மும்பை: தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற ஓர் ஆடம்பர பொழுதுபோக்கு கப்பலில் முன்னதாக செல்வந்தர்கள் கலந்துகொள்ளும் மது விருந்து நடைபெற்றது.
இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பல செல்வந்தர்களின் மகன்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கொக்கைன், எம்டிஎம்கே, காரஸ், மேபிட்ரோன் உள்ளிட்ட போதை பொருட்கள் பலரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து ஆரியன் கான் உள்ளிட்ட பலர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் சிக்கியுள்ளனர். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் போதைப்பொருட்கள் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. பெரும்பாலும் அதிக செல்வம் படைத்தோர் மட்டுமே இவற்றை விலை கொடுத்து வாங்க முடியும்.
மும்பை ஸ்டார் ஹோட்டல்களிலும், ஆடம்பர பார்களிலும் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இதன் பின்னால் ஒரு பெரிய சர்வதேச சந்தை இயங்கிவருகிறது. இந்த போதைப் பொருள் விற்பனையில் கோடிக்கணக்கான பணம் புழங்கி வருகிறது. இவற்றை தடுக்க போதை பொருள் சிறப்புப் பிரிவினர் அவ்வப்போது சொகுசு பார்களில் ரெய்டு நடத்துவது வாடிக்கை.
இதேபோல தற்போது சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் சிக்கியுள்ளார். தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலிவுட் பிரபலங்களில் இருந்து பெரிய தொழிலதிபர்களின் வாரிசுகள்வரை பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது போதை பொருட்களை சப்ளை செய்ய இடைத்தரகர்களும் உண்டு.இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் கலாச்சாரம் பெருநகரங்களில் அதிகரித்து வருவதை அடுத்து இச்சம்பவம் சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.
போதை பொருள் தடுப்புக்காக 1985ஆம் ஆண்டு என்டிபிஎஸ் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறைக்கு கீழ் அடங்கும் இந்த சட்டம் மூலமாக போதைப்பொருள் தயாரித்தல், கடத்தல், விற்றல், பதுக்குதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்தும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 31-ஏ படி போதை வழக்குகளில் சிக்குபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு நீதிமன்றம் கருணை அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து விடுதலை அளிக்கிறது. சட்டப்பிரிவு 64-ஏ படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
போதைப்பொருள் வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு வியாபாரிகள்போல அதிக அளவு தண்டனை கிடையாது. இவர்களை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்க இயலும். 1985 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த போதைத் தடுப்புச் சட்டம், 1989, 2001 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE