சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பல்கலையில் அடிக்கடி கிடா வெட்டு விருந்து!

Updated : அக் 08, 2021 | Added : அக் 04, 2021
Share
Advertisement
''வெள்ளை சட்டையா, காக்கி சட்டையா எது பெருசுன்னு பார்த்துடுவோமுன்னு மல்லுக்கட்டுறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''விஷயத்தை வெளக்கமா சொல்லும்...'' என கேட்டார், அண்ணாச்சி.''இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவை மொபைல் போனில, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - -எம்.எல்.ஏ., அருள் மிரட்டியதா, சமூக வலைதளங்கள்ல 'ஆடியோ' வெளியானது பா...''எம்.எல்.ஏ.,
டீ கடை பெஞ்ச்

''வெள்ளை சட்டையா, காக்கி சட்டையா எது பெருசுன்னு பார்த்துடுவோமுன்னு மல்லுக்கட்டுறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.

''விஷயத்தை வெளக்கமா சொல்லும்...'' என கேட்டார், அண்ணாச்சி.

''இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவை மொபைல் போனில, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - -எம்.எல்.ஏ., அருள் மிரட்டியதா, சமூக வலைதளங்கள்ல 'ஆடியோ' வெளியானது பா...

''எம்.எல்.ஏ., இத பத்தி டி.ஜி.பி., உள்ளிட்ட உயரதிகாரிகள்கிட்ட, இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தாரு... அவரை இடம் மாத்தணுமுன்னு கோரிக்கையும் வைச்சாரு... ஆனால் எதையும் போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டுக்கலை பா...

''இதுல என்ன காமெடின்னா, வழக்கமான துறை ரீதியான நடவடிக்கையாக, அந்த இன்ஸ்பெக்டரை பணியிடம் மாத்துறக்கு இருந்துருக்காங்க... எம்.எல்.ஏ., புகார் கொடுக்கவும், அந்த நடவடிக்கையக்கூட நிப்பாட்டிட்டாங்க பா...

''அரசியல்வாதியை பத்தி போலீசாருக்கு தெரியலை... என்ன நடக்க போகுதுன்னு பாருங்க என, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், 'படம்' காட்டுறாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.

''ஆட்சி மாறியதும், குடிநீர் பிரச்னை வந்துருச்சுங்க...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''மின்தடை வருமுன்னு தானே எதிர்பார்த்தா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''திருப்பூர், அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் அதை சுத்தியிருக்குற 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை ஆதாரமாக வச்சி தான், குடிநீர் வினியோகம் பண்றாங்க...''சட்டசபை தேர்தலுக்கு முன், பெரிய அளவுல குடிநீர் பிரச்னை ஏதும் இல்லை... தி.மு.க., ஆட்சி அமைஞ்சதும் குடிநீர் பிரச்னை தலைவிரிச்சு ஆடுதுங்க...

''அதாவது, மாசத்துக்கு இரண்டு முறை மட்டும் தான் குடிநீர் வினியோகம் பண்ணுறாங்கன்னா பார்த்துக்குங்க... இதனால மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...

''இந்த விஷயத்தை சரி பண்ண வேண்டிய உதவி நிர்வாக பொறியாளர், எதையும் கண்டுக்காம, பிரேமம் என்ற மலையாள படத்தை பார்க்குற மாதிரி இருக்காராமுங்க...''இன்னும் கொஞ்ச நாள் இப்படி நீடிச்சா, அப்பகுதியில பெரிய அளவுல போராட்டம் நடக்குமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''அடிக்கடி கிடா வெட்டு விருந்து, 'ஜோரா' நடக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''மதுரை காமராஜ் பல்கலையில, 'ஆனா, ஊனான்னா...' உடனே கிடா வெட்டி தடபுடல் விருந்து நடக்கறது சகஜமாகிடுத்து ஓய்...''கிருஷ்ணன் துணைவேந்தராக இருந்தபோ, 'நாக்' கமிட்டி ஆய்வு வெற்றிகரமாக முடிஞ்சதா சொல்லி, அங்கே இருக்கற தாவரவியல் பூங்காவுல கிடா வெட்டி, சமைச்சு, அதிகாரிகளுக்கு பெரிய விருந்தே நடத்தினா ஓய்...

''இது உயர் அதிகாரிகள் கவனத்துக்கு போனதும், கல்வி நிலையத்துக்குள்ள இந்த மாதிரி நடந்துக்காதீங்கோன்னு எச்சரிக்கை பண்ணிருக்கா ஓய்...

''ஆனா, தற்போது, சம்பள உயர்வு கிடைச்சதை கொண்டாடற வகையில, தற்காலிக ஊழியர்கள் சிலர், பல்கலை வளாக மலையடிவாரத்துல மீண்டும் ஒரு கிடா வெட்டு விருந்து நடத்தியிருக்கா ஓய்...

''பல்கலை பதிவாளருக்கு இது தெரிஞ்சதும், விருந்து நடத்துனவாளை அழைச்சு, ரொம்ப கோபமா எச்சரிக்கை பண்ணியிருக்கார்... இனிமேல பல்கலை வளாகத்துக்குள், 'கிடா வெட்டு' சம்பவம் நடக்கவே கூடாதுன்னு தடை வேற போட்டுருக்காராம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.நண்பர்கள் நடையை கட்ட பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X