைய கலந்துவிட்ட பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்து, இன்னமும் எத்தனை காலத்துக்குத் தான் அரசியல் செய்யப் போகின்றனர்?இவர்கள் துாற்றும் பிராமணர்களில் பலர், அரசின் எந்தச் சலுகையும் இல்லாமல் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்படுகின்றனர். தற்போதைய நடைமுறை சூழலில், மிகப் பெரும்பாலான பார்ப்பனர்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனரா? பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், கணக்காயர்களை நீங்கள் சார்ந்து இருப்பதை மறுக்க முடியுமா?
போதும் இந்த வெறுப்பு அரசியல்; போதும் இந்த காழ்ப்புணர்ச்சி. இனியும் சமூக நீதி என்ற பெயரைச் சொல்லி, ராமசாமியின் வழித்தோன்றல்கள் தமிழகத்தை ஏமாற்ற வேண்டாம்!
கே.கோபிநாத் சமூக ஆர்வலர் -
தொடர்புக்கு: மொபைல்: 99626 78218