காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் , காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஓட்டு சேகரித்தார்.
அவர் பேசியதாவது:இந்த தேர்தல் முதலமைச்சர், பிரதமர் பதவிக்கான தேர்தல் அல்ல; உங்களுக்கான தேர்தல். உங்கள் பகுதியில் சாலை, குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு தேவையான மத்திய - மாநில அரசு உதவிகளை பெற்று தரும் பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இருக்கிறது.அந்த உள்ளாட்சி பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும்; நன்கு பேசக் கூடியவராக, நல்லவராக, எளிதாக அணுக கூடியவராக இருக்க வேண்டும்.
நம்ம கஷ்ட - நஷ்டங்களை தெரிந்த, நம்ம ஊர்காரராக இருக்க வேண்டும். உங்கள் ஊர் வேட்பாளரை பற்றி நான் சொல்ல வேண்டுமா? ஆகையால் தாமரை சின்னத்தில் நீங்கள் ஓட்டளிக்க வேண்டும்.காந்தி, நாட்டின் மேம்பாடுதான் என் முதன்மையான குறிக்கோள் என, வாழ்ந்து காட்டினார். அதை பா.ஜ., நிறைவேற்றி வருகிறது. அவரின் லட்சியங்களை, திட்டங்கள் வாயிலாக பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.
பெட்ரோல், டீசலை வெளியில் வாங்கி கொண்டிருக்கிறோம். உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், வெளியில் வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது.அதற்கான செலவினங்கள் மற்றும் மத்திய - மாநில அரசு வரிகள் போன்றவற்றால், விலை உயர்வு ஏற்படுகிறது.தி.மு.க., சட்டசபை தேர்தலுக்கு முன், பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் என்றனர்; தேர்தல் முடிந்ததும் எதிர்க்கின்றனர். தி.மு.க., இரட்டை வேடத்தை விட்டு, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE