சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எந்த அரசும் முன் வராது!

Updated : அக் 08, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் உருவான கட்சியும், அவரின் பெயரிலேயே ஆரம்பமான கட்சியும், 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதில் ஊழல்கள் மட்டுமே அதிகளவில் நடைபெற்று உள்ளன.அண்ணாதுரை முதல்வரானபோது பொதுப்பணி துறை சார்பாக, அவரது சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் சோபா, நாற்காலிகள்
 இது உங்கள் இடம்

க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் உருவான கட்சியும், அவரின் பெயரிலேயே ஆரம்பமான கட்சியும், 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதில் ஊழல்கள் மட்டுமே அதிகளவில் நடைபெற்று உள்ளன.

அண்ணாதுரை முதல்வரானபோது பொதுப்பணி துறை சார்பாக, அவரது சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் சோபா, நாற்காலிகள் போடப்பட்டன. இதை கண்டதும் அவர், அவற்றை உடனடியாக திருப்பி எடுத்து செல்ல உத்தரவிட்டார்.அண்ணாதுரை மறைவின்போது அவர் குடும்பத்திற்கு 3.5 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. தமிழகத்தில், கடன்பட்ட முதல்வராக இவர் மட்டும் தான் இருந்திருப்பார்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அண்ணாதுரையின் நுால்களை அரசுடைமையாக்கி, அவர் குடும்பத்திற்கு 75 லட்சம் ரூபாய் வழங்கினார். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி., 'உண்மையான காந்தியவாதி அண்ணாதுரை தான்' என பாராட்டினார்.அண்ணாதுரையின் பெயரை பயன்படுத்தும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள்,

அவர் வழி நடக்கவில்லை என்பது கொடுமை!முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீடு, நட்சத்திர ஓட்டல், கல்லுாரி, பண்ணை வீடு என 35 இடங்களில் சமீபத்தில், 'ரெய்டு' நடத்தி ஒன்பது சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.அவர், 654 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி வீட்டில் ரெய்டு நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை என்ன ஆயின என, யாருக்கும் தெரியாது.

லஞ்ச அதிகாரிகளையே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால், அரசியல்வாதியை தொடக் கூட முடியாது.அவரின் குற்றம் நிரூபிக்கப்பட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ... ஆட்சி மாறினால், அந்த வழக்கும் காணாமல் போய்விடும்.வீரமணிக்கு மட்டுமல்ல; எல்லா ஊழல் அமைச்சர்களுக்கும், ரெய்டு, வழக்கு போன்றவற்றால் எந்த பண இழப்பும் வரப்போவதில்லை; அரசுக்கு தான் செலவு ஆகும்.எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அவற்றை அரசுடமையாக்க வேண்டும். ஆனால் எந்த அரசும், இப்படியான ஒரு சட்டத்தை அமல்படுத்த முன் வராது.


தமிழர்கள் வரவேற்பர்!சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில், தமிழில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மற்ற தேர்வுத் தாள்களை திருத்தும் வகையில் மாற்றம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது; இது வரவேற்கத்தக்கது!

நம் மாநில மாணவ - மாணவியர் பயன் பெற்று, தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற புதிய நம்பிக்கையை, இந்த அறிவிப்பு உருவாக்கி உள்ளது.இதனால் நம் தாய் மொழி தமிழின் மீது, பிள்ளைகளுக்கு ஆர்வம் ஏற்படும். தமிழக அரசு பணியில், பிற மாநில மக்கள் சேர்வதை, இது ஓரளவிற்கு தடுக்கும்; நம் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.தாய்மொழியில் படித்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். டி.என்.பி.எஸ்.சி.,யின் புதிய உத்தரவை, தமிழர்கள் வரவேற்பர் என்பதில் சந்தேகம் இல்லை.


மாற்றி யோசிக்கலாமே!


சிவ சண்முகம், புதுச்சேரியிலிருந்து எழுதுகிறார்:

நஷ்டத்தில் இயங்கும் அரசு துறையை, மீட்டெடுக்கும் முயற்சியை தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். அதன் பின், லாபத்தை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியக்கூறு தென்படவில்லை என்றால், அந்த துறையை தனியார் மயமாக்குவதற்கு அரசு தயக்கம் காட்டக் கூடாது.

தனியார் மயமாக்குதல் சாத்தியப்படும் நிலையில், அரசுக்கு பல நன்மைகள் ஏற்படும். கடன் சுமை குறையும்; மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும்; வேலை நிறுத்த போராட்டங்கள் இருக்காது.தேசிய அளவில் முதன்முதலாக பேருந்து போக்குவரத்தை அரசே ஏற்று நடத்தியது, தமிழகம் தான்.முதல்வர் அண்ணாதுரை தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைந்தபோது, கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றினார்.

அப்போது தான்,பேருந்துகள் அரசுடைமையாக மாற்றப்பட்டன.அது, மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும், அரசுக்கு லாபம் ஈட்டி தரக் கூடியதாகவும் இருந்தது. இதனால், பஸ் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அளித்து, சிறப்பான நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக போக்குவரத்து கழகம், இழப்பு நிலைக்கு தள்ளப்பட்டது.இப்போது போக்குவரத்து கழகம் நஷ்டத்திலும், கடன் சுமையிலும் தள்ளாடுகிறது.

அதை, தனியார் மயமாக்கும் போது நிச்சயம் லாபம் ஈட்டும்.முதலில் கோவை, திருப்பூர், ஈரோடு, உதக மண்டலம் ஆகிய நான்கு போக்குவரத்து கழகங்களை மட்டும் தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு உட்படுத்தலாம்.நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை, அந் நிறுவனங்களுக்கு நியாயமான விலைக்கு விற்கலாம்.பஸ்சின் மதிப்பை விட வழித்தடத்தின் அனுமதிக்கு மதிப்பு அதிகம். அதை மேலும் அதிகரிக்கலாம்.

பேருந்து இயக்கும் அனுமதியை, 10 அல்லது 15 நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போக்குவரத்து மண்டலத்துக்கும், 20 - 25 பஸ் டிப்போக்கள் இருக்கும். எக்காரணத்தினாலும் அதை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது.அனைத்து டிப்போக்களையும், காலி இடமாக மாற்ற வேண்டும். இது தான் அரசுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கக் கூடிய பொன் முட்டையிடும் வாத்து.

அந்த இடங்களை, தனியாருக்கு குத்தகைக்கு விடலாம். அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, மக்களுக்கு விற்பனை செய்யலாம். இதன் வழியே, பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.அரசு, மாற்றி யோசித்து செயல்பட்டால், தமிழகத்தை கடனில்லா மாநிலமாக மாற்றலாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X