சென்னை,: தமிழகத்தில் அனல் மின் உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி கையிருப்பு, நான்கு நாள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதன்பின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின் உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு அனல் மின் நிலையங்கள் தள்ளப்படும் என்பதால், மின் வெட்டை தவிர்க்க, அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் வட சென்னை என்ற பெயரில் 1,830 மெகா வாட்; சேலம் - மேட்டூரில் 1,440 மெகா வாட்; துாத்துக்குடியில் 1,050 மெகா வாட் திறனில் அனல் மின் நிலையங்கள் உள்ளன.அவற்றில் தினமும் முழு அளவுக்கு மின் உற்பத்தி செய்வதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதில், 60 ஆயிரம் டன் நிலக்கரி, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு சுரங்கங்களில் இருந்து தினமும் வழங்கப்பட வேண்டும். அதுபோக தேவையான நிலக்கரி தனியாரிடம் வாங்கப்படுகிறது.
10 ஆயிரம் ரூபாய்
மத்திய தொகுப்பில் எடுக்கப்படும் நிலக்கரி, ஒரு சரக்கு ரயிலில் 3,750 டன் என, 16 ரயில்களில் தினமும் ஏற்றப்பட்டு, ஒடிசா, மேற்கு வங்கத்தில் உள்ள துறைமுகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.அங்கிருந்து கப்பல்களில் ஏற்றப்படும் நிலக்கரி, எண்ணுார், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு எடுத்து வரப்பட்டு, அனல் மின் நிலைய வளாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. அந்த வளாகங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட வேண்டும்.
அதனுடன், கப்பல்களில் நிலக்கரி வந்தபடி இருக்க வேண்டும். அப்போது தான், மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படாது.
மத்திய தொகுப்பில் இருந்து ஒதுக்கிய நிலக்கரியை முழுதுமாக அனுப்புவதில்லை. சர்வ தேச சந்தையில், 1 டன் நிலக்கரி விலை, 140 டாலர், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது.
பல நாடுகள், அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்க முன்வரவில்லை.இதனால், ஓராண்டாக மின் வாரியமும் அதே நிலையை பின்பற்றி வருகிறது. தமிழக மின் தேவை தினமும் சராசரியாக 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலத்தில் அதிகரிப்பது வழக்கம்.தற்போது, பல மாவட்டங்களில் மழை பெய்தாலும், பண்டிகை சீசனால் மாலை நேரங்களில் மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட் மேல் உள்ளது.
3,000 மெகா வாட்
அனல் மின் நிலையங்களில் மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்; குறைக்க முடியும். தண்ணீர் இருந்தால் தான் நீர் மின்சாரம் அதிகம் கிடைக்கும். சீசனில் தான் காற்றாலை மின்சாரம் கிடைக்கும்.எனவே, தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், அனல் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.அனல் மின் நிலையங்களில் தினமும் 3,000 மெகா வாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது, நிலக்கரி பற்றாக்குறையால், துாத்துக்குடி மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், செப்., 28 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வட சென்னை மின் நிலையத்தில் 600 மெகா வாட் திறன் உள்ள ஒரு அலகில் பழுது காரணமாக, ஒரு மாதமாகவும், 'பாய்லர் டியூப் பங்சர்' காரணமாக மற்றொரு 600 மெகா வாட் திறன் உள்ள அலகில், செப்., 29 முதலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.மற்ற மின் நிலையங்களிலும் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது, 1,800 மெகா வாட் அளவிற்கு மட்டுமே, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.நிலக்கரி வரத்தும் வெகுவாக பாதித்துள்ளதால், பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இம்மாதம், 1ம் தேதி நிலவரப்படி, துாத்துக்குடி மின் நிலையத்தில் 22 ஆயிரத்து 287 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதை பயன்படுத்தி அங்கு, ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.மேட்டூர் மின் நிலையத்தில் 96 ஆயிரத்து 500 டன் நிலக்கரி இருப்பு உள்ளது. அதை பயன்படுத்தி, நான்கரை நாட்களுக்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.
வட சென்னை மின் நிலையத்தில், இரண்டரை நாட்களுக்கு தேவையான 78 ஆயிரத்து 500 டன் நிலக்கரி இருப்பு உள்ளது.ஒட்டுமொத்தமாக, அனைத்து அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து 1.97 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே உள்ளது. அதை பயன்படுத்தி, 4 நான்கு நாட்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.நிலக்கரி இருப்பு குறைவாக உள்ள நிலையில், அவை வேகமாக காலியாகியும் வருகின்றன.
இதனால், அனல் மின் நிலையங்களில் தொடர்ந்து உற்பத்தி மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தனியாரிடம் அதிக மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தட்டுப்பாட்டை தவிர்க்க மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலக்கரி தட்டுப்பாடு, இந்தியா முழுதும் நிலவுகிறது. தமிழகத்திற்கு, கப்பல்களில் நிலக்கரி வருகிறது. அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE