உத்திரமேரூர் ஒன்றியத்தில், இரு மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர், 73 ஊராட்சி தலைவர், 474 வார்டு உறுப்பினர் என, 571 பதவியிடங்களுக்கு, வரும் 6ல் தேர்தல் நடைபெற உள்ளது.
ஊராட்சியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆறு முதல் ஒன்பது ஊராட்சி வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.இதில், குறைந்தபட்சம் 100 ஓட்டுக்கு கீழ் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர், முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு விட்டமின் 'சி' வழங்க துவங்கியுள்ளனர்.வாக்காளரின் வீட்டுக்கு சென்று, 'மொத்தம் நாலு ஓட்டு போட, நாலு கலர்ல சீட்டு தருவாங்க. அதுல வெள்ளை கலர் சீட்டுல நம்ம சின்னத்திற்கு ஓட்டு போடுங்க' எனக் கூறி, பணம் தருகின்றனர்.
உள்ளாட்சி பதவிகளுக்கு நான்கு ஓட்டு என்பதை அறியாத வெள்ளந்தி வாக்காளர்கள், 'என்னப்பா... நாலு ஓட்டுனு சொல்லிட்டு, ஒரு ஓட்டுக்கு மட்டும் காசு தர. இப்டி ஏமாத்துறியே... மிச்சம் மூணு ஓட்டுக்கு எப்ப காசு தருவ' என கேட்கின்றனர்.அதற்கு அந்த வேட்பாளர்கள், 'நான் கொடுத்த பணத்துக்கு மட்டும், வெள்ளை சீட்டில் எனக்கு ஓட்டு போடுங்க. 'மத்த மூணு சீட்டுக்கு, என்னபோலவே மத்தவங்களும் வந்து பணம் தருவாங்க' என, அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் படாதபாடு பட்டு தலைதெறிக்க ஓடுகின்றனர்.