கூடலூர் : கூடலுார் வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வனத்துறையினர், அதிரடிபடையினர் மோப்ப நாயுடன் நேற்று களம் இறங்கினர்;

இரவு வரை புலி தென்படவில்லை.நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, பல குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'ட்ரோன்' கேமராவும் பயன்படுத்தப்பட்டது. சிப்பிபாறை வகையை சேர்ந்த, 'அதவை' என்ற மோப்ப நாயும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.புலியை சுட்டுப்பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது குறித்து, நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ் விளக்கம் அளித்தார். அதில், புலியை சுடுவதற்கு முன், அதன் உடலில் உள்ள வரிகளை வைத்து எவ்வாறு அடையாளம் காண்பது என, பயிற்சி அளிக்கப்பட்டது.

மசினகுடியில் சுற்றி வரும் ஆட்கொல்லி புலி, 'டி--23' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் உடலில் உள்ள வரிகளும், தானியங்கி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலியின் மூக்கு மற்றும் வலது கண்ணில் காயம் உள்ளது. இதை வைத்து, புலியை அடையாளம் காண்பது குறித்து விளக்கப்பட்டது.நேற்று மாலை, 7:00 மணி வரை புலியை தேடும்பணி தொடர்ந்தது. எனினும், புலி தென்படவில்லை.
தெப்பக்காடு - மசினகுடி சாலையில், நேற்று வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'கோவையில் இருந்து வன உயர் அடுக்குப் படை வன காப்பாளர்கள் நான்கு பேர் வந்துள்ளனர். இவர்களுடன், வன உழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நாளையும் (இன்று) தேடுதல் பணியை தொடர உள்ளனர்' என்றனர்.
ஊருக்குள் புலி வந்தது ஏன்?
வனத்துறையினர் கூறுகையில், 'தேடப்படும் புலிக்கு, 14 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக வன எல்லை கிராமங்களில் சுற்றி வந்துள்ளது. புலிகளுக்குள் வசிப்பிடம் தொடர்பாக சண்டை எழுவதுண்டு. மற்றொருஆண் புலியிடம் ஏற்பட்ட சண்டையில் தோல்வி அடைந்து, வனத்தில் இருந்து வெளியேவிரட்டப்பட்டிருக்கலாம். இதனால், வாழ இடம் இல்லாமல் கூட, கிராமங்களை ஒட்டிய புதர்களில் தஞ்சம் புகுந்திருக்கலாம்' என்றனர்.
வரி தான் அடையாளம்
மனிதரின் கைரேகை எவ்வாறு ஒரே போல இருக்காதோ, அதேபோல புலியின் உடலில் உள்ள வரிகளும், ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். கால் தடங்களும் (பக்மார்க்) வேறுபடும். புலிகள் கணக்கெடுப்பில், அதன் வரிகள், கால்தடங்களை வைத்து தான் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ஆட்கொல்லி புலியின் உடலில் உள்ள வரிகள், தேடுதல் குழுவினருக்கு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE